Saturday, December 31, 2022

புத்தாண்டுப் பரவசம்.

புதுமைக்கு கொடிபிடிப்பதால்

பழமைக்கு பதட்டமில்லை.

பழமையின் விளைநிலமே,

புதுமையின் விளைச்சலாம்.

வேரின்றி செடிகள்

வெளியுலகம் காண்பதில்லை.

வெளியுலகில் காண்பதற்கு,

வேடிக்கை மட்டுமல்ல.

வாடிக்கை நிகழ்வுகளும்

தேடிப்பெறும் கனவுகளும்

கோடிச்சுகம் ஈட்டித்தரும்.

வேதனையும் சோதனையும்

வாடிக்கை ஆனாலும்,

ஆடிக் களிப்பதற்கு

ஆழ்மனமே மூலதனம்.

வாழ்க்கையின் கடிவாளம்

காலமது கைப்பற்ற,

காலத்தின் கடிவாளம்

காட்சிகளாய் நம்கண்ணில்.

வாழும்நாள் ஒவ்வொன்றும்

வாழும்வரை நம்வசமே.

ஆலமர நிழல்போன்று

அடர்ந்திடும் அன்புடனே,

அரவணைத்து வாழ்ந்திடுவோம்.

புத்தாண்டுப் பரவசத்தை

பகிர்ந்தளித்து மகிழ்ந்திடுவோம்!. 

  இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

ப.சந்திரசேகரன்



Greeting,in Retrospect

                  Happy New Year

To meet and greet,was once the way of life;

To greet from your seat is now right and rife.

Homes were once running hectic,with guests;

People are now sceptics,about crowded nests.


Home sweet home,was then a prevailing treat;

Work from home,is now the norm tying the feet.

When people were moving,our days were mobile;

With mobiles and blue tooth,our routine is fragile.


Then human touch kept our body and mind intact.

Today body and mind,do the touch screens, distract.

Towns and villages that bustled with buoyant vigour

Are knocked down by networks' night and day trigger.


All said and done,we have the best of benefits to stay;

Many exits are there,against the wobbles on our way.

Global gamuts flash before each one's mind frame,

Greeting us with gateways,to win over many a game.


     May the year 2023,buckle the good and bring in,THE BEST.

P.Chandrasekaran.











Saturday, December 24, 2022

Merry Merry Christmas

 



Christmas crystallizes the character of our life.

The candles held in our hands like spindles, 

Weave rays of light into wellspun radiance,

Enlightening our paths with love,mercy and hope.

It is not just a day celebrating a beaming birth.

It is a day that continues to take us forward,

On well set tracks,that transcend deviations

From a straight drive,ensuring the safety of souls.


Christmas characterizes our crystal clear goals,

That ask for arduous trips,meeting many tolls.

All simple days in our life,are our salient days

And all our salient steps are bound by a divine lace.

We congregate on this day,with our musical bands, 

To grab our creamy cakes,from the Lord's hands.

P.Chandrasekaran. 



  

Friday, December 16, 2022

மொழிக்கூத்து.

கறுக்கல்ல ன்னாலும்

காத்தால ன்னாலும்,

விடியல்ல ன்னாலும்

காலைப் பொழுதுதானே!

இத்தச்சோடுன்னாலும்

இம்மாம்பெருசுன்னாலும் 

அளவு அளவுதானே.

துப்புறவா இல்லேன்னாலும்

துளிகூட இல்லேன்னாலும்

இல்லாப்பாட்டுதானே.

ரவ்வோண்டுதான் இருக்குன்னாலும்,

கொஞ்சோண்டுதான் இருக்குன்னாலும்,

குறை குறை தானே!

ஆக்கம் கெட்ட கூவன்னாலும்,

கூறு கெட்ட குப்பாச்சின்னாலும்,

ஒதவாக்கரைதானே!.

கழிச்சல்ல 'போ'ன்னாலும்

காளியால 'போ'ன்னாலும்

போனா போனதுதானே.

அப்டிக்கா போனாலும் 

இப்டிக்கா போனாலும் 

போவசொல்ல வரசொல்லன்னு 

மாத்தி மாத்தி சொன்னாலும்,

எல்லாமே வழிக்கான

வாய்ச் சவடால்தானே!.

பொறக்கால வான்னாலும்,

பின்னாடி வான்னாலும்,

மறைக்கிற மார்க்கம்தான.

மொழியவச்சு கோலம்போட்டா

மூச்சுவச்ச இலக்கியம்.

மொழியவச்சு கூத்தடிச்சா,

பேச்சுவச்ச சமூகம்.

ப.சந்திரசேகரன்.

Friday, December 2, 2022

Forget or Forgive ?

If 'to forgive is to be divine'

To forget is to be vulpine.

Forgetting is born of

Memories flirting with events.

Forgiveness is nothing but

The freezing of fuming memories.


One cannot forgive men and matters

With memories heating up,to boil the past.

Dead woods are easier to burn,than green.

Who can vouchsafe they forget and forgive,

With a hindsight,harping on a heap of scars?


Neither,farsight means,being out of memories.

Memories,that drive on the roads to the future,

With a hard drive of files of the past,

Piled together,trigger self-start grudges.

To forget,or forgive is a furrow without ridges.


When we swear that we forget and forgive,  

We prepare to forgive,but pretend to forget.

To forgive is easier,because its pattern is farce.

To forget is hard,as scars are in memory's card.

But forgetting surpasses the gratitude code,

As forgiveness bypasses the forgetting mode.

P.Chandrasekaran.



Monday, November 28, 2022

At Ninety Eight.



        In honour of my esteemed senior most friend

                               Mr.Ththachari




It is fascinating fortune,to be ninety eight.

You are an exemplary man,with values right.

You would have had many a legal battle to fight.

You would have won them all on paths,straight.


To speak against wrongs,you never show fright;

You fight them all,with your voice as your might.

With the King maker of the Congress,in its limelight

You let your astute legal wings,take their flight.


I began to move towards you at the very first sight,

Because of your plain and simple manners,bright.

You are one among the few,with memories to bite,

Of the events of many struggles,at the freedom site.


I cherish your emotional bonding day and night,

With my love for you,in these lines,black and white.

P.Chandrasekaran.

Sunday, November 27, 2022

இல்லை இல்லை

விட்டில் பூச்சிக்கு,வீட்டில் இடமில்லை.

தொட்டில் குழந்தைக்கு,தோளில் சுமையில்லை.

கெட்டுப் போனவர்க்கு,கேள்விக்குப் பதிலில்லை.

முட்டுச் சந்திற்கு,மூன்று திசையில்லை.


திட்டித் தீர்த்தபின்,மொழியில் சுகமில்லை.

வட்டிக்கு வட்டியானால்,அசலுக்கு அழகில்லை.

ஏட்டிக்குப் போட்டியெனில்,குணத்தில் ஏற்றமில்லை.

பூட்டிய கதவிற்குள்,புன்முறுவல் பிறப்பதில்லை.


வேட்டிக்கறை மாறுவதால்,வேடங்கள் கலைவதில்லை.

நாட்டிற்கு ஒருபார்வை,நான்குதிசை பார்ப்பதில்லை.

வாட்டிடும் வரிகளினால்,வலிகளுக்கு வரியில்லை.

மாட்டிக்கொண்ட காளைக்கு,மாற்றுவழிப் பாதையில்லை.


பாட்டிசொன்ன கதைகேட்க,பேரன் பேத்தியில்லை.

ஆட்டிவைக்கும் காலனுக்கு,ஆட்டத்தில் களைப்பில்லை.

நீட்டிப் படுக்கையிலே,நெஞ்சத்தில் நடுக்கமில்லை.

கூட்டிக் கழிக்கையிலே,நிறைவில்ஓர் குறையுமில்லை.

ப.சந்திரசேகரன்.




Saturday, November 19, 2022

At the ageing desk

Like the supple limbs of a kid,

My fingers wobble weakly at the ageing desk.

But my"listen to me!"attitude is fairly firm.

When I fold my hands before God

He sees a revised version of my childhood.

Fears of tender limbs are linkage markers

Of  learning to walk and walking to relearn.

Memory is not only the chivalry of childhood,

But also the cringing cowardice of ageing.

What would anyone gain from sucking

The essence of memory,from an Alzeimer mind,

Or rattling the nerves of a Parkinson pet?

'Home alone'days are the hallmark of ageing.

All this becomes a bad dream if the ageing desk

Has enough files to deal with and dispose

And load fresh files,to the hard disk of the mind.

P.Chandrasekaran 


Thursday, November 10, 2022

பத்தாது பத்தாது.

பணத்தாசைக்கு

கல்லா பெட்டிகள்.

ஒத்தாசைக்கு,

அல்லக் கைகள்.

அரசாசையில்

கருப்பாடுகள்.

நப்பாசையில்

நாற்காலிகள்.


பத்தாது எனச்சொல்லி

பித்தாகும்  பகடையிலே

பணத்தால் பதவிகண்டு

பதவியால் பணம்காண்பர்.

தேசியக்கதை பேசும் 

நேசமற்ற அரசியலில்

பூசுவர் பொய்ச்சுவர்கள்,

மெய்யெனும் கலவைகொண்டு.

ஊசிக்குள் நூல்நுழையும்

ஊடகக் கதையெல்லாம்,

பாசிச பெருந்தொற்றை,

பக்குவமாய்ப் பரிமாறும்.

ஈரைப் பேனாக்கி

பெருச்சாளி பேன்விழுங்க,

பெருத்துவரும் பெரும்படைகள்

பறிக்குமாம் வேரோடு

அறம்போற்றும் அரசுமுறை.

பத்தாது பத்தாது

பசிக்குணவு பத்தாது.

கத்தாழை காட்டிற்குள்

எத்தழையும் தழைக்காது.


ப.சந்திர சேகரன்.





 



Monday, November 7, 2022

மைய்யும் மெய்யும்

வெண்மையைத் தேடுதல் நன்மையைக் கூறுமோ?

நன்மையைத் நாடுதல் வெண்மையை வகுக்குமோ?

கண்மைய் இட்டபின் கலங்குவோர் பலருண்டு;

உண்மையில் கண்மைய்யில் களங்கம் இல்லை.


ஆண்மையும் பெண்மையும் அழகினில் மயங்கிட,

தொண்மை அழகோ தொடுந்தூரம் அழகோ?

அண்மையில் காணுதல் உண்மையைக் கூறுமோ?.

திண்மையைத் திரட்டுதல் திறமையை கூட்டுமோ?


விண்ணைத் தொடுதலில் வீம்புகள் விரிந்திட,

மண்ணியல் மாண்புகள் மாந்தர்தம் பாதையில்,

புண்ணியப் பூக்களாய் புண்படு முட்களாய்

விண்ணையும்,மண்ணையும்,விடைகளில் பூட்டும்.


எண்ணியபடி எத்தனம் ஏணிப்படி ஏறியே,

தன்னிலை தரித்துநல் தகுதிகள் பெருக்கும்.

ப.சந்திரசேகரன்.





Sunday, October 30, 2022

ஒரு சொல் பல கண்ணாடி.

  முகம் காட்டிடும் கண்ணாடி என்றா லும்,கண்ணாடிகளின் தன்மைக்கேற்ற வாறு,முகத்தின் சாயல்கள் மாறக் கூடும்.சொல்லும் அப்படித்தான்!.ஒரு சொல்,ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள் தரக்கூடிய சூழலில் சொல்லின் பொருளை ஒவ்வொருவரும் பல கண்ணாடிகளாக மாறி, அவரவர் பாணியில் பிரதிபலிக் கின்றனர்.

"சொன்னது நீதானா 

சொல் சொல் என் உயிரே"( நெஞ்சில் ஓர் ஆலயம்)

என்று சொன்னதை உறுதிப் படுத்த,உலுக்குவதும்,

"அவளா சொன்னாள் இருக்காது அப்படி எதுவும் நடக்காது.

நம்ப முடியவில்லை"(செல்வம்)

  என்று உறுதிபட உரைப்பதும், "சொல்லால் அடித்த சுந்தரி 

மனம் சுட்டுவிட்டு போனதென்னடி"(சின்ன கவுண்டர்)

 என்று மனம் உழன்று தவிப்பதும், வித்தியாசமான மனக் கண்ணாடி களின் விரிவரை விளக்கங்களே! இதே சொல் குழப்பமே,

"நான் என்ன சொல்லிவிட்டேன்

நீ ஏன் மயங்குகிறாய்

உன் சம்மதம் கேட்டேன்

ஏன் தலை குனிந்தாயோ?"( பலே பாண்டியா)

என்று வினா எழுப்பி,வேறு ஒரு நிலைப்பாட்டில் 

"உன்னைச் சொல்லி குற்றமில்லை

என்னைச் சொல்லி குற்றமில்லை

காலம் செய்த குற்றமடி

கடவுள் செய்த குற்றமடி"( குலமகள் ராதை)

என்று புலம்புவதும் மனக் கண்ணாடியின்முன்,சொல்லின் பல பாவங்களின் வெளிப்பாடே!

  அதே நேரத்தில் 'தாய் சொல்லை தட்டாதே'என்றும் 'மனைவி சொல்லே மந்திரம்'என்றும்'சொன்னபடிக் கேளு மக்கர் பண்ணாதே'என்றும் பலர் உபதேசம் செய்தாலும்,எதையும் பொருட்படுத்தாது,காதலிக்கு மட்டுமே நிலவு வழி தூது சொல்வோரில்,

"என் தலைவியிடம் சென்று

நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே 

நேரில் நடந்ததெல்லாம் வேடிக்கை பார்த்துவிட்டு

நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே"(குறவஞ்சி)

  என்று நிலவுக்கண்ணாடி முன் நின்று கெஞ்சுவோர்,பலருண்டு.

  பெண்மையின் பரிதவிப்பில் பல நேரம் தடுமாறி,

"சொல்லவா கதை சொல்லவா

நடந்த கதை சொல்லவா

பிறந்த கதை சொல்லவா

வளர்ந்த கதை சொல்லவா

பெண் என்று பூமியிலே

மலர்ந்த கதை சொல்லவா"  (நவராத்திரி)

  என்று வாழ்க்கைப் போர்க்களத்தின் வாட்டங்களைப் பகிர்வோரின் கதை களைக் கேட்கையில்,சொற்களின் சங்கடங்கள் நம் சிந்தனையை சிதைப் பதுண்டு.

   நொடிக்கொருமுறை கண்ணாடியில் முகம் பார்க்கத்துடிக்கும் பாணியில் 'சொல்லத்துடிக்குது மனசு'என்று வேட்கையை வெளிப்படுத்துவதும், முகம் பார்க்கத் தயங்குவது போல,

"சொல்லத்தான் நிறைக்கிறேன் உள்ளத்தால் தவிக்கிறேன்"(சொல்லத் தான் நினைக்கிறேன்)

  என்று,சொல்லாமலே சோகத்தில் சுகம் காண்பதும்,'சொன்னால்தான் காதலா'என்று சவால் விடுவதும்,கண்ணாடிக்குள் சிக்காத சொற்களாய் கபடி ஆடுவதைப்பற்றி,சொல்லிமாளாது.

"ஒரு பொய்யாவது சொல் கண்ணே,

 உன் காதலன் நான்தானென்று;

அந்த சொல்லில் நான் உயிர் வாழ்வேன்"(ஜோடி)

  என்று சொல்லெனும் மாயையில் காதலுக்கே சுருக்குக்கயிறு பின்னு வோரும் உண்டு. 

"உள்ளதைச் சொல்வேன் 

சொன்னதைச் செய்வேன்" (படிக்காத மேதை)

என்றும்,

"கண்டதைச் சொல்லுகிறேன்

 உங்கள் கதையைச் சொல்லுகிறேன்"

 (சில நேரங்களில் சில மனிதர்கள்)

என்றும் கூறி,

"சொல்லுறத சொல்லிபுட்டேன்

செய்யுறத செஞ்சுடுங்க

 நல்லதுன்னா கேட்டுக்குங்க 

கெட்ட துன்னா வுட்டுடுங்க" (பாண்டித் தேவன்)

  எனும் பாணியில் தப்பித்துக் கொள்வோர் பலர்.

 "பேரைச்சொல்லவா 

அது நியாயமாகுமா"( குரு)

 என்றும்,

"பேரைச் சொல்லலாமா 

கணவன் பேரைச் சொல்லலாமா" ( தாயைக் காத்த தனயன்)

 என்றும்,பெண்கள் சில நேரங்களில் மறுதலிப்பதுண்டு.ஆனால் அதே பெண்கள்,

"சொல்ல சொல்ல இனிக்குதடா 

முருகா!உள்ளமெலாம்,உன் பேரை,

 சொல்ல சொல்ல இனிக்குதடா" என்றும்,(கந்தன் கருணை)

"கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்ல சொல்ல

 கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல" (வெண்ணிற ஆடை)

என்று,பேரை சொல்லிச் சொல்லி, பேரானந்தம் பெறுவதுண்டு.

"சொல்லாதே யாரும் கேட்டால்

எல்லோரும் தாங்கமாட்டார்"(சொர்க்கம்)

என வாய்க்கு திண்டுக்கல் பூட்டு போட முயன்றாலும்,

"சொல்லாமலே யார் பார்த்தது

நெஞ்சோடுதான் பூப்பூத்தது"(பூவே உனக்காக)

 என்று,முகம்காட்டா கண்ணாடிகளைக் கடந்து,முகத்தில் முகம் பார்ப்பது போல காதல் அகத்தில்,சொல்லப்படாத சொற்கள்,பூட்டை உடைத்துக் கொண்டு மனக் கண்களுக்கு மகுடி வாசிப்பதுண்டு.

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை

வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. 

 என்றார் வள்ளுவர்.

  "ஒரு சொல்லாலே வீணானதே வாழ்க்கை"

  எனும் கலைஞரின்'ராஜா ராணி'திரைப்படப் பாடல்போல,சொர்க்கம் படைக்கும் சொற்கள்,சற்றே இடரினாலும் எவ்வளவு விரைவில் நரகமாகி விடுகின்றன.

    தாம் சொல்லும் சொல்லை வெல்லும் மற்றொரு சொல் இல்லை என்ப          றிந்து வடுக்களைத் தோற்றுவிக்கும் நாவின் சொற்களைத் தவிர்த்து, முள்ளில்லா ரேஜாக்களா கவும் கல்லும் கனியாகும் கவின்மிகு மொழியாகவும் சொற்களைக் கூறுவதே கண்ணாடி களின் தரமுயர்த்துமாம்.ஒரு கல் ஒரு கண்ணாடியை தகர்க்குமாயின் ஒரு கடுஞ்சொல் பல மனக் கண்ணாடி களில் விரிசல் காணுமாம்.

                                             =≈=≈=≈=≈=0≈=≈=≈=≈=≈

 




Sunday, October 23, 2022

இரட்டைவால் குருவி

                வால் ஒன்று.

விசாரணை தோற்கையில்

இரகசியம் வெல்லும்.

நோயின் வாயிலில்,

நோயாளி குற்றவாளி.

அடுத்துக் காப்பவர் 

கெடுத்துக் காப்பரோ?

மருத்துவம் காக்குமோ,

மாறா நோயினை!

நோயாளியைப் பார்க்காதவர்

நோயைப் பார்த்தனரோ?

கண்டதைச் சொல்வது கலவரம்.

காணாததைச் சொல்வது நிலவரம்.

நோயாளி தின்றதால்,

நோய் வென்றது.

தின்றது வென்றதால்,

தின்றவரே குற்றவாளி.

காப்பாளர் காத்தது,

நோயா,நோயாளியா?


அடுத்துக் காப்பவர் 

கெடுத்துக் காப்பரோ?

சுட்டிக் காட்டுமோ 

விசாரணை அறிக்கை?

சுட்டிக் காட்டுதல் 

சட்டம் ஆகுமோ?

பட்டியலில் பெயர்வர

காத்வர்  குற்றவாளியோ?

நரிகள் நால்வரோ,

நால்வரில் ஒருவரோ?

பரிந்துரை இல்லா

விரிவுரை என்பது,

அறிந்ததைக் கூறுமோ 

ஆய்ந்ததைக் கூறுமோ?

இறந்தவர் தேதிகள்

மறந்ததன் மாற்றமோ?

மறைந்தவர் மறந்தோர்,

மறந்தனர் தேதியை!

மறந்தது குற்றமோ,

இரகசியம் குற்றமோ?

         வால் இரண்டு.

குருவிகள் பறக்கையில் 

சுடுவது முறையோ?

குருவியைச் சுடும்வழி 

மனிதரைச் சுடுவரோ?

கலகம் பிறந்திட 

நியாயம் பிறக்கும்.

நியாயம் நிறுவுதல் 

கலகம் ஆகுமோ?

சமூக விரோதிகள்,

சதியில் பிரதிகள்.

சமூகம் காத்தல்,

சமூக விரோதமோ?

சுற்றுச் சூழல் 

காப்போர் தம்மை,

பற்றும் தீயென 

பற்றிட வைத்தோர்,

இரகசியச் சதியினர்.

ஓடும் மக்களைத் 

தேடிச் சுடுதல்,

வாடும் பயிரினை 

பறித்திடல் போலாம்!

தண்டனை தருவோர் 

குண்டர்கள் ஆகிட,

குண்டர் சட்டமே, 

குற்றம் ஆகுமோ?

கேடுகள் புரிவோர் 

அனைவரும் கேடிகள்.

வெளிப்படைச் செயலிலும் 

விடுபடும் இரகசியம்!.

எய்தவர் வசமென,

அம்புகள் கூறுமோ?

எய்தது இங்கே 

ஆணையோ சேனையோ?

ஆணை இட்டது 

அமைச்சரோ காவலோ? 

குற்றம் சாட்டும் 

விசாரணை அறிக்கை,

சுட்டிக் காட்டுதல் 

சுட்டதோர் செயலெனில்,

சுட்டது சேனையோ,

சேனைக் கடிவாளமோ?

விசாரணை தோற்கையில்,

இரகசியம் வெல்லும்!

ப.சந்திரசேகரன்.





Thursday, October 13, 2022

The Political Priest.

Listen to me;I am here to preach,

'One is for all and not all is one'.

Did you hear my exhorting words?

They mean more for you than for me.

Division gives you an identity.

Scriptures may cause ruptures;

But they are true to the dividing walls.

Paint your walls with your favorite colour

That vertically splits you from the horizontal lot.

Even if you lie under the same roof with others,

Keep your bifurcation as belligerent as possible.

Unity is a curse when identity is the vital verse.

Block every direction with your bulky boulders.

It is your own portal with its logo and language 

That should plunder and encroach all others.

Listen to me,I am your political priest.

Reign or ruin I am here to lead you at all times.

Fine or pain you just have to quote my rhymes.

Volumes will matter more for you than values

Let your colour of identity,lynch all other hues.

P.Chandrasekaran.


Tuesday, October 4, 2022

Tears

The poor have a bucket full of tears,

Drawn from the wells of their poverty.

Lovers carry their loads of tears of

The expectation and evacuation of love.

Rich men's tears are a round the clock flow,

Falling upon the corridors of currencies.

Farmers' tears are formed of failed crops.

Covid tears are of a morbid kind.

Doctors who see the happening of death 

Everyday in their own caring hands,

Watch their eyes,dried of patient's tears.

More genuine tears are those of kids, 

Crying for milk and for the pain of a kind 

Not fit for their untrained mind to express.

Never true tears,belong to the political tribe

Whose crocodile version fills the canny side.

God who has let the whole barter of tears

Take shape in drops and torrents,  

Keeps blinking,not knowing whether 

To laugh at his lost species,or lie low

Over a failing mankind,living in silly haste, 

Ignoring the value and width of life's taste.

P.Chandrasekaran.




Monday, September 26, 2022

குண்டுகளும் திண்டுகளும்

திண்டுக்குக் காத்திருப்போர்

குண்டுகள் வீசுவர்,

குண்டுச் சட்டிக்குள்

குதிரைகள் ஓட்டிக்கொண்டு.

நெஞ்சின் நச்சுதனை

நெருப்பறியுமோ நீரறியுமோ?

வஞ்சகமே அரசியலின்

வாழ்நாள் கனவென்று,

படிவர்ண நிறம்போற்றி

பகைவளர்க்கும் பதர்முன்னே,

மிஞ்சாத காலமிட்டு

குண்டுகளின் புகையகலும்;

கூன்பிறையின் வெளிச்சத்தில்,

குண்டுகள் வீசியோரை

கண்டிடுவோம் தெளிவாக!.

மண்டிடும் குழப்பங்களின்

மாற்றுவழி அரசியலை,

குண்டுகட்டாய் தூக்கிவந்து

குறிவைத்து கருவறுக்கும்,

நிலமது தமிழகமாம்!.

கண்டிப்பாய் ஆள்வோர்க்கு,

குண்டுகளும் திண்டுகளும்

முண்டங்களின் முகவரியே.

ப.சந்திரசேகரன்.






Thursday, September 22, 2022

விமர்சனங்கள்

விளம்பரம் தேடுவோர்க்கு,

விமர்சனங்கள் இலவசம்.

கிளம்பிடும் கருத்துக்கள்

கீரல்களின் பரவசம்.


 'நீதிக்குப்பின் பாசம்'

'பாதிக்குப்பின் மோச'மெனும்

ஒற்றைவரி விமர்சனத்தால்,

தேவரின் படத்திற்கு,

வசூலில் வறட்சியில்லை.


'தாய் மகளுக்குக்கட்டிய தாலி'

'வெட்கக்கேடு'எனும் கேலி,

கக்கத்துக் குழந்தையென

கட்டிக்கொண்ட ரசிகர்களை,

தட்டித் தடுக்கவில்லை.


அக்காலத் திரையரங்கம்,

கீற்றுக் கொட்டகையோ

தகரக் கொட்டகையோ,

நான்குவார ஓட்டத்தில்

நாலுகாசு பார்த்துவிடும்.


சமூகக் கூடமென

தரைடிக்கட் கூட்டத்தின்,

அமோகக் கலெக்ஷனில்

ஆனந்தம் பரப்பியது,

ஆங்காங்கே டாக்கீஸ்கள்.


ஆனாலும் இன்றோ,

ஒருநாள் நிறைந்தாலே

டிஜிட்டல் அதிசியமாய்,

'வெற்றிநடை'போடுதிங்கே,

ரீல்சுற்றா திரைப்படங்கள்.


விமர்சனக் காய்ச்சல்கண்டு

கம்மர்சியல் தோல்வியிலே,

கதிகலங்கி நிற்கிறது 

நிழலுலக நிசமெல்லாம்.

பழியேற்கும் ஊடகங்கள்!


நல்லதைக் கொண்டாடு;

அல்லதை அலசாமல்,

அழுக்கு மொழிபேசாமல்,

அடிநெஞ்சின் அறிவுரையை,

ஆட்கொள்ளல் பண்பாடு.


பலகோடி பணம்போட்டு,

அலைக்கழிக்கும் உழைப்பினிலே

படைத்ததோர் படக்கோட்டை!.

இலகுவாய்த் தகர்ப்பதிலே

நிலைக்குமோ சந்தோஷம்?


குத்துதல் முறையாமோ,

குறைப்பிரசவ விமர்சனமாய்?

கத்துக்குட்டிகள் களமிறங்க,

கறைபடுமோ கருத்தாய்வு?

ப.சந்திரசேகரன்.



.





Thursday, August 25, 2022

"Oh my freebies"

These are days marking a crucial phase,

Muting social justice,by mauling its face.

Social justice wants to be a honey bee,

Giving its honey,always as a freebie.

For long,freebies have been in vogue.

Now,new voices name them,as rogue.

Of freebies,man has many tales to tell; 

Those,fanning the frowning voices,to yell.


The rich man hates the poor for no reason.

May be the poor man's food is his poison.

Call them election doles,or political roles,

It is freebies,that muster the poor,on their rolls. 

When the rich keep flying their kites high, 

The poor look up the skies,with their skins dry.

Vested interests deny waters,to freebie paper boats,

To have the whole waters,for their greedy cargo floats.

P.Chandrasekaran 







Saturday, August 20, 2022

திராவிடத் தோரணங்கள்

"அச்சம் என்பது மடமையடா;

அஞ்சாமை திராவிடர் உடமையடா"

  என்று'மன்னாதி'மன்னன் திரைப்படத்திற்கென பாடல் வரிகளை கவியரசு கண்ணதாசன் படைத்திருந்தாலும்,அதற்கு முன்பே வள்ளுவர்,

அஞ்சுதல் அஞ்சாமை பேதமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில் 

  என்று,அறியாதார் எதற்கும் அஞ்சார்;ஆயினும் அறிஞர்கள் அஞ்சுவதற்கு அஞ்சுவர்,எனும் பொருள்பட எழுதிவைத்தார்.பின்னர் கண்ணதாசனே எம்.ஜி.ஆரின் 'பணத்தோட்டம்'திரைப்படத்தில் வரும்''என்னதான் நடக்கும் நடக்கட்டுமே''பாடலின் இடையே

"மனதிற்கு மட்டும் பயந்துவிடு

தன் மானத்தை உடலில் கலந்துவிடு

இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு

இரண்டினில் ஒன்று பார்த்துவிடு"

  எனும் கம்பீரச்சொற்களால் மனசாட்சி,தன்மானம்,போராட்டக்களம் காணும் மாண்பு,ஆகியவற்றை திராவிடத் தோரணங்களாக்கினார்.

  திராவிடம் எனபது தமிழ் மண்ணின் தனிப்பெரும் அடையாளம் மட்டுமல்ல; அது தமிழரின் பாரம்பரிய பெருமை யின் முத்திரை.அவர்தம் உணர்வு களின் உள்ளலங்காரம்.மனசாட்சியின் மகுடம்.சமூக நீதிக்குரல் களின் ஒலி பெருக்கி. சமத்துவ சிந்தனையாளர்க ளின் சந்திப்பு மேடை. சாதி சமய மேலாதிக் கங்களின் சதுரங்க வேட்டையை சரித்து வீழ்த்த வல்ல, சரித்திர பிரம்மாண்டம்.

   இவை எல்லாவற்றையும் கடந்து இன்னொரு மாபெரும் கண்ணியம் திராவிடத்திற்குண்டு.அதுதான் அரசியல் எதிரிகளையும் அளவோடு அரவணைக்கும் அறிவார்ந்த நிலைப்பாடு.இது,தந்தை பெரியாரின் காலத்திலேயே,அடர்ந்த கருத்து வேறுபாடுகளுக்கிடையே,அவருக்கும் அவரது திராவிடத் தெளிவுகளுக்கு முற்றிலும் முரண்பட்டு,குலத்தொழில் கல்விக்கு குரல் கொடுத்த,மூதறிஞர் என்றழைக்கப் பட்ட ராஜாஜிக்கும், இடையே நிலவிய,கரம்பற்றுதலில் காணப்பட்டது.  

