Saturday, August 20, 2022

திராவிடத் தோரணங்கள்

"அச்சம் என்பது மடமையடா;

அஞ்சாமை திராவிடர் உடமையடா"

  என்று'மன்னாதி'மன்னன் திரைப்படத்திற்கென பாடல் வரிகளை கவியரசு கண்ணதாசன் படைத்திருந்தாலும்,அதற்கு முன்பே வள்ளுவர்,

அஞ்சுதல் அஞ்சாமை பேதமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில் 

  என்று,அறியாதார் எதற்கும் அஞ்சார்;ஆயினும் அறிஞர்கள் அஞ்சுவதற்கு அஞ்சுவர்,எனும் பொருள்பட எழுதிவைத்தார்.பின்னர் கண்ணதாசனே எம்.ஜி.ஆரின் 'பணத்தோட்டம்'திரைப்படத்தில் வரும்''என்னதான் நடக்கும் நடக்கட்டுமே''பாடலின் இடையே

"மனதிற்கு மட்டும் பயந்துவிடு

தன் மானத்தை உடலில் கலந்துவிடு

இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு

இரண்டினில் ஒன்று பார்த்துவிடு"

  எனும் கம்பீரச்சொற்களால் மனசாட்சி,தன்மானம்,போராட்டக்களம் காணும் மாண்பு,ஆகியவற்றை திராவிடத் தோரணங்களாக்கினார்.

  திராவிடம் எனபது தமிழ் மண்ணின் தனிப்பெரும் அடையாளம் மட்டுமல்ல; அது தமிழரின் பாரம்பரிய பெருமை யின் முத்திரை.அவர்தம் உணர்வு களின் உள்ளலங்காரம்.மனசாட்சியின் மகுடம்.சமூக நீதிக்குரல் களின் ஒலி பெருக்கி. சமத்துவ சிந்தனையாளர்க ளின் சந்திப்பு மேடை. சாதி சமய மேலாதிக் கங்களின் சதுரங்க வேட்டையை சரித்து வீழ்த்த வல்ல, சரித்திர பிரம்மாண்டம்.

   இவை எல்லாவற்றையும் கடந்து இன்னொரு மாபெரும் கண்ணியம் திராவிடத்திற்குண்டு.அதுதான் அரசியல் எதிரிகளையும் அளவோடு அரவணைக்கும் அறிவார்ந்த நிலைப்பாடு.இது,தந்தை பெரியாரின் காலத்திலேயே,அடர்ந்த கருத்து வேறுபாடுகளுக்கிடையே,அவருக்கும் அவரது திராவிடத் தெளிவுகளுக்கு முற்றிலும் முரண்பட்டு,குலத்தொழில் கல்விக்கு குரல் கொடுத்த,மூதறிஞர் என்றழைக்கப் பட்ட ராஜாஜிக்கும், இடையே நிலவிய,கரம்பற்றுதலில் காணப்பட்டது.  

     ஊடகங்கள் ஊட்டம் பெற்றுவரும் இன்றைய காலக்கட்டங்களில், முகநூல் நட்புகளும்,கீச்சக பின் தொடர்பாளர்களும் ஒரு புறம் சாதி மதம் கடந்து முகம் காணா நட்பு பாராட்டி,மறுபுறம் மனக்கசப்பையும் கொட்டித் தீர்க்கின்றனர்.திராவிடத் தின் பல நிறத்தோரணங்களில் முதன்மையான மொழித்தூய்மை, தனது இயல்பான முகப்பினை புறக்கணித்து,பலரையும் முகம் சுளிக்கச்செய்வதை,பரவலாக பதிவுகளில் பார்க்கமுடிகிறது.

   பேரறிஞர் அண்ணா,கலைஞர் போன்றோர்,சொல்லாலும் எழுத்தாலும் தமிழின் தரமுயர்த்தி திராவிடத்தின் மொழித்தோரணத்தை தமிழ் மண்ணுக்கு நிரந்தர காணிக்கை யாக்கினர்.இன்று தமிழ் மொழியினை மாசு படாமல் காப்பது,திராவிடம் பேணும் அனைவரின் தலையாய கடமையாகும். 

   திராவிடம்,இறைவன் இல்லை என்றோ,அல்லது இறைவன் வேண்டா மென்றோ,ஒருபோதும் முழங்கிய தில்லை.தனிமனித நாத்திக நிலைப் பாட்டிற்கு,நான்கு திசைகள் உண்டு. அவை முறையே,அறிவின் ஊக்கம், மேல்சாதி வன்மத்தின் தாக்கம், மதவாதத்தின் மடமை, வழிபாட்டு முறைகளின் வசதியான வரைவுகள். இந்த நான்கு திசைகள் திராவிடத்தின் சிலரை நாத்திகத்தின் பால் வசீகரித் திருக்கலாமே தவிர,திராவிடமே முழுமையாக இறைவனைப் புறக் கணித்து பயணிப்பதாக பறைசாற்ற இயலாது.

