Friday, January 29, 2021

மாற்றமெனும் மாயை

    கடந்த நூற்றாண்டில்,கவிதை வரிகளால் காவியம் படைத்த கவியரசு கண்ணதாசனின் இரு முரண்பட்ட பாடல்களைக்கொண்டே,மாற்றம் என்பது மனித வாழ்வின் மாயவலையே,என்பதை நாம் புரிந்து கொள்ள லாம்.'பாவமன்னிப்பு' திரைப்படத்திற்கு, 

வந்த நாள் முதல் இந்த நாள் வரை 

வானம் மாறவில்லை 

வான் மதியும் நீரும் கடல் காற்றும் 

மலரும் மண்ணும் கொடியும் சோலையும் 

நதியும்  மாறவில்லை 

மனிதன் மாறிவிட்டான் 

மதத்தில் ஏறிவிட்டான்" 

எனும் பாடலை எழுதிய கவிஞரே,ப்பாடலுக்கு எல்லாவகையிலும் எதிர்மறையான, 

"காலத்தை மாற்றினான் 

கட்சியை மாற்றினான் 

கோலத்தை மாற்றினான் 

கொள்கையை மாற்றினான்; ஆனால், 

மனிதன் மாறவில்லை 

அவன் மயக்கம் தீரவில்லை"  

  எனும்'மனிதன் மாறவில்லை' திரைப்படத்திற்கா பாடலையும்  எழுதினார் என்பதிலிருந்து,மனித மனம் என்றைக்கும் மாற்றுச் சிந்தனைக்குட்பட்டதே என்பதையும்,மாற்றம் ஒரு மாயை என்பதையும், நாம் திட்டவட்டமாகக் கூறலாம்.

   இருப்பினும்,மாற்றமில்லையெனில் வாழ்வில் ஏற்றமில்லை;எனவே மாற்றமே வாழ்வின் எல்லை.தனிமனித மாற்றங்களும் உலகளாவிய மாற்றங்களும்,ஒன்றுக் கொன்று பிணைந்தோ அல்லது முரண்பட்டோ, மாற்றங்களின் வழியில் பயணிப்பதே வாழ்க்கைப்பயணம்.இதில் பலநேரம் மனித மனம் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாமல்,சிக்கித் தவிப்பதுண்டு.இன்றைய பெருகிவரும் தொழில்நுட்ப வளர்ச்சியினால் ஏற்படும் உலகளாவிய மாற்றங்கள்,பல நாடுகளின் பட்டிதொட்டிகளிலும் மூலை முடுக்குகளிலும்,ஊடுருவுவதை,நம்மால் உணரமுடிகிறது.

   நவீன யுகத்தில் தாய்மார்களின் கைகளில் குழந்தைகளைக் காட்டிலும், குழந்தைகளின் கையில் கைபேசி நிறைந்திருப்பதே, மாற்றங்களின் மறுபக்கம்.கல்வி, கலாச்சாரம்,சமூக உறவாடல்,அரசியல் ஆட்டக்களம், அரசாங்கம்,அனைத் திலும் மாற்றங்களின் முத்திரை பதிதை எவரும் மறுப்பதற்கில்லை.குருவிக்கூட்டினில் வாழ்ந்துகொண்டிருந்தோர், சிறகடித்து உலகம்வரை சுற்றிவர,மனித மனம் மணம் பெறுவதும்,மாசு படுவதும்,பறக்கும் வாழ்வின் பலமும்,பலவீனமுமே!.

    ஆனால்  இந்த   மாற்றங்களுக்கிடையே என்றும் மாறாதிருப்பது,சமூக ஏற்றத்தாழ்வும்,செல்வச் சீமான்களின் தனி உடமை ஏற்றங்களுமாகும். எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பே கவியரசு கண்ணதாசன்'கறுப்புப் பணம்'திரைப்படத்தில் எழுதிவைத்த,

"எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் 

இங்கு இல்லாமை இல்லாத நிலைவேண்டும்

வல்லான் பொருள்குவிக்கும் தனி உடமை 

நீங்கி வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடைமை"  

   எனும் வரிகள்,இன்றும் பகல் கனவாகவே இருந்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால்,தனி உடமையின் வக்கிர வளர்ச்சி,சமூக ஏற்ற தாழ்வு களை எரிமலைகளாய் வெடிக்கச் செய்கிறது.  