     ஊடகங்கள் ஊட்டம் பெற்றுவரும் இன்றைய காலக்கட்டங்களில், முகநூல் நட்புகளும்,கீச்சக பின் தொடர்பாளர்களும் ஒரு புறம் சாதி மதம் கடந்து முகம் காணா நட்பு பாராட்டி,மறுபுறம் மனக்கசப்பையும் கொட்டித் தீர்க்கின்றனர்.திராவிடத் தின் பல நிறத்தோரணங்களில் முதன்மையான மொழித்தூய்மை, தனது இயல்பான முகப்பினை புறக்கணித்து,பலரையும் முகம் சுளிக்கச்செய்வதை,பரவலாக பதிவுகளில் பார்க்கமுடிகிறது.

   பேரறிஞர் அண்ணா,கலைஞர் போன்றோர்,சொல்லாலும் எழுத்தாலும் தமிழின் தரமுயர்த்தி திராவிடத்தின் மொழித்தோரணத்தை தமிழ் மண்ணுக்கு நிரந்தர காணிக்கை யாக்கினர்.இன்று தமிழ் மொழியினை மாசு படாமல் காப்பது,திராவிடம் பேணும் அனைவரின் தலையாய கடமையாகும். 

   திராவிடம்,இறைவன் இல்லை என்றோ,அல்லது இறைவன் வேண்டா மென்றோ,ஒருபோதும் முழங்கிய தில்லை.தனிமனித நாத்திக நிலைப் பாட்டிற்கு,நான்கு திசைகள் உண்டு. அவை முறையே,அறிவின் ஊக்கம், மேல்சாதி வன்மத்தின் தாக்கம், மதவாதத்தின் மடமை, வழிபாட்டு முறைகளின் வசதியான வரைவுகள். இந்த நான்கு திசைகள் திராவிடத்தின் சிலரை நாத்திகத்தின் பால் வசீகரித் திருக்கலாமே தவிர,திராவிடமே முழுமையாக இறைவனைப் புறக் கணித்து பயணிப்பதாக பறைசாற்ற இயலாது.

  ஆனால்,இறைவனின் பெயரால் மனிதனைப் பிரித்தாளும் இழிநிலைச் செயல்பாடுகளை,எதிர்த்துப்போரிட்டு, வர்ணபேதங்களுக்கும் மடமை களுக்கும்,சவக்குழி தோண்டித் தோரணம் கட்ட திராவிடம் தொடர்ந்து தூண் அமைக்கிறது. இவற்றுக் கிடையே,கால இடைவெளியில், உலக ளாவிய பொருளாதாரமும், தொழில் நுட்ப மாயவலைகளின் பின்னலூட் டமும் திராவிடத் தோரணங்களுக்கு நவீன அலங்கார வடிவங்களை புகுத்தத் துடிக்கின்றன.  

   நிற,இன சிந்தணைகளை பின்னுக் குத்தள்ளி,சமத்துவ அடித் தளத்துடன் சமூகக்கட்டமைப்பை உயர்த்துவதே திராவிட மேலாண்மை.திராவிடச் சித்தாந்தம் ஒரு கடிவாளம். அது எப்போது இறுகவேண்டும்,எப்படி இருக்க வேண்டும் என்பது,கடிவாளம் யார் கையில் உள்ளது என்பதைக்காட் டிலும்,சுற்றி நடக்கும் சம்பவங்களுக் கேற்ப இயக்குபவர் வசம் கடிவாளம் இருக்கவேண்டும் என்பேத முக்கிய மாகும்.

    திராவிடச் சமூகத்தின் நிகழ்காலத் தேவைகளைத் திறனுடன் ஆய்ந்து அவைகளை வென்றெடுக்க எதிர் சித்தாந்த சிற்பிகளின் கரம் பற்று வதால் திராவிடம் களங்கப்படப் போவ தில்லை.ஆனால் எதிர்மறைச் சித்தாந் தங்கள் வளராமல் தடுக்கும் முயற்சியில் அச்சித்தாந்தங்களை தாங்களே தத்தெடுக்கலாம் என்று திராவிடம் கருதும் பட்சத்தில் யானை தன் தலையில் தானே மண்ணை வாரி இறைக்கும் பழமொழிக்கு இரையாகி சகதிக்குள் விழுந்த கதையாகும்.

   திராவிட மாடலுக்கு புதிய தோரணங் கள் தேவையில்லை.அதன் வேர்கள் வலுவாய் ஆழப்பதிந்து ஆண்டுகள் பலவாயிற்று.திராவிட மரத்துக்கு வேரூன்றியவர்களுக்கும், அது செடி என முளைக்கையில் நீரூற்றியவர் களுக்கும்,பின்னர் அது வளர்கையில் அதனை வெட்டிவீழ்த்த முயல்பவர் களின் மூர்க்கச் செயல் களுக்கு முடிவு கட்ட தொடர்ந்து போராடுபவர்களுக் கும்,திராவிட மரம் சமூக நீதியில் சாகா நிலை பெற்று,சந்ததிகள் பலவும் இளைப்பாற,சரித்திர நிழல் படைக்கும் மாடலாகும் என்பதெல்லாம்,காலக் கப்பல்களின் கலங்கரை விளக்கங் களே.திராவிடமரம் இன்று திராவிட மாடலானதே தவிர,அதன் நிழலின் அருமை நீங்கா நன்மைகளின் நினைவுறுத்தலே!.

   சயமரியாதை,சமத்துவம்,சமூக நீதி,சாதிமத புறக்கணிப்பு எனும் நான்கு தோரணங்கள் கொண்ட திராவிட மாடலை தொடர்ந்து முன்னுக்குச் செலுத்த யாரெல்லாம் நடிப்பின்றி நிசமாகத் தோள் கொடுக்கின்றனரோ, அவர்கள் அனைவருமே திராவிட மாடலின் பிரதிநிதிகளாவர்.மனிதருக்கு பல்லக்கு தூக்க விரும்பாத எவரும் திராவிட மாடலுக்குத் தோரணம் கட்ட தோள்தரலாம்.

                        ≈===/////=======////=======





Sunday, August 14, 2022

இந்தியா எழுபத்தைந்து.




{இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்}

               ஆகஸ்ட் 15,2022

--------------------------‐------------------------------

எனக்கின்று வயது எழுபத்து ஐந்து.

இணந்துவா என்னுடன்,நீயும் இசைந்து.

மூவர்ணக் கொடியை நீவணங்கும் நேரம்,

நாவினில் உண்மைக்கு,நீட்டாதே தூரம்.


வரலாறு மாற்றும் வழிமறந்தோர் வாக்கு,

பெருவிரல் தாழ்த்தியே நீஇன்று நீக்கு.

சளைக்காமல் போராடி பெற்றநல் சுதந்திரம்

அளப்பினில் மாற்றுதல் அவரவர் தந்திரம்.


'புதியதோர் உலகம்'என்பதிங்கு புதினம்;

விதியை மாற்றிட,விரைந்திடு நீ தினம்.

பழமையும் புதுமையும் கலப்பதே மானுடம்;

முழுமை இந்தியா,முகப்பினில் மானிலம்.


அவரவர் உரிமையைக் காப்பதே ஒன்றியம்.

அனைவரின் குரலில்,அறவழி வென்றிடும்.   

ப.சந்திரசேகரன்

Tricolours of Independence.


                         

                            (Happy Independence day)


         15th August,2022.

Freedom is magnificently malleable.

It keeps expanding from the embryo, 

Gaining space to garner growth.

Independent India is an yielding ground;

It gives a space for all,to heal and hound.

From Silver to Gold and then to Platinum,

Years have been both elastic and extensive.

Growth cast over decades seven and five,

Cannot have its claims being shrunk into

A little spell of lollipops and lulling songs.

Flags as DPs and home symbols,are great.

But the fruits of independence kept

In a meshed basket,made mainly of

Ductile Silver,Gold and Platinum,

Should reach,each and every home,

Besides giving the homeless,a home.

India will further and further be happy, 

When her flag as DP,unfolds the sight of

Celebration of equity,equality and justice,

As its three colours,of a colour-ridden society.

P.Chandrasekaran.







Wednesday, August 3, 2022

வர்ண நஞ்சு

'மனிதரில் இத்தனை நிறங்களா',

இது ஒரு திரைப்படத் தலைப்பு.

ஒருவர்ண ரத்தம்,பலப்பல பிரிவா,

என்ற நினைப்பே,இருளின் மலைப்பு.

இந்தியக் கொடியின் வர்ணங்கள் மூன்று;

பிரிவினில் ஒற்றுமை என்பதன் சான்று.


வானத்து வில்லின் வர்ணங்கள் ஏழு;

பானைச் சோற்றின் பதமென வாழு.

சாதியின் வர்ணம் நான்கெனும் கூற்று

வீதியில் தூக்கி வீசுவோர் போற்று.


ஆதி தோற்றம்,ஒன்றெனும் தாயத்தில்,

பாதியில் நுழைந்தோர் பகடை ஆடினர்.

வண்ணத்து பூச்சி இறக்கைகள் பறித்து

எண்ண நூலால் இழைகள் பிரித்தனர்.

வேதமும் வாதமும் மோதிடும் வேளையில்,

வர்ண நஞ்சினை வீழ்த்திடும் மானுடம்!

ப.சந்திரசேகரன்.







Friday, July 29, 2022

எதிரும் புதிரும்

எலிகளின் பொந்துகளில் 

பாம்பிற்கு இடமில்லை; 

பாம்புகள் படையெடுக்க,  

எள்ளுக்கு எலிகளில்லை 

 

உழக்கு  அரிசிக்கு  

உலக்கை தேவையில்லை; 

உலக்கையின்  இடியில் 

குருணையில் அரிசியில்லை. 


படியளக்கும் மன்னனுக்கு 

பரதேசம் தேவையில்லை; 

பரதேசி நினைத்தாலும் 

படியளக்க வாய்ப்பில்லை.


விடியலுக்கு காத்திருப்போர் 

பகலவனை பகைப்பதில்லை; 

பகலவனின் பகைதனிலே 

பசும்புற்கள் நிற்பதில்லை.  


அகல்விளக்கின் ஒளியினிலே, 

அந்தியிருள் புகுவதில்லை;

அந்தியிருள் ஆட்டத்திற்கு  

ஆதவனின் மேடையில்லை.


அல்லலின்றி ஆக்கமில்லை; 

ஆக்கம்பெறின் அல்லலில்லை.

