Saturday, June 9, 2018

கல்விக்கடை கல்லாப்பெட்டி

கல்விக்கடை கல்லாப்பெட்டி,
களிப்புடனே  ஜொலிக்குதிங்கே; 
கட்டணம் செலுத்துகையில்,
கொட்டிடுது தேளெனக்கு! 
வட்டிக்கு வாங்கியது, 
வாய்க்கரிசி ஆகிடுமோ? 
பெட்டிக்குள்  போனபம் 
பட்டமாய் பறந்திடுமோ 
புத்தகமும் சீருடையும், 
குத்தகைக்கு கிடைத்திடுமோ?
போட்டிகள் பலஇங்கே, 
படிப்பென்னும் பாதையிலே ; 
கூட்டணிபோல்  ஒருதேர்வில், 
மாட்டிடுவோம் ''சமச்சீராய்''.
கேட்டதும், படித்ததும், 
காட்டிடுமோ நம்இலக்கு? 
நாடிணைக்கும் தேர்வென்றால், 
நலிந்தவர்க்கு பெரும்பூட்டோ? 
பூட்டியதோர் வாயிலுக்கு
'நீட்டு'வரோ திறவுகோல்?  


மெத்தனமாய் இருப்போர்க்கு
மதுபானம் கருவூலம்; 
மத்ததெலாம் தெருவோரம்.  
அப்பாவோ டாஸ்மார்க்கில். 
பிள்ளைக்கேது பாஸ்மார்க்கு?
தரமில்லாக் கல்வியினால், 
முரண்பட்ட போட்டியிலே, 
முடமாகிப் போனேனோ? 
ஊர்சூற்றிக் கடன்வாங்கி, 
ஊனுருக்கும் படிப்பெல்லாம், 
கார்முகில் கனவாகி,
வேர்க்கருகிப் போனேனோ?
உயிர்பலிகள் மரபாகி, 
உயிர்மாய்க்கும் உணர்வாகி,
கயிறாகும் கடைக்கல்வி. 
ஆனாலும் ஆண்டுதோறும், 
களிப்புடனே  ஜொலிக்குதிங்கே,
கல்விக்கடை கல்லாப்பெட்டி.
                           ப.சந்திரசேகரன் 

1 comment: