Wednesday, February 21, 2018

வாடா மலர்கள் .













நிறம்பல காண்பதே ஞாலக் கணக்காம்.
பரம்பரை வீரம் பரவிய மண்ணில்,
சிலம்பது சிதறி, சீற்றம் வெகுண்டு,
கரும்புள்ளி தன்னை,கரைத்தது தீயில்.

எறும்புக்கு எதற்கு எண்ணைக் குளியல்?
வரும்புயல் அறியுமோ காகித மலர்கள் ?
என்பது போன்ற, ஏளனக் கணைகள்,
அரும்பிடும் மலரினை அடர்வது மரபே.

துரும்பெனும் காகிதம் தோரண மாகி,
பெரும்பலத் தோடு  வானிலும் பறக்கும்;
விரும்பி மணமது பரப்பிடும் மலரும்,
திரும்பிப் பார்க்கையில் வாட்டம் காணும்.

திறம்பட ஊன்றி, தெருவிளக் காகிடின்,
வெதும்பிடும் மக்களின் இருளது மாயும்;
கரும்பின் இனிப்பாய் கலந்து தோன்றலே,
வரம்புக்குள் வாழும் வாடா மலர்களாம்!
                                                    ப.சந்திரசேகரன் .  

No comments:

Post a Comment