கல்லுமட்டும் கடவுளில்லை;

கடவுளொன்றும் கல்லுமில்லை.         

ப.சந்திரசேகரன். 

Sunday, July 24, 2022

'Your honour',upon hindsight.


Law's ever lovely words are,'your honor'

To which,Justice displays a tricky laugh.

"I said the same words before I came here"

Says Justice,proudly patting its own rear.


When law yearns for a verdict of its choice,

Justice explains the ethical gist,with a twist.

"You must always earn it earnestly,as I did,  

Without letting your emotions make the bid".


It is in the court where the duo always meet;

One to present a case and the other to hear.

Elevation leaves a post,with embedded ethics.

Exit from office dictates,left over moral kicks.


Folded eyes open and gagged voice breaks out.

Out of office,justice walks on a pathway stout.

Pronounced verdicts looked upon in hind sight,

Show the Goddess of justice,with her whip tight.

P.Chandrasekaran

Saturday, July 16, 2022

சிறைகண்ட சொற்கள்.

சொற்களின் சோகத்தில்

மொழியது மூச்சுமுட்ட.,

''பாராட்ட மட்டுமே

பெற்றெடுத் தாயோ"

எனச்சொல்லிப் புலம்பி,

மொழித்தாயின் கரங்களிலே,

சொற்கள் மூக்குச்சிந்தும்.

"எத்தனையோ பிரசவித்தேன்;

எழுந்துநின்று  முழக்கமிட,

எதற்கும் திராணியில்லை!''

எனக்கூறும் மொழியண்ணை.

"சட்டத்தால் சங்கறுத்து,

விட்டத்து பல்லிகளாய்

மாற்றிவிட்டர்,மறுப்பளித்து"

என்றிடும் சொற்களிடம்,

"நல்லதெது,கெட்டதெது, 

நானறிவேன் நிழல்கூட;

பொல்லாதோர் செயலெல்லாம்

வல்லமைச்சொல் வரையறுக்க,

வழியற்ற வார்த்தைகளாய்

வாசலின் நிற்கின்றீர்!"

எனச்சொல்லி மொழிமுனகும்,

"தரம்பிரிக்கும் தடைக்கற்கள்

நிரம்பிவரும் வேளையிது.

தீயாரை தினம்காண்போம்;

தீவிரச்சொல் அவர்நோக்கி,

தீண்டினால் தீர்ந்திடுவோம்.

தவமிருந்து  நீபெற்றாய்.

தற்குரிகளாய்ப் போனோம்.

அவமானம் அடைகின்றோம்

அவைதனில் சிறையுண்டு.

எங்களுக்குச் சிறைவைத்தால்,

உனக்கேது சிறப்பிங்கே"

எனப்பொரியும் சொற்கள்,

சிணுங்கிச் சங்கடத்தில்!.

"காலங்கள் மாறிடவே,

கோலங்கள் தான்மாறும்;

காத்திருக்கும் வேளையிலே 

பூத்துவரும் புதுச்சொற்கள்,

பூரிப்பை பரப்பிடுமே,

தாய்மைக்கும் வாய்மைக்கும்".

எனும் பொறுமையுடன்,

முடித்துவைக்கும் மொழித்தாய்.

ப.சந்திரசேகரன்.








Monday, July 11, 2022

Ghosts.

The butcher knows not the source of his goat.

Though the goat knows the butcher's knife.

Victims have no face of their own,any time.

But they know whose victims,they have been.


Paperweights putting pressures on vital files

Buy time,to buy money,without a face or name.

They hold the flow of power between two ends

Not claiming a pittance from the gains made. 


Each one has a face and each face has a name.

But faces lose names and names,their faces.

There is a fire in many,with pulse and beat

Wanting a will to fight abuses,with high heat.


Fear bleaches the faces of those made victims,

To turn them into ghosts, in a life full of whims.

P.Chandrasekaran.





Thursday, June 16, 2022

கோடும் கேடும்.

தலையில் வகிடெடுக்கவும் 

தரையில் கோலமிடவும், 

பிரிக்கவும்  பறிக்கவும் 

பரவலாய்க் கோடுகள்.


பாகம்பிரி கோடுகள் 

பாவத்தின்  பாடுகள் . 

முதுமையின்  கோடுகள் 

முகத்தின் முறிவுகள்.


சாலையில் கோடுகள்,

 வழிகாட்டிகள்;

வெளிச்சத்தின் கோடுகள், 

விடியலின் வித்துக்கள். 


விடைத்தாள்  கோடுகள் 

தொடங்கவும்,திருத்தவும்.

வயலின் வரப்புகள், 

விளைச்சலின் விறைப்புகள்.


எல்லைக் கோடுகள், 

தொல்லைக் கோடுகள்.

நரித்தனக் கோடுகள்

நாசத்தின் ஏடுகள்.  


குறிக்கோள் கோடுகள்

குறைத்திடும் கேடுகள்.

கோடிட்டு வாழ்வதற்கு 

குறிக்கோள்,கோடாமோ?


இலட்சுமன் கோடு

சீதை தாண்டிடவோ?

தாண்டிடும் வேளையில் 

தீண்டுவது கேடாமோ?  

ப.சந்திரசேகரன். 

Friday, June 10, 2022

பலபெயர் கொண்ட பிசாசு.

 

முட்டையானால் பொய்;

மூட்டையானால் புளுகு. 

குஞ்சு பொரித்தால் குறும்புரளி; 

அஞ்சா விரிவுரை அண்டப்புளுகு ;

ஆறாய்ப் பெருகிட ஆகாசப்புளுகு. 

ஆர்ப்பரித்து ஓடிடின் அளப்பு. 

வலைகள் பின்னிட பித்தலாட்டம்.

தலைகள் உருண்டால் தகிடுதித்தம்  

த்தியின் வரைவினில் வதந்தி; 

புத்தியை மறைத்திடின் புரட்டு;  

வரைவுகள் மிஞ்சிட அவதூறு. 

திரையினுள் மறைத்திடின் தில்லுமுல்லு .

எதற்கும் துணிந்த எத்தர்க்கு, 

உதிர்க்கும் சொல்லெல்லாம் உதாரு.

உலகினை வலம்வரும் 'உடான்சு'

பலபெயர் கொண்ட பிசாசு. 

ப சந்திரசேகரன்   



Thursday, June 2, 2022

சிலையாய் நின்றாலும்



தலையினில் தமிழைத் தாங்கியதால்,

கலையினில் தமிழைத் திரட்டியதால்,

மலையென மதிநுட்பம் கொண்டதால், 

சிலையாய் நின்றாலும்,சிகரமே நீ. 


உலைவைத்து பசியடக்கும் உணவெனவே,

தலைமுறைக்குத் தமிழுணர்வு  தந்திட்டாய்.

'பலகற்ற அறிவிலார்'பகைவிலக்கி, 

நிலமுயர்த்தும் நீராக  நிறைந்திட்டாய்!   


இலக்குகளை இயற்கைவழி எருவாக்கி,

விலையில்லா பொதுநீதி  விதைத்திட்டாய். 

அலைகடலில் மிதந்திடும்  தோணியென, 

வலைவீசி சமத்துவ மீன்பிடித்தாய்!.


முலைப்பாலை  முந்திவரும் முத்தமிழ்போல், 

மலைப்பறியா உன்வழியை மகன்முந்த, 

சலிப்பில்லா உழைப்பிங்கே சரித்திரமாய், 

ஒலிப்பெருக்கி விரட்டிடுமாம், ஒடுக்குமுறை!    

                                                     ப.சந்திரசேகரன்.   

Sunday, May 22, 2022

இறைவன் இருக்கின்றானா ?

"இறைவன் இருக்கின்றானா?

மனிதன் கேட்கிறான்

அவன் இருந்தால் உலகத்திலே
எங்கே வாழ்கிறான்
நான் ஆத்திகனானேன்
அவன் அகப்படவில்லை
நான் நாத்திகனானேன்
அவன் பயப்படவில்லை"


   கலைஞரின் எழுத்துவண்ணத்தில் உருவான'அவன் பித்தனா'{1966}எனும் திரைப்படத்திற்காக கவியரசு கண்ணதாசனின்,கற்பனை ஊற்றாய் உருவெடுத்த, இந்த அருமையான பாடல் வரிகள்.கேட்போர் நெஞ்சங்களில் அழுத்தமாய் விழுந்து அர்த்தமுள்ள,ஆழமான,விடை அறியா பல கேள்விகளை,விட்டுச் சென்றன,
    டி.எம்.சௌந்தராஜன்,பி.சுசீலாவின் கம்பீரமான,தெளிவான குரல்களில், என்றும் மனக்கடலில் முத்துக்குளிக்கச் செய்த பாடல்களில் இதுவும் ஒன்றாகும்."யார்  இந்த இறைவன்?எங்கிருந்து வந்தான்? என்ன இவனது பூர்வீகம்?"மதங்களுக்கு முந்திய வனா?மதங்களால்  மனிதர் மனதில் மின்கலமாய்ப் பொறுத்தப் பட்டவனா?உலகம் முழுவதும் மார்தட்டும் மனித இனத்திற்கு, மாறுவேடங்களில் காட்சியளிக்கும்  இவனது உண்மையான உருவமென்ன?
    இதற்கான விடையையும் 'வளர்பிறை' {1962}திரைப்படத்தில்,கவியரசு கண்ணதாசனே வழங்கியிருக்கிறார். 

"பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு 
புரியாமலே இருப்பான் ஒருவன் 
அவனை புரிந்துகொண்டால் அவன்தான் இறைவன்".

  இப்படி புரியாத இறைவனுக்கு பல பெயர்கள் சூட்டி,அவனை பல மதங்களுக்குள் சிறைவைத்து,தனது இறைமேலாண்மையையை நிலைநிறுத்த அன்றாடம் போராடிக்கொண்டிருக்கிறான் மனிதன்.

"தென்னை இளநீருக்குள்ளே தேங்கியுள்ள ஒட்டுக்குள்ளே தேங்காய்யைப்போலிருப்பான் ஒருவன் 
தெரிந்துகொண்டால் அவன்தான் இறைவன்".
 
  என்று கவியரசு எழுதிவைத்ததற்கு முரணாக,மதத்தை தென்னையாக்கி, மதவெறியால்  இளநீரை  மாசுபட்ட  நீராக்கி,தேக்கிவைத்த தறிகெட்ட ஓடுகளில் தேங்காயை தேடும் மனிதன் பார்வைக்கு என்றேனும்,உண்மையிலேயே இறைவன் எட்டக்கூடுமோ? 

