Monday, November 19, 2018

சடங்குகள்

     சடங்குகள் வழக்கு முறைகள்;வாழ்க்கை நெறிக
ளன்று.ஜனனம் முதல் மரணம் வரை சடங்குகள் திணிக் கப்படுகின்றன.சடங்குகளைப் புறக்கணித் தால் விளைவுகள் விபரீதமாகுமோ என்று அஞ்சியோ அல்லது சடங்கு நிகழ்வுகளில் இயந்திரத் தன்மை யோடு கலந்துகொண்டோ,நம்மில் பலரும் சடங்கு களைப் பின்பற்றுகிறோம்.
    ஒருவகையில் பார்த்தால் நாம் அனைவரும் சமூக வலையின் சடங்குகளில்,சிக்கிய மீன்களே!பிறந்தால் புண்ணியதானம்;பெண்ணினம் மலர்ந்தால் புண்ணியதானம்;ஆணும் பெண்ணும் மணந்தால் சடங்குகளின் சரவெடி;மறைந்தால் ஆன்மநிறைவு வேண்டி,ஆரோகனச் சடங்குகள்.
   ஆண்டாண்டு காலமாய் நம்மை ஆண்டுவந்த சடங்குகள் இன்றைக்கு இரத்த பந்தங்களின் நேரமும் தூரமும் கருதி,சுருங்கக்கூறி விளங்கவைக்கும் கதைகளாய் மாறிவருகின்றன.அலைபேசிமூலம் உலகில் ஆளுக்கொரு மூலையில் நின்று,தாங்கள் சம்பத்தப்பட்ட,தாங்கள் நிகழ்த்தவேண்டிய சடங்கு களை,தூரம் தகர்த்து  தங்கள் பார்வைக்குள்  கொண்டுவருகின்றனர் புதிய தலைமுறையினர். 
   திருமணச் சடங்குகளின் நேரமும் நிர்ணயமும்  வெகுவாகவே குறைக்கப்பட்டு வருகின்றன.வேதம் ஓதுவோரும் பிசி;கேட்போரும் பிசி.அந்திமச்சடங்கு களின் கதையை எடுத்துக்கொள்வோமெனில், ஒரேநாளில் உடலாகி,தனலின் இறுதிச் சாம்பலாகி, நீரில் சங்கமித்து,ஆன்மா,நீத்தார் நினைவாகிறது.
    அன்பு பாராட்டும் மனிதருக்கு அன்பே சடங்காகும்; கடமை போற்றும் மனிதருக்கு,கடமையே சடங்காகும்.  இணைந்து வாழ்ந்தோரை இறுதிவரை நினைத்து வாழ்வோமெனில்,அதைவிடச்  சடங்கு வேறொன்று மில்லை.
    காலத்தின் தேவையை அனுசரித்து வாழ்க்கையின் சடங்குகள் பழைய வரலாறாக மாறிவரும் வேளை யில்,இறைவழிபாட்டுச் சடங்குமுறைகளில் மட்டும் ஆண் பெண் பாகுபாடும்,சாதிமத பேதமும்,விடாக் கண்டன் கொடாக்கண்டனாக,நம் மென்னியை இறுக்கிப்பிடிப்பது,சடங்குகள் சிக்கவைக்கும் வலைகள் மட்டுமன்று;சில வரைவுகளில் அவைகள் சுருக்குக் கயிறாக மாறி,மனித இனத்தை மூச்சுமுட்டச் செய்யும்,மயானத்திற்கான மாற்றுப்பாதையோ என்று எண்ணத்தூண்டுகிறது.
   புராதன ஆலயங்களின் மகிமை,அங்கே செல்லும் உண்மையான பக்தர்கள்,புண்ணியங்களைப் பகிர்ந்துகொள்வதில்,பெருக்குவதில் இருக்க வேண்டுமே தவிர,அத்திருத்தலங்களை ஆடுபுலி ஆட்டக்களமாக மாற்றுவதில் இல்லை.பலருக்கும் சொந்தமான பிரார்த்தனைக் கூடங்களை சடங்கு களின் பெயரால் ஒருசாரார் தங்களை கடவுளுக்கு நெருக்கமானவர்கள் என்று பறை சாற்றிக்கொள் வதும்,மற்றவர்களை இறைவன் காணத் தயாராக இல்லை என்று முழங்குவதும்,ஏதோ அரசு அதிகாரி யையோ அல்லது அமைச்சரையோ நேரில் கண்டு மனுகொடுக்க முனையும்,பாதிக்கப்பட்டோரின் உரிமையைத் தட்டிப்பறிக்கும்,இடைத்தரகர்களின் செயலுக்குச் சமமானதாகும்.
   இறைவன் கல்லாக இல்லை;ஒளியோடு ஒலியாக, நம்பிக்கையின் ஊற்றாக,வியாபித்திருப்பவன்; நல்ல எண்ணங்களை ஈர்த்து செயலாக்கும் சக்தியா னவன்.மனத்தூய்மையோடும் ஆழ்ந்த பற்றுத லோடும் பரவசத்தோடும் இறைவனை நெருங்கு வோர்க்கு சடங்குகளில் அக்கறையில்லை.மனதில் மணம்பரப்பும் மலருக்கு,அத்தாட்சி அவசியமில்லை. 
   சமத்துவத்தின் சிரசே இறைவன்;சிரசைச் சிதைக் கும் சடங்குகள்,இறைவனைக் கல்லாகக் காணுமே அல்லாது சொல்லாக,செயலாக,சுடர்மிகு ஒளியாகக் காணாது.நல்லோரின் இதயங்களில் நாழிகைத் துடிப்பான இறைவன்,தனது இயக்கத்திற்கு சடங்கு களை சாட்சியாகக் கொள்வதில்லை.மாறாக நல்லெண்ணங்களின்,நற்செயல்களின் சாட்சியே இறைவன்.
ப.சந்திரசேகரன் .      

2 comments: