Sunday, October 23, 2022

இரட்டைவால் குருவி

                வால் ஒன்று.

விசாரணை தோற்கையில்

இரகசியம் வெல்லும்.

நோயின் வாயிலில்,

நோயாளி குற்றவாளி.

அடுத்துக் காப்பவர் 

கெடுத்துக் காப்பரோ?

மருத்துவம் காக்குமோ,

மாறா நோயினை!

நோயாளியைப் பார்க்காதவர்

நோயைப் பார்த்தனரோ?

கண்டதைச் சொல்வது கலவரம்.

காணாததைச் சொல்வது நிலவரம்.

நோயாளி தின்றதால்,

நோய் வென்றது.

தின்றது வென்றதால்,

தின்றவரே குற்றவாளி.

காப்பாளர் காத்தது,

நோயா,நோயாளியா?


அடுத்துக் காப்பவர் 

கெடுத்துக் காப்பரோ?

சுட்டிக் காட்டுமோ 

விசாரணை அறிக்கை?

சுட்டிக் காட்டுதல் 

சட்டம் ஆகுமோ?

பட்டியலில் பெயர்வர

காத்வர்  குற்றவாளியோ?

நரிகள் நால்வரோ,

நால்வரில் ஒருவரோ?

பரிந்துரை இல்லா

விரிவுரை என்பது,

அறிந்ததைக் கூறுமோ 

ஆய்ந்ததைக் கூறுமோ?

இறந்தவர் தேதிகள்

மறந்ததன் மாற்றமோ?

மறைந்தவர் மறந்தோர்,

மறந்தனர் தேதியை!

மறந்தது குற்றமோ,

இரகசியம் குற்றமோ?

         வால் இரண்டு.

குருவிகள் பறக்கையில் 

சுடுவது முறையோ?

குருவியைச் சுடும்வழி 

மனிதரைச் சுடுவரோ?

கலகம் பிறந்திட 

நியாயம் பிறக்கும்.

நியாயம் நிறுவுதல் 

கலகம் ஆகுமோ?

சமூக விரோதிகள்,

சதியில் பிரதிகள்.

சமூகம் காத்தல்,

சமூக விரோதமோ?

சுற்றுச் சூழல் 

காப்போர் தம்மை,

பற்றும் தீயென 

பற்றிட வைத்தோர்,

இரகசியச் சதியினர்.

ஓடும் மக்களைத் 

தேடிச் சுடுதல்,

வாடும் பயிரினை 

பறித்திடல் போலாம்!

தண்டனை தருவோர் 

குண்டர்கள் ஆகிட,

குண்டர் சட்டமே, 

குற்றம் ஆகுமோ?

கேடுகள் புரிவோர் 

அனைவரும் கேடிகள்.

வெளிப்படைச் செயலிலும் 

விடுபடும் இரகசியம்!.

எய்தவர் வசமென,

அம்புகள் கூறுமோ?

எய்தது இங்கே 

ஆணையோ சேனையோ?

ஆணை இட்டது 

அமைச்சரோ காவலோ? 

குற்றம் சாட்டும் 

விசாரணை அறிக்கை,

சுட்டிக் காட்டுதல் 

சுட்டதோர் செயலெனில்,

சுட்டது சேனையோ,

சேனைக் கடிவாளமோ?

விசாரணை தோற்கையில்,

இரகசியம் வெல்லும்!

ப.சந்திரசேகரன்.





2 comments:

  1. சிறப்பு சார்... அரசியல் நிலவரம் குறித்து அற்புதமான கவிதை நிறைய கேள்விகளை எழுப்புகிறது.... "அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும் " ..

    ReplyDelete
    Replies
    1. தரமான கருத்துக்கு நன்றி திரு.மணிகண்டன்.

      Delete