Wednesday, October 11, 2017

விதுரரின் பணிவு.



   "இங்கே எதையுமே நமதென்று கோரும் உரிமை நமக்கில்லை" என்று உணர்ந்தவர் ஒருசிலர்கூட இல்லை. மற்றவரிடமும் நமக்கு உரிமை ஏதும் இல்லை. மோட்சப் பயணத்திற்கான  முதல் படியே, நமது வாழ்வில், பொருட்களிடமோ அல்லது நபர்களிடமோ, உடமை உணர்வுக்கான இடமில்லை என்பதை புரிந்துகொள்வதுதான்.
 "நான், எனது என்பதை விட்டொழியுங்கள்" என்கிறார் நம்மாழ்வார். நான் என்பதை வேரறுக்கவேண்டும் என்கிறார் அவர். பகவத் கீதை முழுவதிலும் இந்த செய்தியே காணப்படுகிறது என்றார், திருமதி சரளா ராஜகோபாலன் தனது சொற்பொழிவில்.
   வாழ்க்கையில் ஒருவரது மனநிலை எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான ஒரு அருமையான உதாரணத்தை நாம் மகாபாரதத்தில் பார்க்கிறோம். கிருஷ்ணபரமாத்மா துரியோதனனைக் காணச் செல்கிறார். பாண்டவரின் தூதராக அவரது வருகையின் நோக்கம், துரியோதனனை நியாயமாக இருக்கும்படியும் பாண்டவருக்கு அரசவையில் அவர்களுக்குரிய பங்கினை கோரவும் தான்.
     கிருஷ்ணரின் தேர் ஹஸ்தினாபுரிக்குள் நுழைகிறது. நகரத்தில் உள்ள ஒவ்வொரு மாடமாளிகைக்கும் வெளியே நின்று, "இது யாருடைய வீடு" என்று வினவுகிறார் கிருஷ்ணர். ஒவ்வொரு இல்லத்தின்.  சொந்தக்காரரும் ஒருவர்பின் ஒருவராக "இது எனது இல்லம்" என்கின்றனர் மேலும் ஒவ்வொரு வரும் "கிருஷ்ணா வருக வருக என்னுடன் தங்கிச் செல்க" என்கின்றனர் கிருஷ்ணபரமாத்மா எவரின் அழைப்பையும் ஏற்காத நிலையில்,தேர் நகர்கிறது.     இறுதியில் தேர் விதுரரின் இல்லத்தை அடைகிறது."இது யார் வீடு" என்கிறார் கிருஷ்ணர் அதற்கு விதுரரோ "எல்லாம் உன்னிடமிருந்துதானே வருகிறது. இந்த வீடும் உன்னடையதுதானே கிருஷ்ணா. உன்னுடைய வீட்டிற்கு நீவர அனுமதி கோரவேண்டுமா? அல்லது அழைப்பிற்காக காத்திருக்க வேண்டுமா? "என்கிறார்.
     விதுரரின் பதிலில் நிறைவுகண்ட கிருஷ்ணர், அவருடன் தங்க முடிவு செய்கிறார். துரியோதனன் உட்பட பலரது அழைப்பையும் ஒதுக்கித்தள்ளினார் கிருஷ்ணபரமாத்மா. இறைவனுக்கு ஒருவன் மன்னனோ அல்லது பரதேசியோ என்பதுபற்றி அக்கறையில்லை. பணிவுள்ளவரே இறைவனின் ஆசியைப் பெறுகின்றனர். விதுரர் தனது பணிவால் இறைவனைக் கவர்ந்து ஆசியைப் பெற்றார்.
{  'இந்து' ஆங்கில நாளிதழ் அக்டோபர் 11,2017, சமூகம்/ நம்பிக்கை[ Society/Faith] பத்தியில் வெளியான "Vidhura's Humility"  எனும் கட்டுரையின்  தமிழாக்கம் ' }
                                                                                                     ப.சந்திரசேகரன் .  

No comments:

Post a Comment