Monday, September 4, 2017

நாடாளும் வேட்கையில் நடிகர்கள்.

அரசியல் என்பது , வெண்திரையைக் கடந்து வீதிகளில் விளையாடப் படவேண்டிய ஒரு விவேகமான விளையாட்டு. சுதந்திர போராட்டமும், திராவிட இயக்கமும், வீதிகளில் அரங்கேறி, பின்னர் ஆட்சிக் களத்தை அலங்கரித்ததை, இந்தியரும் தமிழரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. மக்கள் சேவைக்காக மட்டுமே,அரசியல் வரலாறு படைத்த மகான்கள் வாழ்ந்த மண்ணில், இன்றைய நிலையென்னவோ வேறுதான். இருப்பினும், வீதிகளே அரசியலின் புறப்பாட்டு தலங்கள் என்பதில், மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை.
   ஆனால் வெண்திரையை அரசியலின் கருவறையாக மாற்றியது யார்? திராவிட இயக்கம் தொடங்கியபோதே திரையுலகத் திருவிழாவும் தொடங்கியது என்பது,தமிழகத்தைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகளைக் கடந்த நிலையாகும். அண்ணாவும் கலைஞரும் இதற்கு பிள்ளையார் சுழிபோட்டு, பெரும்பாதை அமைத்து கொடுத்தனர். தெருவில் தொடங்கிய இயக்கக் குரல், திரைவழியாக கிடுகிடுவென்று திரையிசைப் பாடல்களாகவும், வசனங்களாகவும், நீரோடை நுழைவதுபோல் மூலை முடுக்கெல்லாம் சென்றடைந்து, திராவிட இயக்கம் தமிழகத்தை அரசாளச் செய்தது. சுதந்திரத்திற்கு போராடிப் பெயர்பெற்று, அரசாண்ட கட்சி, இன்றுவரை, இழந்த அரசை தமிழகத்தில் மீட்டெடுக்க முடியவில்லை.
     அண்ணாவின் பேச்சாற்றலும் மனித நேயமமும், அவரை மக்கள்பால் வெகுவாக ஈர்த்தது .அதேபோன்று கலைஞரின் சொல்லாண்மை, படைப்பாற்றல், மற்றும் நிர்வாகத் திறன், அவருக்கு மக்களின் செல்வாக்கை ஈட்டித் தந்தது .இதேகால கட்டத்தில் தான், வீதியோடு நில்லாது, வெண்திரை யிலும், திராவிடக் கொள்கைகளையும் சமதர்மக் கோட்பாடுகளையும் தனது திரைப்பட வேடங்கள் மூலமாகப் பரப்பிய எம் ஜி ஆரின் செல்வாக்கு, பன்மடங்கு உயர்ந்து, அரசியலுக்கு வெண்திரையிலிருந்து வீதிவரை, பாலம் அமைத்துக் கொடுத்தது. இந்த இணைப்பால் மக்களிடம் எம் ஜி ஆரின் பிணைப்பு ஆழமாகப் பதிய, ஒவ்வொரு அரசியல் கூட்டத்திலும், அவரின் தோற்றம் திராவிட இயக்கத்திற்கு பலம்  கூட்டியதோடு நில்லாமல், எம் ஜி ஆர் என்னும் மூன்றெழுத்தை அன்றய அரசியலின் தாரக மந்திரமாக்கியது.
     திரைவழியாக மக்கள் மனதில் பதிந்த எம் ஜி ஆர் என்னும் நடிகர், எல்லாத் திரைப்படங்களிலும் ஏழை எளியோருக்காகப் போராடும் நல்லவர் எனும் கதாபாத்திரங்களில் மட்டுமே தோன்றியதாலும், அவரது புரட்சிகரமான பாடல்களினாலும், ஏழை எளியோர், அவரைத் தங்களின் உன்னதமான பிரதிநிதியாகக் கண்டனர். திரைப்படங்கள் மூலமாக எம் ஜி ஆருக்குக் கிடைத்த இந்த அசைக்கமுடியாத செல்வாக்கு பின்னர் அவரை எவராலும் வெல்ல முடியாத தலைவராக உருவாக்கி, அவரது ஆயுட்காலம்வரை மக்களது நம்பிக்கையைப் பெறச் செய்தது.
