எறும்புக்கும் பாத யாத்திரை உண்டு;
எலிக்கும் இளைப்பாற,நித்திரை உண்டு.
முதலைக்கும் 'நெஞ்சில் ஈரமுண்டு';
பதில்கூறும் தத்தைக்கும் மொழி உண்டு.
பறவைக்கும் பரந்த பார்வை உண்டு.
புல்லறியாய் பெருமை,பாயும் புலிக்குண்டு;
புல்லே பல்லின் பலமென்னும்,பசுவுண்டு.
பகையறியும் சிங்கம் பதுங்க குகையுண்டு.
மிகைப்பட்ட ஓட்டத்தின் ஒயில், முயலுக்குண்டு.
திகைப்புடனே திரளும் வாத்துக் கூட்டமுண்டு.
கட்டுச்சோற்றில் 'கலக்கும்' பெருச்சாளி,
கண்ட இடம் குழிபறிக்கும் பலசாலி.
எட்டுக்கால் பூச்சி பாய்வதில்லை எட்டடி.
சுட்ட தேங்காய்க்கு மசிவதில்லை சுண்டெலி.
விட்டத்து பல்லி மாற்றாது விதியினை.
பன்றிக்கும் எருமைக்கும் சேறே சுகமெனில்
மென்றிடும் மெத்தனம்,என்றும் எருமைக்கே!
கரடித்தழுவல் காண்டா மிருகத்துக் கில்லை;
மானாட,மயிலாட, தாவுதலே மந்தியினம்!
கருங்குயில்,கரைந்துண்ணும் காக்கை யில்லை.
நன்றிக்கு நாயுண்டு,குழைந்தும் குழையாமலும்;
ஒன்றிப் போவதில்லை ஓரிடத்தில் பூனை,
உரியிலும் ஊஞ்சலிலும்,உரிமை கொண்டு!
ஆடும் கோழியும்,ஆள்கொழிக்கத் தான்வளரும்.
கூடெனும் குறிக்கோளில் கூடிடும் பறவையினம்.
பரியின் வேகம் பார்த்தால் படைநடுங்கும்.
வரியிட்ட பரியோ,வருமோ ஓட்டத்திற்கு ?
நரியின் ஊளையில் நல்லிசை நலிந்துபோகும்.
இரைதேடும் விலங்குகள் இரந்துண்ப தில்லை.
பிரியா வரமளிக்கும் அன்றில் பறவையினம்;
போரில் பிளிறவும் வீறுநடை போடவும்
நீரில் தானிறங்கி நளினமாய்க் குளிக்கவும்,
ஆறும் ஆலயமும் ஆர்ப்பரித்துப் போற்றவும்
ஆணையின் தும்பிக்கை அசத்துமே ஆளுமை!
சேனைகள் கூடுமோ சிரமேற்க யானையின்றி?
பூச்சிப் பா;பறவைப் பா;விலங்குப் பா;
ஏச்சுப் பிழைக்கும் இனம் இல்லையப்பா!.
No comments:
Post a Comment