Wednesday, June 20, 2018

மாற்றமெனும் மாயை

திரைமறைவில் கருத்தரித்து, 
தெருவோரம் கதையாகி, 
அரிதாரம் வழியாகி, 
பரிகாசம் பலவாகி, 
புரியாத கொள்கையுடன், 
புறப்படும் கொடிகளிங்கே, 
புதுயுகம் படைத்திடுமோ? 

நெஞ்சினில் நட்பும், 
முதுகினில் துரோகமும், 
நாள்காட்டும் நடப்பினில்
நூலிழையில் 'கைமாறி ', 
செஞ்சோற்றுக் கடன்மறந்து, 
நெஞ்சினை முதுகாக்கும்,
வஞ்சமிகு அரசியலாம் !  

நிறங்களை நெறியாக்கி, 
அரசியல் புரிவோர்க்கு, 
மாறிடும் நிறங்களே 
'மாண்புமிகு' அத்தாட்சி! 
கொடிகளால் குழம்பியதோர் 
குடிமக்கள் பலருக்கும், 
மாற்றமெனும் மாயை, 
மாறிடா நிலையே! 

கூட்டத்தை குறிவைத்து 
மேடைகள் காண்போர்க்கு 
நானென்னும் மலையே, 
நாடாளும் தகையாம்; 
நம்பிக்கைத் தீயினில், 
வேடிக்கை காட்சியெல்லாம், 
வாடிக்கை தோல்வியென்னும், 
வாக்காளர் வலியாம்
            ப.சந்திரசேகரன் .  

1 comment: