கூன்விழாத் திராவிடம்.
காஞ்சித் தலைவனின் கருணைத் தம்பியே,
ஊஞ்சல் ஆடுமைய்யா உன்தமிழில் ஊரெல்லாம் !
மேலும் கீழுமாய், மலையும் மடுவுமாய்.
காலத்தின் எதிரலையில் கால்தெறிக்க நீ நடந்தும்,
நூலறுந்த பட்டமாய் நிலைகுலைந்து போகாது,
நாலும் அறிந்ததனால், ஞாலக் கருவானாய்.
'மிசா 'வெனும் பிசாசினை மிரளாது எதிர்கொண்டு
அசையாத உறுதியுடன் ஆதிக்கவெறி சாய்த்தாய் !
புரியாத புதுத்தமிழ்,புறமொழிபோல் பரவிடினும் ,
மரியாதை மணம்கமழும் உன்தமிழே,உன்னழகு.
சுவையுறு சொற்களால்,உன்போல் தமிழ்மாலை,
அவையின் மாண்பிற்கு, அணிவிக்க யாரிங்கே ?
மூடரின் வசைச்சொற்கள் முழுமூச்சாய் முட்டிட,
மேடையில் மேல்மூச்சு,நீ என்றும் விட்டதில்லை .
தீராத் திரவியமாய்த் தெளிந்த உன்பேச்சில்,
'பராசக்தி' புகுத்தினாள் பிரித்தாயும் பகுத்தறிவு .
பாமரனுள் பகுத்தறிவை,பதமாய்ப் பதியமிட்டாய் . சாமியைத் துறந்தாயோ,சாத்திரம் திரித்தெழுந்த
தீமைகள் துறந்தாயோ,தீதெனத் தள்ளிவைத்து !
ஊமையாய் உன் நாவில் உயர்தமிழ் நின்றபோதும்,
சேமித்த காட்சிகளே ,செவிகளில் நிறைந்திருக்கும்.
பூமியில்நீ மறைந்தாலும்,மறையுமோ உன் தமிழ் ?
குனிவோர் பலரிங்கே ,பதவிக்கென பாசாங்கில் !
தனித்திங்கே நிற்குமே,உன் கூன்விழாத் திராவிடம் .
ப.சந்திரசேகரன் .
Sharing your grief...
ReplyDelete.
simply......SUPERB.
ReplyDelete