  இதே கண்ணதாசன் 'திருவருட்ச்செல்வர்' {1967}திரைப்படத்தில் ,

"இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி 
எங்கெங்கோ அலைகிறார் ஞானத்தங்கமே 
அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே"
 
  என்று விடுகதை கூறி,அதற்கான விடையை 'சரஸ்வதி சபதம்' {1966}திரைப்படத் தில் தெளிவாகக்காண வைத்தார்.

"தெய்வம் இருப்பது எங்கே 
அது இங்கே வேறெங்கே"
  
என்று தொடங்கி, 

"தெளிந்த
நினைவும் திறந்த
நெஞ்சும் நிறைந்ததுண்டோ 
அங்கே" 

 என்று ரத்தினச்சுருக்கமாய் விடையளித்து அதனைத் தொடர்ந்து,
 
"பொன்னும் பொருளும் நிறைந்தவர் நெஞ்சம் 
பொய்யில் வளர்ந்த காடு"
 
என்றும்,
 
"எண்ணும் எழுத்தும் நிறைந்தவர் நெஞ்சம்
இறைவன் திகழும் வீடு"
 
   என்றும்,மாயத்திரைவிலக்கி,மனசாட்சியில் இறைவனை காணவைத்தார்.மேலும் அதே பாடலில் அவர்,
 
"ஆடை அணிகலன் ஆடம்பரங்கள் 
ஆண்டவன் விரும்புவதில்லை 
அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும் 
ஆலய வழிபாடில்லை"
 
    என்று வழிபாட்டுப்பாதைக்கு வரிகளால் விளக்கேற்றிவைத்தார்.இங்கே குறிப்பிட்ட முதல் பாடலைத் தவிர மற்ற மூன்று பாடல்களில் இரண்டை, டி.எம்.சௌந்தராஜனும்,'இருக்கும் இடத்தை'பாடலை சீர்காழி கோவிந்த ராஜனும் பாடியிருந்தனர்.இதில் இன்னுமொரு சுவையான செய்தி என்னவெனில், புதிருக்கும் கேள்விக்குமான பாடல்களுக்கு முன்பே,அவற்றுக்கான விடைகளை கவியரசு கண்டிருந்தார் என்பதாகும்.இதற்கு மேற்கண்ட நான்கு திரைப்படங்கள் வெளியான ஆண்டுகளே சாட்சி.        
    இறைவனைப்பற்றிய கவிஞர்களின் கற்பனை ஒருபுறமிருக்க,இறைவன் இருக்கின்றானா இல்லையா எனும் எதிரும் புதிருமான சிந்தனைகளோடு, மனிதனின் மூளை அவ்வப்போது மல்லுகட்டுவதுண்டு.
    பிறக்கையிலே யாருமிங்கே ஆத்திகராய், நாத்திகராய்,பிறப்பதில்லை  மனிதரில்  சிலர் தங்கள் உடலில் பச்சை குத்திக்கொள் வதுபோல மண்ணில் பிறந்த அனைவருக்கும் மத,மொழி,சாதி அடையாளங்கள் கால அட்டவணையிட்டு  அளிக்கைப்படுகின்றன. 
    சடங்குகளும் சம்பிரதாயங்களும்,சாதி மதத்தின் பெயரால் இறைமையை பின்னுக் குத்தள்ளி,மனித அடையாளங்களுக்கு முன்னுரிமை அளிக்கையில் உயர்வு தாழ்வு நிலைகளால் உந்தப்பெற்ற மனித சமூகம்,சமத்துவம் மறந்து உயர்நிலைப் போர் நடத்துகையில்,இறைவன் யார் என்றும்,இறைவன்மீது நம்பிக்கை வேண்டுமா என்றும்,கேள்விகள் எழுகின்றன.மதத்தினை விழுங்கும் சாதிப் பெருமை மதத்துடன் சேர்த்து இறைவனையும்  விழுங்குகிறது.
    இன்றைக்கு தமிழகத்தில் நாத்திகச் சிந்தனையில் ஊறிப்போன,பலருக்கும் நாத்திக ஊற்றாய் அமைந்த,தந்தை பெரியார் கூட,அவரது 25 வயதில் வாரணாசியில் அவருக்கு இழைக்கப்பட்ட மேற்சாதிக் கொடுமைகளால்தான் நாத்திகத்தின் நாடித் துடிப்பை முதன் முதலில் உணர்ந்தார். 
   ஆத்திகத்தையும் நாத்திகத்தையும் சிறிதுநேரம் மறந்து,மனித வாழ்வின் பல பிரச்சனைகளை யோசிக்கையில்,பிறப்பு இறப்பு கணக்குகளையும் காரணங் களையும் சிந்திக்கையில்,சாதியும் மதமும் சவக்குழி காணக்கூடும்.இந்த கோரமான உண்மையினைத்தான்,சவக்குழிக்கும் எரியூட்டலுக்கும் போராடிய,கோவிட தொற்றில் உயிரிழந்தோரின் உடல்கள் வெளிப்படுத்தின. 
   மதமின்றி இங்கு இறைவனுக்கு என்ன வேலை எனும் கேள்வி எழுகையில்,இறை வனுக்கும் இறைவழிபாட்டிற்கும் மதம் தேவைதானா,எனும் மறுபுறக்கேள்வியும் எழக்கூடும்.இதனால்தான் நேரு(Nehru), பெட்ரண்ட் ரஸ்ஸல்(Bertrand Russell) போன்ற அறிவுசார்ந்த சிலர், நாத்திகச் சிந்தனைக்கு அப்பாற்பட்டு,மதம் மற்றும் இறைவன் போன்ற நிலைப்பாடுகளுக்கு இடம்கொடுக்காமல்,தங்களது ஆழ்ந்த அறிவாற்றலை எழுத்துக்களாய், கட்டுரைகளாய் மக்களிடம் பகிர்ந்து கொண்டனர்.
    நற்சிந்தனை,மனித நேயம்,சமத்துவம் பேணல்,எனும் முக்கூடலில் மனசாட்சியை மைய்யமாக வைத்து வெளிப்படும் ஒவ்வொரு செயலிலும்,பூஜ்ஜியத்தை ஆளும் கண்ணுக்குப் புலப்படா இறைவனைக் காணமுடியும். எம்மதத்திராயினும்,நம்மில் பலரும் இக்கட்டான,இன்னல்களில் சிக்குண்டு போகும் காலங்களில் மட்டுமே, இறைவனை திமாக நினைக்கிறோம்.
   மாறாஅன்றாட வாழ்வில் இறைவனை பங்காளி ஆக்கிவிட்டால் 'சிக்கெனைப் பிடித்தேன் எங்கெழுந்தருள்வது  இனியே'எனும் அறைகூவல் மனிதன்/ இறைவன் உறவின் வாடிக்கையாகும்.நம்முள் குடிகொண்ட குண சீலங்களை நாமே சுட்டிக்காட்டி,"இறைவன் இருக்கின்றானா"என்று ஒருபோதும் நாம் கேட்கப்போவ தில்லை.வேண்டுமெனில்,இப்பதிவின் துவக்கத்தில் குறிப்பிடப்பட்ட 'அவன் பித்தனா'திரைப்படத்தின் எதிர்வினைதாக்கமாக ஒலிக்கும் 

"மனிதன் இருக்கிறானா?.
இறைவன் கேட்கிறான்
அவன் இருந்தால் உலகத்திலே
எங்கே வாழ்கிறான்
நான் அன்பு காட்டினேன்
அவன் ஆட்கொள்ளவில்லை
இ[எ] ந்தத் துன்பம் தீர்க்கவும்
அவன் துணை வரவில்லை". 

   எனும் கவியரசின் வரிகளை,இறைவனை தேடும் நிலைப்பாட்டிற்கு,பதிலடிப் படலமாக எடுத்துரைக்கலாம் !
  
ப சந்திரசேகரன்.   

Wednesday, May 18, 2022

வெளிச்சம்

 

கனவுகள் கார்த்திகை தீபமானால், 

விழிக்கையில் வெளிச்சம் விசாலமாகும்!.

பகைதனை புகாது விரட்டிடின்,  

படிதனில் பிரகாசம் கூடும்; 

வெறுப்பிலாச் சமூகம் விரிந்திட 

விளக்கின் திரிகள் பலமடங்காகும்.

வசையிலா வார்த்தையின் பயணத்தில் 

திசையெலாம் மொழிகள் தேரிழுக்கும். 


தரைக்கு வானம் அண்ணாந்து பார்க்கவோ 

திரைக்குள் ஒளிதனை திரட்டிக் கூட்டவோ?

அறிவின் வெளிச்சம் அகத்தினில் படர்ந்து ,

குறைவிலா குணங்கள் குழுமம் படைக்கும் .

மறைவுகள் இல்லா மனதின்  உண்மைகள், 

பிறை நிலவாகிப் பெறுக்கிடும் வெளிச்சம். 

விரிந்ததோர் பார்வை வெளிச்சம் படைத்திட 

எரிந்திடும் பொய்களில் எழுவதே மானுடம்! 

ப சந்திரசேகரன்   

Sunday, May 8, 2022

பல்லக்கு

மொட்டை மாடியில் 

மல்லாந்துப் படுத்து 

வானத்தைப் பார்த்திட ,

விழிகளே வானத்து  

விந்தைகளின்  பல்லக்கு.

கெட்டியாய் மடிதனில்

குழந்தையைப் பற்றி 

கனிவுடன் கொஞ்சிட, 

தாய்மடி தருவதே 

மழலைக்கு பல்லக்கு.

அரியதாய்க் கருத்துக்கள் 

அறிவுடன் வலம்வர, 

ஆதாரம் காட்டும் 

மூளையின் மேடையே, 

அறிவிற்கு பல்லக்கு.

பெரியதாய் மானுடம் 

பேருடன் தழைத்திட ,

போரிலா வேர்களாய்

படர்ந்திடும் கருணையே, 

சமத்துவப் பல்லக்கு.

சமரசம் சார்ந்து, 

சாத்திரம் மாற்றியே,   

சமூகம் சுமக்கையில் 

ஆனந்தம் ருதல்,   

ஆன்மீகப் பல்லக்கு.

                   ப சந்திரசேகரன்   






Friday, May 6, 2022

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்,முதல்வராய் ஓராண்டு.

