Tuesday, July 5, 2016

சொல் தோழா ! 7


சொல் தோழா !
அன்றய நம்வாழ்க்கைச் சூழலை
இன்றைக்கு பேசினால் பலனுண்டோ ?
நீயும் நானும் அசைபோட மற்றவர் நேரமோ ?
சட்டைப் பைநிறைய பத்துபைசா நிலக்கடலையுடன்
சிட்டுக் குருவிகளாய்ப் பறந்து விரிந்தோமே,
பொய்க்காற்று ஒருபோதும் பூங்காவில் பெற்றோமா?
எளிமையில் ஏற்றம் கண்ட இவையனைத்தும்,
நீயும் நானும் பகிர்ந்து கொள்ளும் பழைய பெருங்காயமே;
ஆனால் இன்றய காட்சிகள் நம்நெஞ்சில் பெரும் காயங்களாய்,
பதியமிட்டு பவனி வர, பார்வையே நாம்செய்த பாவமோ சொல் .
நம் மூச்சுக்  காற்றின் மிச்ச நாட்களே நமக்குச் சொந்தம்.
எஞ்சிய காற்றை இறுக்கிப் பற்றுவது இன்னும் எத்தனைக் காலமோ?
நஞ்சின் உருவங்களாய் பிஞ்சுக் குழந்தையையும் விட்டு வைக்கா
வஞ்சகரைக் கண்டு வானமே வாடி, சுருங்கிச் சரிய, .
கண்டைனர் லாரிகளைக் கண்டும், அவைபற்றி கேட்டும்
கரன்சி கணக்குகளைப் போட்டு போட்டு களைத்து,
காலத்தின் கயமைச் சாலையில், திசைமறந்து,
கால்கடுக்க பலர்நிற்க, கால்களின் பலமிழந்த நமக்கு,
காற்றைத் துறந்து காட்டுக்கு விரைந்து செல்ல,
அவசரமாய்  அமரர் ஊர்தி அழைப்பாய் தோழா.  
                                                                                ப. சந்திரசேகரன் .  
     

No comments:

Post a Comment