Sunday, March 27, 2022

'ஒரே மாதிரி'


'இவன் வேற மாதிரி' 

ஒரு தமிழ்த்திரைப்படம். 

'இந்தியா  ஒரே மாதிரி', 

ஒரு அரசியல் பாடம்.

மொழிவேறு,மதம்வேறு, 

ஒன்றுக்குள் பலவாம்! 

ஒரு நாடு ஒரு தேர்தல், 

ஒரு கல்வி திட்டத்தில், 

பலதுக்கும் ஒருபார்வை 

படர்ந்துவரும் பகையாம்! 

என்வீடு எனதாக, 

என்விதியை உன்கையில் 

எழுதித்தர நீயாரோ? 

ஓர வஞ்சனையால்  

கூரையினைக் குறிவைக்கும் 

கோபுரக் கணக்குகள், 

வாரியத்தை விரிவாக்கும் 

பேருக்கொரு மாதிரியாம்!

பரந்ததோர் படிவமிலா

ஒருமைக்குள் பன்மை,

இரந்துண்ணும் நிலையினை

ஈவோர்க்கே இடராக்கும். 

கெடுவானோ உலகியற்றியான் 

கெடுப்பவரை குலமுயர்த்தி?

பன்னாட்டு வணிகத்தில் 

பாதிஉயிர் போனதிங்கே;

ன்னாட்டு வணிகத்தின்

ஏணியினை கீழ்ப்பிடிக்க 

எத்தனைபேர் உயருவரோ! 

ஒரு உலையில் உணவாக்கி, 

ஊரெல்லாம் பகிர்ந்துண்டோம். 

பலஉலைகள் கொதிக்கையிலே, 

ஓரிடத்தில் உணவெல்லாம்,

ஒருகையால்  விநியோகம்.  

'வரிவரி'யாய் பறித்ததெல்லாம்

அரைவயிற்றுக் கஞ்சியென 

ஆறியதாம்  ஆக்கியவர்க்கு. 

பெருவயிற்றுப் பெருச்சாளி 

வங்கிகளை துளையிட்டு 

பங்குகளை புறந்தள்ள, 

உரியவர்க்கு நிதிச்சுமைகள் 

பெருத்ததிங்கே 'ஒரேநாட்டில்'!  

எல்லோர்க்கும் ஒருகல்வி 

எனச்சொல்லும்  ஏவலிலே, 

வல்லார்க்கே வழியுண்டாம்

வாழ்க்கைப்படி உயர்ந்திடவே!

பொல்லாமை பெருந்தொற்றாய்,

இல்லாமை இணைப்புகளாய்,

பல்லுயிர்க்கும் பாசாங்காய், 

கொல்லாமல் கொன்றிடுமாம், 

வில்லரியா அம்புகளாய்! 

பொய்யுரைக்கும் மாதிரிகள் 

நைய்யப் புடைத்திடுவோம், 

நயம்பட  உமியகற்றி. 

பலமாதிரி இருந்தாலும் 

பகிர்ந்துண்ணும் பழக்கமுண்டு.

'ஒரேமாதிரி'எனச்சொல்லி 

ஒருசிலரை வாழவைக்கும்

உருவமில்லா மாதிரியை,

கருவறுப்போம் கைகோர்த்து. 

ப.சந்திரசேகரன்.    

No comments:

Post a Comment