   

  கூட்டணிகள்!வாக்குறுதிகள்!வரிசையாய் பிரச்சனைகள்! 2016 முதல் 2021 வரை காணாமல்போன,தமிழகத்தின் தனித்தன்மை வாய்ந்த அரசியல் முகத்தினை,அதன் சுயமரியாதையினை மீட்டெடுத்து,மாநிலத்தின் உரிமைகளை நிலைநிறுத் துதல்,இதுவரை எந்த தமிழக முதல்வருக்கும் இல்லாத புதிய சவால்!

  தி.மு.க வுக்கும் அ.இ. அ.தி.மு.க வுக்கும் செயல்பாடுகளில் வேறுபாடு இருந்தாலும் ஜெயலலிதா அம்மையார் உடல் ஆரோக்கியமாக இருந்த வரை,மாநிலத்தின் குரல் கம்பீரமாகத்தான் ஒலித்துக்கொண்டிருந்தது.

  ஆனால்,அவர் மறைந்த பிறகு பதவிக்காக மாநிலத்தின் உரிமைகளை ஒட்டு மொத்தமாக தேசியக் கடலில் கரைத்தவர்களால் தமிழகத்திற்கு ஏற்பட்ட இழுக்கினை அகற்றி,மீண்டும் புதிய உத்வேகத்தோடு  இழந்த பெருமையை  புணரமைப்பதே,திரு.ஸ்டாலினின் முதல் கடமையாயிற்று.

  நான்கு ஆண்டுகளாக தேய்ந்துபோன உரிமைகளும்,அந்த தேய்மானங்களுக் கிடையே முலாம்பூசப்பட்ட மதச்சாயங்  களும்,முதல்வர் பொறுப் பேற்று ஓராண்டேயான,ஸ்டாலின் அரசிற்கு,பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளன  என்பதே,அப்பட்டமான உண்மை.

   கூட்டணிகளை முதல்வர் ஸ்டாலின் பக்குவமாக கையாண்டு தன்னகத்தே வைத்துக்கொண்டார் என்று சொல்வதைக்காட்டிலும்,அவரின் பக்குவமும், நிதானமும்,விட்டுக் கொடுக்கும் மனப்போக்கும்,அரசியல் பாடப்புத்தகத் தில் வரவேற்கத்தக்க முன்னுதாரணப் பக்கங்கள் ஆயின எனலாம்.தேர்தலுக்கு முந்தைய வாக்குறுதிகளும்,அவை அனைத்தையும் நிறைவேற்றுவதில் இருக்கும் நடைமுறை சிக்கல்களும், அவருக்கே புதிய பாடங்களை கற்றுக் கொடுத்திருக்கும்.

  இருப்பினும்,முதன்மையான வாக்குறுதிகளில் பலவும்,குறுகிய காலத்தில் நிறைவேற்றப்பட்டிருப் பதும்,பல்வேறு சமூக நலத்திட்டங்கள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருவதும்,முதல்வரும் அவரது அமைச்சரவை சகாக்களும்,  தங்களது தார்மீக பொறுப்புகளை நிறைவேற்றுவதில்,எப்போதும்.  முழுமனதுடன் உறுதி பூண்டிருப்பதை,   மைய்யப்படுத்துகின்றன.

  'நீட்'தேர்வு விலக்குக்கான உறுதி மொழியும்,அது தொடர்பாக அவையில் நிறை வேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களும்,மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட மாநில அரசுகள்,ஒன்றிய அரசுக்கு எதிரான கொள்கை சித்தாந்தம் கொண்டிருப்பின், அவைகள் எப்படிப்பட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதை, இந்திய அரசியல் சட்டத்தை கேள்விக்குறியாக்கும் வண்ணம், பலரின் பார்வைக்கு புலப்படுத்தின.ஒன்றிய அரசின் பிரதி நிதிகள், திட்டமிட்டு  காலதாமதத்தை.  ஏற்படுத்தி,'நீட்'போன்ற சமூகம் சார்ந்த, மாணவச் சமூதாயத்தின் எதிர்காலம் சார்ந்த,முக்கிய பிரச்சனை களை,முரண்டு பிடித்து  முடக்கிப்போடுகின்றனர்.

  'நீட்'விலக்கு மசோதா மட்டுமல்லாது பல்கலைக்கழக துணைவேந்தரை மாநில அரசே நியமனம் செய்வதற்கான மசோதா உட்பட,நான்கு ஆண்டுகளில் கரைந்து போன மாநில உரிமைகளை,  ஒவ்வொன்றாய் மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது,ஸ்டாலின் அவர்களின் அரசு.

   உள்ளாட்சி அதிகாரங்களுக்கான அங்கீகாரம்,தேர்தல் மூலம் முழுமை பெற்றிருக்கிறது.மக்களின் பிரச்சனைகள் கவனத்திற்கு வந்தவுடன் விரை வாக தீர்க்கும் நடைமுறையும்,அவ்வப்போது மக்களோடு இணைந்து அவர்களின் பிரச்சனைக்குரல்களை கேட்டு,அவற்றின் நியாயத்தின் அடிப்படையில் கோரிக்கைகளை நிறைவேற்றுதலும், ஒடுக்கப்பட்ட சமூகத்தின் இல்லம்  தேடிச்சென்று,அவர்களின் மனநிலையை பகிர்வதும், வெறும் அரசியலாக அல்லாது,இயல்பான நிகழ்வுகளாகவே அறியப் படுகின்றன.

  இன்றைக்கு திரு.ஸ்டாலின் அவர்களின். அரசுக்கு இருக்கும் பெரும் குடைச்சலே, சமூகப்பிரச்னைகளை புறந்தள்ளி,மத அரசியல் புரிவோரின் தாறுமாறான பேச்சுகளும் நடவடிக்கைகளுமேயாகும். ஆனால் இதைவிட மிகப்பெரிய'மிசா பிசாசை'சந்தித்தவருக்கு,மதவாதத்திற்கும் திராவிட சித்தாந்தத்திற்குமிடையே, நெளிவு சுளிவோடு பயணிப்பதில்,சிரமம் இருக்கப்போவதில்லை.

   மதவாதிகள் நினைப்பது போல,   மதமாற்றம் சம்பந்தப்பட்ட  குற்றச்சாட்டு கள்,பல்லக்குகளின் பட்டினப்பிரவேசம் போன்ற வற்றால், தகர்க்கப்படக் கூடிய மண் கோட்டை அல்ல தமிழகம். அவ்வாறு அவர்கள் நினைப்பார்க ளாயின்,அது அவர்களின் மனக் கோட்டையே!தமிழகத்தின்.அரசியல். மாண்பு பல்வேறு பலவீனங்களுக் கிடையே நிலைத்து நிற்பதற்குக் காரணமே, இங்கே காலம் காலமாக வேரூன்றியிருக்கும் சமத்துவம், சகோதரத்துவம்,சுயமரியாதை, சமூக நீதி எனும் நான்கு தூண்களாகும்.

   நிதானத்தை மட்டுமே ஆளும் கருவியாக எடுத்துக்கொண்டிருக்கும் திரு.ஸ்டாலினால்,கூட்டணியை மட்டுமல்ல,தேவைப்பட்டால்,எதிரணி யையும் அரவணைத்து அரசாளும் ஆற்றல்,அவரையும் அவரது அரசையும், வரையறுக்கப் பட்ட அளவு கோல்களுடன்,அடையவேண்டிய இலக்குகளை,அடையச்செய்யும்.  தற்கு,திரு.ஸ்டாலினின் ஓராண்டு அரசு ஆரம்பப் புள்ளியாகும்.

  பொருளாதாரம் சீர்செய்யப்பட்டு,கல்வி, தொழில் ஆகியவற்றின் முன்னேற்றமும், மக்களின் அன்றாட பயன்பாட்டிலுள்ள கட்டுமானப் பணிகள் மேம்படுத்தப் படுத்தலும் முழுமைபெறும் தருவாயில், ஸ்டாலின் அவர்களும்,அவர் தலைமையேற்கும்  இயக்கமும்,அளித்த இதர வாக்குறுதிகளை,ஒவ்வொன்றாக நிறைவேற்றும் என்ற நம்பிக்கை, அவருக்கு உள்ளது போல் மக்களில் பலருக்கும் உண்டு. இந்த நம்பிக்கை விரைவில் நிசமாகும். 

    உதாரணத்திற்கு பள்ளிக்கல்வி தொடர்பாக,அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் கற்கும் வண்ணம்,ஒரு செயலியை பயன்படுத்தும் வகையில்,கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டது,பள்ளிக்கல்வியின் தரத்தினை உயர்த்தும் என்று நம்பிக்கை கொள்ளலாம்.  

  கோவிட் தொற்றினை மக்கள் நலத்துறை அமைச்சர்,அவரது செயலர் துணையுடன் வென்றெடுத்ததுபோல, இளைய நிதியமைச்சருடன் அவரின் அணிசேர்ந்த பொருளாதார நிபுணர்களின் துணையோடு, பொருளாதார பிரச்சனை களை வென்றெடுப்பார்,முதல்வர். ஆன்மிகம், திராவிடம் ஆகிய இரண்டிற் குமிடையே, அறநிலையத் துறை அமைச்சரின் துணையோடு,அங்குசம் பற்றி,'மத'யானை வெல்வார் .          

  எல்லோரும் சொல்லுவதை செவி கொடுத்துக் கேட்டு,தெளிந்த நீரோடை யான  மனம் கொண்டு,பிரச்சனை களுக்கு முடிவெடுக்கும் தலைமை,வெற்றிப் படிகளின்  உயரம் கண்டு, இந்தியக் குடியரசில் தமிழகத்தை,  மேலும் முன்னிலைப் படுத்தட்டும்! 

                                   ===============0===============


Saturday, April 30, 2022

உலகின் ஊட்டம்!

 இனிய உழைப்பாளர்தின வாழ்த்துக்கள்! 

கரங்களின் பிணைப்பில்  

முழக்கங்களின் முனைப்பில், 

உழைப்பின் உதிரம் 

உலகிற்கு உத்திரமானது.

உழைப்பின் ஊக்கத்திற்கு, 

பகலில்லை  இரவில்லை.

அதற்கென ஆண்டுதோறும் 

அடையாள தினமுண்டு.

ஆள்காட்டும் விரல்

தோள்காட்டும் வேளையில், 

தோழமை கூடிநின்று 

தோல்விகளை தோற்கடித்து, 

வாழ்ந்திடும் வாழ்க்கையினை 

வாகைக்கு பொருளாக்கும்.

