Friday, May 24, 2019

எடுப்புச்சாப்பாடு

எத்தனை நாளாச்சு
உன்னை நான்பார்த்து!
பளபளன்னு பாத்திரங்கள்
பலவிதமாய் பளிச்சிடவே,
குலுங்கிக் குலுங்கிகிட்டு  
கூடையிலே கூட்டமிட்டு 
ஏறிநீ இறங்கிடவே, 
உலையோடு அன்புருகி 
தலைக்கேறிய கவசமென, 
பலவீட்டுக் கைமணமாய்
இலையோடு  நீவருவாய்!
பலமான பசியுடனே
வயிரெல்லாம் வாடிநிற்க,
விலையில்லா நண்பருடன்
கலந்துண்ட நாட்களெல்லாம்,
மலைச்சாரல் மகிழ்வுகளே.

சமையலன்று சான்றுரைத்த 
சமத்துவங்கள் சரிந்திடவே,
சாதிமத பேதங்கள்
மோதிநிற்கும்  காலமிது!
எல்லோரும் ஓர்குலமே
எனும்வழி நடந்துவந்த 
எடுப்புச் சாப்பாடே,
என்றேனும் நீ ஒருநாள்
மீண்டும்வர மார்க்கமுண்டோ?
கையேந்தி பவனெல்லாம்
கால்முளைத்து பவனிவர, 
கைமாறிக் கைமாறி 
பையாப்பு கருதாத 
மெய்யான மனிதரின், 
சுமையோடு சுவையாகி 
பையப் பசிபோக்கி, 
'ஐயமிட்டு உண்'ணச்செய்த 
எடுப்புச் சாப்பாடே, 
கைம்மாறு உனக்குண்டோ? 
காலத்தில் இடமுண்டோ?
கச்சிதமாய் இருந்தாலும் 
அட்சய பாத்திரம்போல் 
அன்னமிட்டு நீபெருக, 
மிச்சம்வைக்கும்  சாப்பாட்டை 
எச்சிலென பாராது, 
உச்சநேயம் போற்றியதும், 
ஊரறிந்த உலகளவே!
ப.சந்திரசேகரன் .  

2 comments:

  1. Reminds me of the old song "varadappa varadappa kanji varadappa" from Babu.

    ReplyDelete
  2. You are right.That great song in A.C.Thrilochandar's film Babu,in the mighty voice of TMS was one of the motivating factors."Samayalellaam Kalakkudhu adhu Samathuvatha Velakkudhu"was one of the lines of the song.But that was about an ongoing incident.This is a reflection of my nostalgic longing.

    ReplyDelete