Thursday, June 2, 2022

சிலையாய் நின்றாலும்



தலையினில் தமிழைத் தாங்கியதால்,

கலையினில் தமிழைத் திரட்டியதால்,

மலையென மதிநுட்பம் கொண்டதால், 

சிலையாய் நின்றாலும்,சிகரமே நீ. 


உலைவைத்து பசியடக்கும் உணவெனவே,

தலைமுறைக்குத் தமிழுணர்வு  தந்திட்டாய்.

'பலகற்ற அறிவிலார்'பகைவிலக்கி, 

நிலமுயர்த்தும் நீராக  நிறைந்திட்டாய்!   


இலக்குகளை இயற்கைவழி எருவாக்கி,

விலையில்லா பொதுநீதி  விதைத்திட்டாய். 

அலைகடலில் மிதந்திடும்  தோணியென, 

வலைவீசி சமத்துவ மீன்பிடித்தாய்!.


முலைப்பாலை  முந்திவரும் முத்தமிழ்போல், 

மலைப்பறியா உன்வழியை மகன்முந்த, 

சலிப்பில்லா உழைப்பிங்கே சரித்திரமாய், 

ஒலிப்பெருக்கி விரட்டிடுமாம், ஒடுக்குமுறை!    

                                                     ப.சந்திரசேகரன்.   

No comments:

Post a Comment