விட்டில் பூச்சிக்கு,வீட்டில் இடமில்லை.
தொட்டில் குழந்தைக்கு,தோளில் சுமையில்லை.
கெட்டுப் போனவர்க்கு,கேள்விக்குப் பதிலில்லை.
முட்டுச் சந்திற்கு,மூன்று திசையில்லை.
திட்டித் தீர்த்தபின்,மொழியில் சுகமில்லை.
வட்டிக்கு வட்டியானால்,அசலுக்கு அழகில்லை.
ஏட்டிக்குப் போட்டியெனில்,குணத்தில் ஏற்றமில்லை.
பூட்டிய கதவிற்குள்,புன்முறுவல் பிறப்பதில்லை.
வேட்டிக்கறை மாறுவதால்,வேடங்கள் கலைவதில்லை.
நாட்டிற்கு ஒருபார்வை,நான்குதிசை பார்ப்பதில்லை.
வாட்டிடும் வரிகளினால்,வலிகளுக்கு வரியில்லை.
மாட்டிக்கொண்ட காளைக்கு,மாற்றுவழிப் பாதையில்லை.
பாட்டிசொன்ன கதைகேட்க,பேரன் பேத்தியில்லை.
ஆட்டிவைக்கும் காலனுக்கு,ஆட்டத்தில் களைப்பில்லை.
நீட்டிப் படுக்கையிலே,நெஞ்சத்தில் நடுக்கமில்லை.
கூட்டிக் கழிக்கையிலே,நிறைவில்ஓர் குறையுமில்லை.
ப.சந்திரசேகரன்.
சிறப்பு சார் "ஆட்டிவைக்கும் காலனுக்கு,ஆட்டத்தில் களைப்பில்லை" அருமையான வரிகள்.
ReplyDeleteநன்றி.திரு.மணிகண்டன்.
Deleteவாட்டிடும் வரிகளினால்,வலிகளுக்கு வரியில்லை.....
ReplyDeleteசிறப்பான வரிகள்.அய்யா!!
நடப்பின் நிஜம்!!
Delete
நன்றி திரு.விஜய்.
Delete