Friday, November 23, 2018

பூதாகரப் புயல்

வயலும் வாழ்வும் வறண்டு கிடக்க, 
புயலொன்று பூதமென புகலிடம் புரட்டி,
பயத்தினை பாயென பாடைபோல் விரித்து, 
சாய்த்திடும் மக்களை,சமத்துவக் கூடத்தில்! 
இயக்கம் அனைத்தும் இருளில் மூழ்கிட, 
இயல்பு வாழ்க்கையே நடைபிண மாகும். 
முயற்சியின்  முகவரி முழுவது மழித்து, 
பயிருடன்  தோப்பும் படுகுழி தள்ளி, 
காய்த்திடும் மரங்களை,கால்மிதி ஆக்கிடும்.  
தயங்கித் தயங்கியே துளிர்த்திடும் வேளாண், 
மயங்கி மடிவதே மறுவழி ஆகுமோ! 
இயற்கையின் சீற்றம் ஏழையின் மீதெனில், 
அயரும் அவரது அல்லல் அகற்றுதல்,
செயற்கை ஊற்றாய் செழித்திடும் செல்வமே! 
புயலின் புண்களை வலிகளாய் சுமப்பதே, 
உயர்ந்திடா மனிதரின் துயரத் தொடராம்.
வயிற்றின் பசியை வாடிக்கை யாக்கி,
வியர்வைத் துளிகள் விதைகளாய் ஊன்றிய, 
பயிர்களை எல்லாம் பிரித்து மேய்ந்திடும், 
புயலின்  பேரிடர்,போக்குதல் புலருமோ
 ப.சந்திரசேகரன் .        

3 comments:

  1. Timely and so appealing. A descriptive poem, devoid of images and poetic suggestions.

    ReplyDelete
  2. Fear/mat/bier & routine as corpse are interlinking images.Thank you SRM for your response after a pretty long time.

    ReplyDelete