  ஆனால்,இறைவனின் பெயரால் மனிதனைப் பிரித்தாளும் இழிநிலைச் செயல்பாடுகளை,எதிர்த்துப்போரிட்டு, வர்ணபேதங்களுக்கும் மடமை களுக்கும்,சவக்குழி தோண்டித் தோரணம் கட்ட திராவிடம் தொடர்ந்து தூண் அமைக்கிறது. இவற்றுக் கிடையே,கால இடைவெளியில், உலக ளாவிய பொருளாதாரமும், தொழில் நுட்ப மாயவலைகளின் பின்னலூட் டமும் திராவிடத் தோரணங்களுக்கு நவீன அலங்கார வடிவங்களை புகுத்தத் துடிக்கின்றன.  

   நிற,இன சிந்தணைகளை பின்னுக் குத்தள்ளி,சமத்துவ அடித் தளத்துடன் சமூகக்கட்டமைப்பை உயர்த்துவதே திராவிட மேலாண்மை.திராவிடச் சித்தாந்தம் ஒரு கடிவாளம். அது எப்போது இறுகவேண்டும்,எப்படி இருக்க வேண்டும் என்பது,கடிவாளம் யார் கையில் உள்ளது என்பதைக்காட் டிலும்,சுற்றி நடக்கும் சம்பவங்களுக் கேற்ப இயக்குபவர் வசம் கடிவாளம் இருக்கவேண்டும் என்பேத முக்கிய மாகும்.

    திராவிடச் சமூகத்தின் நிகழ்காலத் தேவைகளைத் திறனுடன் ஆய்ந்து அவைகளை வென்றெடுக்க எதிர் சித்தாந்த சிற்பிகளின் கரம் பற்று வதால் திராவிடம் களங்கப்படப் போவ தில்லை.ஆனால் எதிர்மறைச் சித்தாந் தங்கள் வளராமல் தடுக்கும் முயற்சியில் அச்சித்தாந்தங்களை தாங்களே தத்தெடுக்கலாம் என்று திராவிடம் கருதும் பட்சத்தில் யானை தன் தலையில் தானே மண்ணை வாரி இறைக்கும் பழமொழிக்கு இரையாகி சகதிக்குள் விழுந்த கதையாகும்.

   திராவிட மாடலுக்கு புதிய தோரணங் கள் தேவையில்லை.அதன் வேர்கள் வலுவாய் ஆழப்பதிந்து ஆண்டுகள் பலவாயிற்று.திராவிட மரத்துக்கு வேரூன்றியவர்களுக்கும், அது செடி என முளைக்கையில் நீரூற்றியவர் களுக்கும்,பின்னர் அது வளர்கையில் அதனை வெட்டிவீழ்த்த முயல்பவர் களின் மூர்க்கச் செயல் களுக்கு முடிவு கட்ட தொடர்ந்து போராடுபவர்களுக் கும்,திராவிட மரம் சமூக நீதியில் சாகா நிலை பெற்று,சந்ததிகள் பலவும் இளைப்பாற,சரித்திர நிழல் படைக்கும் மாடலாகும் என்பதெல்லாம்,காலக் கப்பல்களின் கலங்கரை விளக்கங் களே.திராவிடமரம் இன்று திராவிட மாடலானதே தவிர,அதன் நிழலின் அருமை நீங்கா நன்மைகளின் நினைவுறுத்தலே!.

   சயமரியாதை,சமத்துவம்,சமூக நீதி,சாதிமத புறக்கணிப்பு எனும் நான்கு தோரணங்கள் கொண்ட திராவிட மாடலை தொடர்ந்து முன்னுக்குச் செலுத்த யாரெல்லாம் நடிப்பின்றி நிசமாகத் தோள் கொடுக்கின்றனரோ, அவர்கள் அனைவருமே திராவிட மாடலின் பிரதிநிதிகளாவர்.மனிதருக்கு பல்லக்கு தூக்க விரும்பாத எவரும் திராவிட மாடலுக்குத் தோரணம் கட்ட தோள்தரலாம்.

                        ≈===/////=======////=======





1 comment:

  1. சிறப்பு சார்.... நுட்பமான அறிவு சார்ந்த விளக்கம்... நன்றி

    ReplyDelete