சொற்களின் சோகத்தில்
மொழியது மூச்சுமுட்ட.,
''பாராட்ட மட்டுமே
பெற்றெடுத் தாயோ"
எனச்சொல்லிப் புலம்பி,
மொழித்தாயின் கரங்களிலே,
சொற்கள் மூக்குச்சிந்தும்.
"எத்தனையோ பிரசவித்தேன்;
எழுந்துநின்று முழக்கமிட,
எதற்கும் திராணியில்லை!''
எனக்கூறும் மொழியண்ணை.
"சட்டத்தால் சங்கறுத்து,
விட்டத்து பல்லிகளாய்
மாற்றிவிட்டர்,மறுப்பளித்து"
என்றிடும் சொற்களிடம்,
"நல்லதெது,கெட்டதெது,
நானறிவேன் நிழல்கூட;
பொல்லாதோர் செயலெல்லாம்
வல்லமைச்சொல் வரையறுக்க,
வழியற்ற வார்த்தைகளாய்
வாசலின் நிற்கின்றீர்!"
எனச்சொல்லி மொழிமுனகும்,
"தரம்பிரிக்கும் தடைக்கற்கள்
நிரம்பிவரும் வேளையிது.
தீயாரை தினம்காண்போம்;
தீவிரச்சொல் அவர்நோக்கி,
தீண்டினால் தீர்ந்திடுவோம்.
தவமிருந்து நீபெற்றாய்.
தற்குரிகளாய்ப் போனோம்.
அவமானம் அடைகின்றோம்
அவைதனில் சிறையுண்டு.
எங்களுக்குச் சிறைவைத்தால்,
உனக்கேது சிறப்பிங்கே"
எனப்பொரியும் சொற்கள்,
சிணுங்கிச் சங்கடத்தில்!.
"காலங்கள் மாறிடவே,
கோலங்கள் தான்மாறும்;
காத்திருக்கும் வேளையிலே
பூத்துவரும் புதுச்சொற்கள்,
பூரிப்பை பரப்பிடுமே,
தாய்மைக்கும் வாய்மைக்கும்".
எனும் பொறுமையுடன்,
முடித்துவைக்கும் மொழித்தாய்.
ப.சந்திரசேகரன்.
No comments:
Post a Comment