Saturday, November 3, 2018

"எனக்கும்தான்"

சீதையின் சீலமும்,
பாஞ்சாலி சபதமும் 
கண்ணகி சீற்றமும்,
பெண்மை பெரிதுவக்கும் 
பெருந்தவமாய்ப் படர்ந்து 
பூமியைப் பலப்படுத்த 
புறப்பட்டு வந்ததோர்,
இதிகாச இனக்குரலே!

ஆண்மையின் ஆதிக்கம்
ஆங்காங்கே அதிர்ந்தாலும்,
பூங்காற்றாய்ப் புதுத்தேரில்
பவனிவரும் பெண்மையே,
ஓங்கிய உதிரத்தால் 
தேங்கிடும் தடையகற்றி, 
தூங்காமல் நிலம்காக்கும்
மாங்காட்டுத் தெய்வமாம்!

இதிகாசம் சிலநேரம், 
பெண்மையைப் பழிப்பதுபோல் 
ஆண்மையின் ஆரோகணம் 
மாண்பிறக்கிக் காட்டிடுமாம்! 
வன்கொடுமைச் செயலனைத்தும் 
வரலாற்றுப் பிழையாகி, 
பண்பாடு மேலோங்க, 
பழங்கதைகள் ஆகிடுமே! 

பழங்கதையின் வக்கிரங்கள் 
பெண்ணீய வடுக்களாய் 
பதிவுகள் புடைசூழ 
"எனக்கும்தான்"எனமுழங்கி  
மாதர்தம் மனஅழுத்தம்  
மல்யுத்தக் களம்காண, 
ஆண்குரலின் ஆணவத்தின் 
அருவருப்பு முகப்போடு, 
வீண்பழியும்  இலக்காக, 
விடுகதைகள் விற்பனைக்கோ? 
ப.சந்திரசேகரன் .  

No comments:

Post a Comment