Wednesday, October 25, 2017

மூன்று தடைகள்.

    சைவ சித்தாந்தத்தில் மூன்று மைய்யக் கோட்பாடுகள் உள்ளன. அவை 'பசு ' 'பதி' 'பாச' என்பதாகும். 'பதி' என்பது இறைவனையும் 'பசு' மனித ஜீவாத்மாவையும் 'பாச' என்பது அகந்தை{Ego}, மாயை, மற்றும் கர்மவினையினை குறிப்பதாகும்.
  அகந்தை, மாயை, கர்மவினை மூன்றும் நம் ஆன்ம விமோசனத்திற்கும் விடுதலைக்கும், தடைகளாகும். இவற்றிலிருந்து விடுபடமுடியாதவர்கள், சில விரும்பத்தகாத குணங்களை வெளிப்படுத்துகின்றனர் என்று தனது சொற்பொழிவில் சரளா ராஜகோபாலன் விளக்குகிறார். அவர்கள் பேராசைகொண்டு, எதையும் 'போதும்' என்று சொல்லமுடியாமலிருக்கின்றனர்.
     நமது ஆசைப்பட்டியல் அதிகமாகி, அனைத்தையும் நிறைவேற்ற முயலும்போது, நாம் ஏமாறப்போவது தவிர்க்கமுடியாததாகும். ஒன்றை அடைவதில் நாம் முனைப்புடன் இருக்கையில், சிறிய ஏமாற்றம்கூட நமக்கு  தாங்க முடியாததாகிறது. இதன் விளைவாக நாம் அவலமைடைகிறோம்.
     வாழ்நாள் முழுவதையும் செல்வம் தேடுதலில் செலவிட்டு, மேற்கொண்டு செல்வம் ஈட்ட இயலா நிலையில் அலைக்கழிக்கப்பட்ட நாம், இறைவனிப்பற்றி சிந்திக்கக்கூட இயலாமல் ஆகிறோம். ஆனால் இறைவனை ஆழ்ந்து நேசிப்பவன், அன்பே இறைவனென உணருகிறான். அறிவீலிகள் அன்பும் இறைவனும் மாறுபட்டவை என நினைக்கின்றனர்.முற்றுணர்ந்த  ஆன்மாவோ "அன்பே இறைவன் இறைவனே அன்பு" எனபதை உறுதிபட அறிகிறது.
     இதனையே திருமூலர் அன்பும் இறைவனும் பிரிக்கமுடியாதவை என்றும், இரண்டும் ஒன்றுபட்ட நிலையே என்றும், எடுத்துக்கூறுகிறார். இறைவன் அன்பின் மறுஉருவமாகிறார்; நாம் அவரின் அருளைப்பெற தகுதியடைய வேண்டும். அன்பால் நம்மை அர்ப்பணிக்கும் வாழ்க்கையில், இறைவனே நம்மிடம் வருகிறார்.
   மாணிக்கவாசகர் சிவபெருமான் மீது கொண்டுள்ள மட்டற்ற பக்தியினால், அவரை அடையும் நிலை அறியா பரவசத்தில் இருந்தார். ஆனால்  சிவபெரு மானோ, பக்தனின் பரவசத்தைப் பக்குவப்படுத்தி, அமைதிப்படுத்தி, தன் பாதம் காணும் பாக்கியம் தந்தார். மாணிக்கவாசகர் இறைவனின் கருணையை தனது திருவாசகத்தின் மூலம் கொண்டாடினார். சிவனைத் தவிர வேறு எதற்கும் தனது சிந்தனையையும் நேரத்தையும் ஒதுக்க மாணிக்கவாசகர் தயாராக இல்லை. இறைவனும், இப்புனிதரின் அன்பிற்கு இணையான கைம்மாறு புரிந்தார்.

{'இந்து' ஆங்கில நாளிதழ் அக்டோபர் 24,2017, சமூகம்/ நம்பிக்கை[ Society/Faith] பத்தியில் வெளியான " The Three Hurdles"  எனும் கட்டுரையின்  தமிழாக்கம்'}
                                                                                         ப.சந்திரசேகரன் .  

No comments:

Post a Comment