Thursday, June 16, 2022

கோடும் கேடும்.

தலையில் வகிடெடுக்கவும் 

தரையில் கோலமிடவும், 

பிரிக்கவும்  பறிக்கவும் 

பரவலாய்க் கோடுகள்.


பாகம்பிரி கோடுகள் 

பாவத்தின்  பாடுகள் . 

முதுமையின்  கோடுகள் 

முகத்தின் முறிவுகள்.


சாலையில் கோடுகள்,

 வழிகாட்டிகள்;

வெளிச்சத்தின் கோடுகள், 

விடியலின் வித்துக்கள். 


விடைத்தாள்  கோடுகள் 

தொடங்கவும்,திருத்தவும்.

வயலின் வரப்புகள், 

விளைச்சலின் விறைப்புகள்.


எல்லைக் கோடுகள், 

தொல்லைக் கோடுகள்.

நரித்தனக் கோடுகள்

நாசத்தின் ஏடுகள்.  


குறிக்கோள் கோடுகள்

குறைத்திடும் கேடுகள்.

கோடிட்டு வாழ்வதற்கு 

குறிக்கோள்,கோடாமோ?


இலட்சுமன் கோடு

சீதை தாண்டிடவோ?

தாண்டிடும் வேளையில் 

தீண்டுவது கேடாமோ?  

ப.சந்திரசேகரன். 

Friday, June 10, 2022

பலபெயர் கொண்ட பிசாசு.

 

முட்டையானால் பொய்;

மூட்டையானால் புளுகு. 

குஞ்சு பொரித்தால் குறும்புரளி; 

அஞ்சா விரிவுரை அண்டப்புளுகு ;

ஆறாய்ப் பெருகிட ஆகாசப்புளுகு. 

ஆர்ப்பரித்து ஓடிடின் அளப்பு. 

வலைகள் பின்னிட பித்தலாட்டம்.

தலைகள் உருண்டால் தகிடுதித்தம்  

த்தியின் வரைவினில் வதந்தி; 

புத்தியை மறைத்திடின் புரட்டு;  

வரைவுகள் மிஞ்சிட அவதூறு. 

திரையினுள் மறைத்திடின் தில்லுமுல்லு .

எதற்கும் துணிந்த எத்தர்க்கு, 

உதிர்க்கும் சொல்லெல்லாம் உதாரு.

உலகினை வலம்வரும் 'உடான்சு'

பலபெயர் கொண்ட பிசாசு. 

ப சந்திரசேகரன்   



Thursday, June 2, 2022

சிலையாய் நின்றாலும்



தலையினில் தமிழைத் தாங்கியதால்,

கலையினில் தமிழைத் திரட்டியதால்,

மலையென மதிநுட்பம் கொண்டதால், 

சிலையாய் நின்றாலும்,சிகரமே நீ. 


உலைவைத்து பசியடக்கும் உணவெனவே,

தலைமுறைக்குத் தமிழுணர்வு  தந்திட்டாய்.

'பலகற்ற அறிவிலார்'பகைவிலக்கி, 

நிலமுயர்த்தும் நீராக  நிறைந்திட்டாய்!   


இலக்குகளை இயற்கைவழி எருவாக்கி,

விலையில்லா பொதுநீதி  விதைத்திட்டாய். 

அலைகடலில் மிதந்திடும்  தோணியென, 

வலைவீசி சமத்துவ மீன்பிடித்தாய்!.


முலைப்பாலை  முந்திவரும் முத்தமிழ்போல், 

மலைப்பறியா உன்வழியை மகன்முந்த, 

சலிப்பில்லா உழைப்பிங்கே சரித்திரமாய், 

ஒலிப்பெருக்கி விரட்டிடுமாம், ஒடுக்குமுறை!    

                                                     ப.சந்திரசேகரன்.