Thursday, May 3, 2018

காதற்ற ஊசி.

காதற்ற  ஊசியில் நூலுக்கு நுழைவில்லை.
நூலறுந்த பட்டம் பறப்பதோ பகல்கனவில்.
பட்டம் மட்டுமே பதவிகள் சேர்ப்பதில்லை.
பதவியின் மமதையில்  பண்புகள் தோற்றிட,
கதவுகள் திறக்கா ஆலயம் போன்று,
உதவா பண்புகள் கல்லறை காணும்.
நதிகள் வறண்டிடின் கரைக்கென்ன வேலை?
புதியதாய் நதியேதும் புலருமோ பூமியில்? 
நிதியைச் சுரண்டி நீதியைப்  நெரித்திட, 
விதிகளும் படுகுழியில் விரைந்து புதையும்; 
விளையாத பயிருக்கு வேரென்ப துண்டோ? 
வளையாத வீம்பிற்கு வம்சமே பகையாம்!
நீளமாய் உயிர்காத்து நெஞ்சுரத்தில் நின்றாலும், 
நாளும் காலம், நகைப்போடு நமைக்கடக்கும். 
காலம் கடந்தாலும், கடந்தவர்க்கே முடிவன்றி,
காலம் ஒருபோதும் கால்நீட்டிப் படுப்பதில்லை. 
கோலங்கள் குறிசொல்லி காலமது கேட்குமோ? 
காலநூல் நுழையுமோ காதற்ற ஊசியில் ?
                                                        ப.சந்திரசேகரன் .      

No comments:

Post a Comment