உழைப்போர் வலிமையே 

உலகின் ஊட்டமாம்!

உழைப்பை கொண்டாடுவோம்! 

உழைப்போரை உயர்த்தி.  

ப சந்திரசேகரன் .


       

May Day's Midas Touch{First May 2022}

As the Earth goes round the Sun

The world works round the clock.

People go to work,or work from home.

Work is both hard and soft;

Hard work at times,goes soft;

And soft work turns maddeningly hard.

It is true a queen once said,

'Computers cannot generate compassion'.

Maternal laps ache with their laptops,

While babies to be cuddled,long for the laps.

Markets are busy with men and materials,

With growth-dreams saved as files.

Labour is conceived,gestated and delivered,

Making each labour,a symbol of motherhood.

From the richest of the world to the poorest,

Each one works for profit and survival.

Self-interest is the driving fuel of labour; 

But self-interest at the cost of others,

Transforms winning work into a wily wolf,

Ditching the victims of work to wail over their sweat.

A May day celebration meatily meets its goal,

When it makes each drop of sweat,stay sweet.

If wealth is justly spread in terms of labour,

Each labour-day call,carries its Midas touch.

P.Chandrasekaran.



Monday, April 18, 2022

Political Rhythms.


'What passion cannot music raise and quell?'

Asks a poet skilled in satire as his sleek spell.

With lyrics sandwiched in wild flavours,

Music has always played second fiddle

To politics,through its winning vocal wield.

But when music directly makes its way to politics,

From its invisible seat from behind the screens,

It has to make fresh tunes,to yield political gifts.


Political music patents,a passion for flattery.

Music that seeks its shelter in the body of politics,

Should'soothe,heal and drive'by hurting the rivals.

Can any music that hurts the ears,be called music?

Rhythms of Political tunes hurt many,by healing some.

Music that flatters politics,loses the ground it came from.

P.Chandrasekaran.


Wednesday, April 13, 2022

சீர்மிகு சித்திரை

{இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்}


தேருடன் பிறந்திடும் மாதமே சித்திரை; 

ஊருடன் கூடுவர் உவகை பெருக்கியே! 

நீரின்றி அமையா உலகினைப் போல, 

தேரின்றி நகராது திருவிழா மாதம்.

 

ஆருடம் கூறவும் ஆசைகள் கூடவும் ,

ஓரிடம் அகன்று உலகியல் பார்வையில், 

பேரிடர் களைந்து,பெருமிதம் கொள்வும்

யார்வழிப் போயினும்,நேர்வழி நன்றாம்.  


மார்தட்டிப் பேசுதல் மானுடம் மட்டுமே; 

ஓர்முறைக் கூறுதல் உண்மை ஆகிடின், 

தீர்ப்பினில் நீதி தெறித்திடல் போல,

வார்ப்பென வாய்மை வகுத்தல்  வலுவே!

 

சீர்மிகு  சித்திரை துளிர்த்திடும் நேரம் 

சார்பிலாச்  சமூக நியாயங்கள்  தழைத்து, 

தேருலாக் காண,தெருவெலாம் திரளும்;

மார்புகள் விரிந்திட,மனப்பகை மிரளும்.  

ப சந்திரசேகரன் .


Friday, April 8, 2022

பூச்சிப் பா! பறவைப் பா! விலங்குப் பா!


எறும்புக்கும்  பாத யாத்திரை உண்டு; 

எலிக்கும் இளைப்பாற,நித்திரை உண்டு. 

முதலைக்கும் 'நெஞ்சில் ஈரமுண்டு'; 

பதில்கூறும் தத்தைக்கும் மொழி ண்டு. 

பறவைக்கும் பரந்த பார்வை உண்டு.

 

புல்லறியாய் பெருமை,பாயும் புலிக்குண்டு; 

புல்லே பல்லின் பலமென்னும்,பசுவுண்டு. 

பகையறியும் சிங்கம் பதுங்க குகையுண்டு.

மிகைப்பட்ட ஓட்டத்தின் ஒயில், முயலுக்குண்டு. 

திகைப்புடனே திரளும் வாத்துக் கூட்டமுண்டு. 


கட்டுச்சோற்றில் 'கலக்கும்' பெருச்சாளி, 

கண்ட இடம் குழிபறிக்கும் பலசாலி. 

எட்டுக்கால் பூச்சி பாய்வதில்லை எட்டடி. 

சுட்ட தேங்காய்க்கு மசிவதில்லை சுண்டெலி. 

விட்டத்து பல்லி  மாற்றாது விதியினை.


பன்றிக்கும் எருமைக்கும் சேறே சுகமெனில் 

மென்றிடும்  மெத்தனம்,என்றும் எருமைக்கே! 

கரடித்தழுவல் காண்டா மிருகத்துக் கில்லை;  

மானாட,மயிலாட, தாவுதலே மந்தியினம்!  

கருங்குயில்,கரைந்துண்ணும் காக்கை யில்லை. 


நன்றிக்கு நாயுண்டு,குழைந்தும் குழையாமலும்;

ஒன்றிப் போதில்லை  ஓரிடத்தில் பூனை, 

உரியிலும் ஊஞ்சலிலும்,உரிமை கொண்டு!

ஆடும் கோழியும்,ஆள்கொழிக்கத்  தான்வளரும். 

கூடெனும் குறிக்கோளில் கூடிடும் பறவையினம்.


பரியின் வேகம் பார்த்தால் படைநடுங்கும்.

வரியிட்ட பரியோ,வருமோ ஓட்டத்திற்கு ?

நரியின் ஊளையில் நல்லிசை  நலிந்துபோகும். 

இரைதேடும் விலங்குகள் இரந்துண்ப தில்லை. 

பிரியா வரமளிக்கும் அன்றில் பறவையினம்; 

 

போரில் பிளிறவும் வீறுநடை போடவும் 

நீரில் தானிறங்கி நளினமாய்க் குளிக்கவும், 

ஆறும் ஆலயமும் ஆர்ப்பரித்துப் போற்றவும் 

ஆணையின் தும்பிக்கை அசத்துமே ஆளுமை! 

சேனைகள் கூடுமோ சிரமேற்க யானையின்றி? 


பூச்சிப் பா;பறவைப் பா;விலங்குப் பா; 

ஏச்சுப் பிழைக்கும் இனம் இல்லையப்பா!. 

ப.சந்திரசேகரன்.    

Saturday, April 2, 2022

Cats and dogs of Truth.

To bell the cat is near impossible.

To tell the truth is a tough deal too.

To straighten a dog's tail is a day dream.

 So is the move to correct crooked thoughts.

 Truth's box office hits are accidental,

 Like a child prodigy's pocket full of brains.

 Even the Mahatma did inerasably confess

 To have done,only his experiments with Truth.

 All experiments do not become inventions.

 Neither all inventions are true to the core,

 Because the invention of firm falsehood 

 Is claimed to be fait accompli by its inventor.

 If the mind becomes the face for a farce,

 Many a face becomes awfully unlookable.

 When the face itself is acclaimed to be a veil

 Where is the need for a mask to fight disease?

 Wherever truth prevails,it remains unsaid 

 Battling like the dog's tail,not to be straight. 

 To tell the truth is as tough as to bell the cat

 Though wisdom always wails,smelling a rat.

P.Chandrasekaran.

 

Sunday, March 27, 2022

'ஒரே மாதிரி'


'இவன் வேற மாதிரி' 

ஒரு தமிழ்த்திரைப்படம். 

'இந்தியா  ஒரே மாதிரி', 

ஒரு அரசியல் பாடம்.

மொழிவேறு,மதம்வேறு, 

ஒன்றுக்குள் பலவாம்! 

ஒரு நாடு ஒரு தேர்தல், 

ஒரு கல்வி திட்டத்தில், 

பலதுக்கும் ஒருபார்வை 

படர்ந்துவரும் பகையாம்! 

என்வீடு எனதாக, 

என்விதியை உன்கையில் 

எழுதித்தர நீயாரோ? 

ஓர வஞ்சனையால்  

கூரையினைக் குறிவைக்கும் 

கோபுரக் கணக்குகள், 

வாரியத்தை விரிவாக்கும் 

பேருக்கொரு மாதிரியாம்!

பரந்ததோர் படிவமிலா

ஒருமைக்குள் பன்மை,

இரந்துண்ணும் நிலையினை

ஈவோர்க்கே இடராக்கும். 

கெடுவானோ உலகியற்றியான் 

கெடுப்பவரை குலமுயர்த்தி?

பன்னாட்டு வணிகத்தில் 

பாதிஉயிர் போனதிங்கே;

ன்னாட்டு வணிகத்தின்

ஏணியினை கீழ்ப்பிடிக்க 

எத்தனைபேர் உயருவரோ! 

ஒரு உலையில் உணவாக்கி, 

ஊரெல்லாம் பகிர்ந்துண்டோம். 

பலஉலைகள் கொதிக்கையிலே, 

ஓரிடத்தில் உணவெல்லாம்,

ஒருகையால்  விநியோகம்.  

'வரிவரி'யாய் பறித்ததெல்லாம்

அரைவயிற்றுக் கஞ்சியென 

ஆறியதாம்  ஆக்கியவர்க்கு. 

பெருவயிற்றுப் பெருச்சாளி 

வங்கிகளை துளையிட்டு 

பங்குகளை புறந்தள்ள, 

உரியவர்க்கு நிதிச்சுமைகள் 

பெருத்ததிங்கே 'ஒரேநாட்டில்'!  

எல்லோர்க்கும் ஒருகல்வி 

எனச்சொல்லும்  ஏவலிலே, 

வல்லார்க்கே வழியுண்டாம்

வாழ்க்கைப்படி உயர்ந்திடவே!

பொல்லாமை பெருந்தொற்றாய்,

இல்லாமை இணைப்புகளாய்,

பல்லுயிர்க்கும் பாசாங்காய், 

கொல்லாமல் கொன்றிடுமாம், 

வில்லரியா அம்புகளாய்! 

பொய்யுரைக்கும் மாதிரிகள் 

நைய்யப் புடைத்திடுவோம், 

நயம்பட  உமியகற்றி. 

பலமாதிரி இருந்தாலும் 

பகிர்ந்துண்ணும் பழக்கமுண்டு.

'ஒரேமாதிரி'எனச்சொல்லி 

ஒருசிலரை வாழவைக்கும்

உருவமில்லா மாதிரியை,

கருவறுப்போம் கைகோர்த்து. 

ப.சந்திரசேகரன்.