   இந்தியத் திருநாட்டின் சமதர்மச் சமூதாயக் கோட்பாடுகளை,தனி உடமைக்குத் தாரைவார்த்துக்கொடுப்போர்களே,மாற்றங்களின் பெயரால் ஏற்ற தாழ்வுகளின் ஏணிப்படிகளை,இரட்டிப்பாக்கி வருகின்றனர். விவசாயம் உட்பட அனைத்துத் துறைகளையும் ஒருசிலருக்கே பட்டா போட்டுக்கொடுக்க,செல்வத்தின் வீக்கம் சிலருக்கே சொந்தமாகி நடுத்தர வர்க்கத்தினர் ஏணியின் கீழ் படிகளுக்கும்,கீழ் நிலையிலுள்ளோர் அதல பாதாளத்திற்கும் தள்ளப்படுகின்றனர்.

   மாற்றங்கள் பெரும்பாலும் மாயையின் தோற்றங்களே!அறிவியல் மாற்றங்களும்,தொழில்நுட்ப மாற்றங்களும்,சமுதாய மாற்றங்களும், குடும்பச் சூழலின் மாற்றங்களும்,வாழ்க்கைப்பயணத்தின் பல்வேறு நிறுத்தங்களிலிருந்து தொடங்கும் தொடர்கதை பக்கங்களேயாகும்.இங்கே விண்வெளிப்பயணத்தின் வெற்றிப்பரவசமும்,கணினி உலகின் களே பரங்களும்,சாதிமத பேதங்களின் சரமாரி சறுக்கல்களும்,கூட்டுக்குடும் பங்களின் பழைய கருப்பு வெள்ளை காட்சிகளும்,மாற்றங்களின் மாய பிம்பங்களை மனத்திரையில் ஓட்டி,மதிமயங்கச் செய்கின்றன.

   ஆனால் இந்த  மாயக் காட்சிகளுக்கிடையே மாறாதிருக்கும் சுயநல சூழ்ச்சிகளும்,சகமனிதனை வைத்து பச்சைக்குதிரை தாண்டும் மலிவுச் செயல்பாடுகளும்,மண்ணில் எத்தனை மாற்றங்கள் வந்தாலும்'ஏழையின் சிரிப்பில்'இறைவனைக் காணப்போவதில்லை என்பதும்,'இரைபோடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடாய்'வீழ்ந்து மடியும் வெள்ளாட்டுச் சந்தைகள் வீழப்போவதில்லை என்பதும்,மாற்றங்களின் கண்ணாமூச்சி விளையாட்டாகும்

    மாற்றம் பற்றி வேடிக்கையாக யோசிக்கையில்,கடந்த ஆண்டு எங்கிருந்தோ ஒரு நோய் வந்தது.அது மாற்றங்களை மதிக்கும் நம்மில் பலரையும்,முகமூடிக் கொள்ளையர் ஆக்கியது.ஆரத்தழுவி பழக்கப் பட்ட,மனித நேயம் மிக்கோரை,ஆறடிக்கு அப்பால் ள்ளி நிற்கச் செய்தது. கைக்கும் வாய்க்குமிடையே,வழக்கமான,கண்டபடியான உணவு பரிமாற்றத்தை மாற்றி,அவரவர் வாயே அவரவர் கைகளை சந்தேகிக்கும், உறுப்புகளுக்கிடையிலான,உறவுக் கலவரத்தை தோற்றுவித்தது.

    ஆண்டுக்கணக்காய் சுவாசிக்கும் காற்றை மாசுபடுத்தி,தற்போது  காற்றை சுவாசிக்கவே அஞ்சி,முகக்கவசத்தை மூக்கிற்கும் வாய்க்கு மிடையே,மூச்சுக்கு மூச்சு மாற்றிப்பொருத்தி,அன்றாடம் ஏதோ ஒரு அரண்ட மன நிலையில் பொழுதுகளைக் கடக்கிறோம்.சமீபகாலமாக, முகக்கவசம்  அணிவோரின்  நாசித்துவாரங்கள் பிராணவாயு எது, கரியமில வாயு எது என்று பிரித்துப்பார்க்கமுடியாமல் தள்ளாடுகின்றன. நுரையீரல்கள் ஏதோ ஒரு நடுக்கத்தில் நலிந்திட,மருத்துவ மனையின் தீவிர சிகிச்சை முகாம்களில் தஞ்சம் புகுகின்றன.இந்த மாற்றங்களுக்கு யார் காரணம்?மாய நோயா?மனிதனின் பேராசையா ?