    எம் ஜி ஆரின் மறைவுக்குப் பின்னர்,  எண்ணற்ற திரைப்படங்களில் அவருடன் ஜோடியாக நடித்து, அவரது நிழலாக நின்ற செல்வி ஜெயலலிதா, அவரது  இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். திரைக்கதாப் பாத்திரங்களை வாழ்க்கையின் உண்மையான உதாரணங்களாக, உணர்வுபூர்வமாக ஏற்றுக்கொண்ட தமிழ் மக்களின் அன்பும் பாசமும் விலைமதிப்பற்றவை என்பதை எம் ஜி ஆரும் செல்வி ஜெயலலிதாவும், அவர்களின் ஆட்சிக்காலம் முழுவதிலும், அனுபவப் பூர்வமாக அறிந்திருக்கக்கூடும் .
      எம் ஜிஆரின் இந்த அரசியல் வெற்றிக்கு அவரது திரைப்படங்கள் மட்டு மல்லாது ஆட்சியைப் பிடிக்குமுன்பே அவர் அண்ணாவுக்கு நெருக்கமானவர் என்பதும், திராவிட இயக்கம் ஆட்சியைப் பிடிப்பதற்கு, அவரின் மேடைத்தோற்ற மும், தேர்தல் நேரத்தில் அவர் குண்டடிபட்டு மருத்துவமனையில் இருந்ததால் விளைந்த அனுதாப அலையும், பெரும்பங்கு வகித்ததென்றால் அது மிகையாகாது. இவை அனைத்திற்கும் மேலாக எம் ஜி ஆர் திரைப்படப் பாடல்களில் பரவலாக வெளிப்பட்ட 'நான்' எனும் சொல்லின் தாக்கம் அவரை மக்களோடு இணைத்து 'நாம்' என்று சொல்லவைத்தது. இந்த நான் எனும் சொல்லை அவருக்குப் பின்னால் தமிழகத்தை ஆண்ட செல்வி ஜெயலலிதா வலுவாகப் பற்றிக்கொண்டதும், அதை அவ்வப்போது அவையிலும் அரசியல் மேடைகளிலும் தாராளாமாகப் பயன் படுத்தியதும், அனைவரும் அறிந்த ஒன்றாகும். மக்கள் நம்பிக்கையையும் செல்வாக்கையும் பெறுவதற்கு காரணமாக இருந்த தன்னம்பிக்கையின் வெளிப்பாடாக விளங்கிய இந்த நான் எனும் சொல், இவ்விறு தலைவர்களுக்கும் அசுரபலத்தை அளித்து, கட்சியில் இவர்களை எண் ஒன்றாக்கி, மற்ற அனைவர்களையும் பூஜ்ஜியமாக்கியதோ என்று எண்ணத்  தோன்றுகிறது.
    அரசியலில் இவ்விரு நடிகர்களும் பெற்ற மக்கள் செல்வாக்கும் வாக்கு வங்கியும், இன்று தமிழகத்தில் பல நடிகர்களை அரசியல் பிரவேசம் செய்யத் தூண்டுகிறது .தமிழகத்தில் மட்டுமே, திரைப்பட நாயகர்களுக்கும் அரசியலுக்கும் இடையே, நம்பிக்கையூட்டும் பாலம் நிலவுகிறது .ஏனெனில், ஆந்திராவில் என் .டி .ராமராவுக்குப் பிறகு எந்த நடிகரின் அரசியல் முயற்சியும் வெற்றிபெறவில்லை .கேரள மக்கள் நடிகர்களை, நடிகர்களாக மட்டுமே காண விரும்புகின்றனர். கர்னாடகாவில் ரசிகர் கூட்டம் நம்பிக்கையூட்டிய ராஜ்குமாரால் அரசியலில்  காலூன்ற முடியவில்லை.அதே நேரத்தில், தமிழகத்தில் மட்டும் நடிகர்களின் நாடாளும் வேட்கை கூடுதலாகவே காணப்படுகிறது .
   ஆனால் தமிழக மக்களின் வாக்கு வங்கியோ,எம் ஜி ஆர் காலத்திலேயே ஒப்புமையில்லா நடிகராக விளங்கிய, தகுதியிருந்தும் காங்கிரஸ் கட்சியினால் ஒரங்கட்டப்பட்ட, நடிகர் திலகம் சிவாஜி கணேசன், எம் ஜி ஆரின் மறைவுக்குப் பின்னர் தொடங்கிய, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை, ஒட்டுமொத்தமாக நிராகரித்தது என்பது, தமிழக மக்கள் எல்லா நடிகர்களையும் ஒரேமாதிரியாக, அரசியலுக்கு ஏற்றவர்களாகக் கருதவில்லை என்று நிரூபித்தது.
