கல்லிலே கலைவண்ணம் கண்டதொரு காலம்;
கொல்லாமல் கொன்றிடும் கூட்டாளிக் கோலம்.
வெல்லமாய் இனித்ததிங்கே வேம்பாகிப் போக,
இல்லாதது இருந்திடுமோ,இலையுதிரும் நேரம்?
வெல்லாமல் வென்றது,வெறுங்காட்சி யாக,
தில்லுமுல்லுத் திருவிழா திகைப்பூட்டக் காணீர்!
நெல்லுக்குள் அரிசியென்று நாம்அள்ளி எடுக்க,
மெல்லக்கூடா உமியாகி நம்பசியை நகைக்கும்.
சொல்லும் செயலும், சூதினைப் பிரசவிக்க,
சில்லரை பெரும்பணமாய்,சீக்கிரத்தில் குவியும்;
எல்லாமே பொய்யாகி, ஏய்த்திடுந் தருணம்,
கல்லில் கலையுமொரு,கண்கட்டி வித்தையே.
மல்லாந்து படுத்து வானத்தை பார்க்கையில்,
கல்லாக நாம்நினைத்த கடவுளங்கே தெரியும்;
பொல்லாப்பு மறந்து கல்லினைக் கண்டால்,
இல்லை என்பதெல்லாம்,இல்லாமல் போகும்?.
ப.சந்திரசேகரன் .