Monday, May 6, 2019

நெட்டுக்குத்தாய் நின்றேன்!

முல்லை பெரியாரென
முறுக்கேறிய என்மனம்,
முகலிவாக்கக் கட்டிடமாய் 
முகப்பிழந்துச் சரியுமோ? 
என்வாழ்க்கைப் பயணமென்றும் 
எழும்நெடுஞ் சாலையில்தான். 
என்பார்வை பலவீனத்தில், 
என்றுமில்லை பாசாங்கு! 
அக்கம்பக்கம் பார்க்காத,
அவசரப் பயணமென், 
கருவறையின் வனவாச,
கவனக் குறைபாடோ ?
உருவாகி வெளிவந்த 
ஒருகால உடற்குறையோ  ?
பற்றாத பாதத்தால், 
பெற்றோரின் பெருந்தவத்தால், 
படுகுழியில் பலநாட்கள் 
நெட்டுக்குத்தாய் நின்றது,
இனிதாய் இளைப்பாறும், 
தெனாலிக் கவிஞனின் 
தெருவிளக்குக் கதையே!
நடக்காதெனும் நிலைப்பாடு, 
நான்நடந்ததும் நடந்தது.
வடக்கும் தெற்குமாய், 
கிழக்கும் மேற்குமாய்,
நடந்து நடந்தே 
குழியில் நின்ற கால்கள்,
குன்றிலும் நின்றன.
நெடுஞ்சாலைப் பயணத்தில்
நிழற்குடை சலனங்கள், 
நெருடல்களின் தோரணமே .
அக்கம்பக்கம் பார்த்திருந்தால்
அங்கும்நான் நின்றிருப்பேன்!
குறுக்குச் சந்துகளில் 
குடியேறாக் கால்கள்,
குறைகள் காண்பதில்லை.
நெட்டுக்குத்தாய் நின்றதும்
நெடுங்குழியின் நற்பலனே,
முல்லை பெரியாராய் 
நிலம்சார்ந்து நிற்பதற்கு. 
மெல்லக்குடை சாய்ந் 
மவுலிவாக்கம் போலன்று! 
ப.சந்திரசேகரன் .  

No comments:

Post a Comment