    சிவாஜி கனேசனின் இந்த அரசியல் தோல்வியைக் கடந்து, எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதாவின் அரசியல் வெற்றியே, இன்றும் பலரது அரசியல் ஆர்வத்தை சுண்டியிழுக்கிறது. கருப்பு எம் ஜி ஆர் என்று ரசிகர்களால் போற்றப்பட்ட, பல திரைப்படங்களில் நேர்மையான காவல் துறை அதிகாரியாக வலம் வந்த விஜயகாந்த்,  தனது தே. மு .தி .க காட்சியைத் தொடங்கிய சில வருடங்களி லேயே, தனக்கென சேர்த்த கணிசமான வாக்கு வங்கியை நிரூபித்துக் காட்டினார். குறுகிய காலத்தில் கம்பபீரமாக வளர்ந்த தே .மு. தி. க கட்சித் தலைவரின் ஆண்மை மிடுக்கும், தன்மான உணர்வும், கூட்டணிச் சகதியில் இடறிவிழ, கூட்டணியினால் அவருக்குக் கிடைத்த வெற்றியைக்காட்டிலும் அரசியல் தோல்விகளே அதிகமானது .அன்று விழுந்த அவர் இன்னும் எழமுடியாமல் தவிக்கிறார் என்பதை இன்றய அரசியல் நிகழ்வுகள் வெளிக்காட்டுகின்றன .
    இப்படி கேப்டன் விஜயகாந்த் நேரடியாக அரசியல் களத்தில்  நிற்க, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தோ,அல்லது கமலஹாசனோ, அரசியல் காற்றை அவ்வப்போது சுவாசிக்கின்றனரேயல்லாது இன்னும் வெளிப்படையாக, திட்டவட்டமான முடிவுகளோடு அரசியல் களம் காணவில்லை.
    இந்த இருவரில் ரஜினி உணர்வு பூர்வமானவர், வெளிப்படையானவர் என்பதை, அவரது மேடைப் பேச்சுக்களில் அறியமுடிகிறது .ஆனால் அவரது  வெளிப்படைத் தன்மை வெளிப்படையில்லாத அரசியலுக்கு எப்படி   பொருந்துமோ தெரியவில்லை .மேலும் அவர் 'முத்து 'திரைப்படத்தில் பேசிய 'நான் எப்போ வருவேன் எப்படி வருவேன் என்பது தெரியாது ஆனால் வரவேண்டிய நேரத்தில் கட்டாயம் வருவேன்' என்ற வசனம் இன்றுவரை அவரது ரசிகர்களுக்கு, என்றேனும் ஒருநாள் ரஜினி அரசியலுக்கு வந்துவிடுவார் என்று நம்பிக்கை அளித்துக்கொண்டிருக்கிறது. கமலைப் பொறுத்தவரை, அவர் அறிவுபூர்வமானவர்; அறிவோடு குறும்பும் கலந்தவர் ; அறிவுபூர்வமான குறும்பும் வரவேற்கத்தக்கதே. இருப்பினும், ரஜினியின் ஆன்மீகச் சிந்தனையும் கமலின் அறிவாற்றலும், எந்த அளவிற்கு எம் ஜி ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் கிடைத்த மக்களின் வாக்கு வங்கியை நிலைபெறச் செய்யுமோ தெரியாது.
     ரஜினியைப்போல் கமலைப்போல், இன்று பல ஹீரோக்கள் அரசியல் கனவு காணக்கூடும். இந்த கனவில் தப்பேதும் இருப்பதாகத் தோன்றவில்லை. நடிகர்கள் நாடாளக் க்கூடுமோ என்ற கேள்வி என்னைப்பொறுத்தவரை அர்த்தமற்றதே. இங்கே மருத்துவர்கள், தேநீர் கடைவைத்து உழைப்பால் உயர்ந்தவர்கள், ஐ .ஏ .எஸ் மற்றும் ஐ .பி. எஸ் அதிகாரிகள் என்று பலரும் அரசியலில் பெரும் பங்கு வகிக்கையில், நடிகர்களும் நாடாளப் புறப்படுவதில் தவறேதும் இல்லை .ஆனால் அவ்வாறு அவர்கள் புறப்படுகையில், அவர்களது வெண்திரை மாயையினை மூட்டைகட்டி வைத்துவிட்டு, ரசிகர்களின் புகழாரத்தால் விளைந்த பெருமிதத்தை, புறந்தள்ளி புறப்படுவாராயின் நன்று. "மக்கள் தொண்டே மகேசன் தொண்டு .மக்களால் நான் மக்களுக்காகவே நான்" போன்ற தேர்தல் நேரக் கூற்றுகள்  உண்மையான விதைகளாய் வேரூன்று வதையே மக்கள் ஏதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.
                                                                                  ப.சந்திரசேகரன் .      

No comments:

Post a Comment