முகம் காட்டிடும் கண்ணாடி என்றா லும்,கண்ணாடிகளின் தன்மைக்கேற்ற வாறு,முகத்தின் சாயல்கள் மாறக் கூடும்.சொல்லும் அப்படித்தான்!.ஒரு சொல்,ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள் தரக்கூடிய சூழலில் சொல்லின் பொருளை ஒவ்வொருவரும் பல கண்ணாடிகளாக மாறி, அவரவர் பாணியில் பிரதிபலிக் கின்றனர்.
"சொன்னது நீதானா
சொல் சொல் என் உயிரே"( நெஞ்சில் ஓர் ஆலயம்)
என்று சொன்னதை உறுதிப் படுத்த,உலுக்குவதும்,
"அவளா சொன்னாள் இருக்காது அப்படி எதுவும் நடக்காது.
நம்ப முடியவில்லை"(செல்வம்)
என்று உறுதிபட உரைப்பதும், "சொல்லால் அடித்த சுந்தரி
மனம் சுட்டுவிட்டு போனதென்னடி"(சின்ன கவுண்டர்)
என்று மனம் உழன்று தவிப்பதும், வித்தியாசமான மனக் கண்ணாடி களின் விரிவரை விளக்கங்களே! இதே சொல் குழப்பமே,
"நான் என்ன சொல்லிவிட்டேன்
நீ ஏன் மயங்குகிறாய்
உன் சம்மதம் கேட்டேன்
ஏன் தலை குனிந்தாயோ?"( பலே பாண்டியா)
என்று வினா எழுப்பி,வேறு ஒரு நிலைப்பாட்டில்
"உன்னைச் சொல்லி குற்றமில்லை
என்னைச் சொல்லி குற்றமில்லை
காலம் செய்த குற்றமடி
கடவுள் செய்த குற்றமடி"( குலமகள் ராதை)
என்று புலம்புவதும் மனக் கண்ணாடியின்முன்,சொல்லின் பல பாவங்களின் வெளிப்பாடே!
அதே நேரத்தில் 'தாய் சொல்லை தட்டாதே'என்றும் 'மனைவி சொல்லே மந்திரம்'என்றும்'சொன்னபடிக் கேளு மக்கர் பண்ணாதே'என்றும் பலர் உபதேசம் செய்தாலும்,எதையும் பொருட்படுத்தாது,காதலிக்கு மட்டுமே நிலவு வழி தூது சொல்வோரில்,
"என் தலைவியிடம் சென்று
நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே
நேரில் நடந்ததெல்லாம் வேடிக்கை பார்த்துவிட்டு
நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே"(குறவஞ்சி)
என்று நிலவுக்கண்ணாடி முன் நின்று கெஞ்சுவோர்,பலருண்டு.
பெண்மையின் பரிதவிப்பில் பல நேரம் தடுமாறி,
"சொல்லவா கதை சொல்லவா
நடந்த கதை சொல்லவா
பிறந்த கதை சொல்லவா
வளர்ந்த கதை சொல்லவா
பெண் என்று பூமியிலே
மலர்ந்த கதை சொல்லவா" (நவராத்திரி)
என்று வாழ்க்கைப் போர்க்களத்தின் வாட்டங்களைப் பகிர்வோரின் கதை களைக் கேட்கையில்,சொற்களின் சங்கடங்கள் நம் சிந்தனையை சிதைப் பதுண்டு.
நொடிக்கொருமுறை கண்ணாடியில் முகம் பார்க்கத்துடிக்கும் பாணியில் 'சொல்லத்துடிக்குது மனசு'என்று வேட்கையை வெளிப்படுத்துவதும், முகம் பார்க்கத் தயங்குவது போல,
"சொல்லத்தான் நிறைக்கிறேன் உள்ளத்தால் தவிக்கிறேன்"(சொல்லத் தான் நினைக்கிறேன்)
என்று,சொல்லாமலே சோகத்தில் சுகம் காண்பதும்,'சொன்னால்தான் காதலா'என்று சவால் விடுவதும்,கண்ணாடிக்குள் சிக்காத சொற்களாய் கபடி ஆடுவதைப்பற்றி,சொல்லிமாளாது.