   தன்னுடலை தானே நம்பாதோர் மற்றவரை நம்புதல் கூடுமோ?உடலும் உள்ளமும் பெரும்  அனுபவங்களும்,அவற்றின் தாக்கங்களும்,புறநிலைப் படிகளை கடக்கையில் ஏற்படும் மாற்றங்களின் பிரதிபலிப்பே!அன்றாட அனுபவங்களின் அடிப்படையில் தனி மனித சிந்தனையும் அதன் விளைவாக  நிகழும் நடத்தை மாற்றங்களும்,ஒருவரைப்பற்றி மற்றவர் தங்களது மதிப்பீடுகளை அவ்வப்போது மாற்றியமைக்க ஏதுவாகின்றன. சுய மதிப்பீடு  செய்யும் மனநிலை கொண்டோர் அவரவர் மாற்றங்களை நிச்சயம் அறிந்திருப்பர்.பெரும்பாலும் அவ்வகை மாற்றங்கள் அவசியமென்றே சுய மதிப்பீடு மனநிலை கொண்டோர் கருதுவர்.    

    நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் ஒரு திரைப்படத்தில் கூறியதுபோல் இங்கு "எல்லாம் பிரம்மம்"!இருட்டுக்குப் பின்னால் ஒளிந்து கிடக்கும் ஒளியை இருள் எத்தனைநாள் தான் பதுக்கிவைக்க முடியும்? வெளிச்சம் வருகை யில் மாற்றங்களின் மாயை விலகும்.ப்போது"மாற்றம் ஒன்றே மாறாதது"எனும் மற்றொரு முரண்பாடும் அதில் புலப்படும்!!  

ப.சந்திரசேகரன்.  

  

Monday, January 25, 2021

The Radiant Republic

{Rejoice! the Radiant Republic of India}

As we gloriously hoist the national flag

On this Seventy Second Republic day,

Let us stand as the joist of democracy

And not foist any anti democratic bills.

Long and hard did our forefathers fight,

To mark the 26th day of a January

Succeeding the dynamic 15th of  an August.

Let the struggles for citizens'rights loom large

Over the struggle for power of vested interests.

Let all get all,rather than some get all.

Independence of the Republic is not meant for

Repressions of governance or undue rebellion.

Republic means election of right precepts and practice

To retain liberty and equality,for nation's lasting peace.

P.Chandrasekaran.


Tuesday, January 12, 2021

குலமுயர்த்தும் பொங்கல்


                                                  {வாழ்க வேளாண் பணி;

                                         வாழ்க குலமுயர்த்தும்  பொங்கல்} 

                                                   HAPPY PONGAL.


உலகின் உறைவிடம் உறங்கிடா நிலம்; 

நிலம்தனை உழுதிட,நிறைந்திடும் பலம்.  

பலமுறை தோற்றிடும் வேளாண் குலம்,  

பலியிட வருவராம் பாவிகள் வலம்.


விதைகள்  இன்றி  ஆகுமோ வேர்கள்? 

பாதைகள் இன்றி  பார்ப்பரோ  ஊர்கள்?

மாதிரி மரபுடன் மண்கலம் பொங்கிடின் 

தீதெலாம் அகன்று தினந்தினம் பொங்கலே!

 

பூத்ததும் காய்த்ததும் பூமியின் தாய்மையே! 

காய்த்ததை,காத்ததை,கள்வர்கள் கவர்ந்திட, 

வாய்த்ததை பொங்குவர்,வழியிலா வேளாண். 

மேய்த்ததை மென்னுவர்,மேற்குடி முதலைகள்!

 

போலியாய்ப்  பொங்குமோ,உழுதோர் உழைப்பு? 

கூலியை மதித்தலே,குலமுயர்த்தும்  பொங்கலாம்! 

ப.சந்திரசேகரன்.