"ஒரு பொய்யாவது சொல் கண்ணே,
உன் காதலன் நான்தானென்று;
அந்த சொல்லில் நான் உயிர் வாழ்வேன்"(ஜோடி)
என்று சொல்லெனும் மாயையில் காதலுக்கே சுருக்குக்கயிறு பின்னு வோரும் உண்டு.
"உள்ளதைச் சொல்வேன்
சொன்னதைச் செய்வேன்" (படிக்காத மேதை)
என்றும்,
"கண்டதைச் சொல்லுகிறேன்
உங்கள் கதையைச் சொல்லுகிறேன்"
(சில நேரங்களில் சில மனிதர்கள்)
என்றும் கூறி,
"சொல்லுறத சொல்லிபுட்டேன்
செய்யுறத செஞ்சுடுங்க
நல்லதுன்னா கேட்டுக்குங்க
கெட்ட துன்னா வுட்டுடுங்க" (பாண்டித் தேவன்)
எனும் பாணியில் தப்பித்துக் கொள்வோர் பலர்.
"பேரைச்சொல்லவா
அது நியாயமாகுமா"( குரு)
என்றும்,
"பேரைச் சொல்லலாமா
கணவன் பேரைச் சொல்லலாமா" ( தாயைக் காத்த தனயன்)
என்றும்,பெண்கள் சில நேரங்களில் மறுதலிப்பதுண்டு.ஆனால் அதே பெண்கள்,
"சொல்ல சொல்ல இனிக்குதடா
முருகா!உள்ளமெலாம்,உன் பேரை,
சொல்ல சொல்ல இனிக்குதடா" என்றும்,(கந்தன் கருணை)
"கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்ல சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல" (வெண்ணிற ஆடை)
என்று,பேரை சொல்லிச் சொல்லி, பேரானந்தம் பெறுவதுண்டு.
"சொல்லாதே யாரும் கேட்டால்
எல்லோரும் தாங்கமாட்டார்"(சொர்க்கம்)
என வாய்க்கு திண்டுக்கல் பூட்டு போட முயன்றாலும்,
"சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்சோடுதான் பூப்பூத்தது"(பூவே உனக்காக)
என்று,முகம்காட்டா கண்ணாடிகளைக் கடந்து,முகத்தில் முகம் பார்ப்பது போல காதல் அகத்தில்,சொல்லப்படாத சொற்கள்,பூட்டை உடைத்துக் கொண்டு மனக் கண்களுக்கு மகுடி வாசிப்பதுண்டு.
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.
என்றார் வள்ளுவர்.
"ஒரு சொல்லாலே வீணானதே வாழ்க்கை"
எனும் கலைஞரின்'ராஜா ராணி'திரைப்படப் பாடல்போல,சொர்க்கம் படைக்கும் சொற்கள்,சற்றே இடரினாலும் எவ்வளவு விரைவில் நரகமாகி விடுகின்றன.
தாம் சொல்லும் சொல்லை வெல்லும் மற்றொரு சொல் இல்லை என்ப தறிந்து வடுக்களைத் தோற்றுவிக்கும் நாவின் சொற்களைத் தவிர்த்து, முள்ளில்லா ரேஜாக்களா கவும் கல்லும் கனியாகும் கவின்மிகு மொழியாகவும் சொற்களைக் கூறுவதே கண்ணாடி களின் தரமுயர்த்துமாம்.ஒரு கல் ஒரு கண்ணாடியை தகர்க்குமாயின் ஒரு கடுஞ்சொல் பல மனக் கண்ணாடி களில் விரிசல் காணுமாம்.
=≈=≈=≈=≈=0≈=≈=≈=≈=≈
No comments:
Post a Comment