நீளம் தாண்டிட நீளம் வேண்டுமோ?
உயரம் தாண்டிட உயரமே வரம்போ?
பாம்பைத் தாண்டிட,பாம்பு தீண்டுமோ?
'தீண்டாமை'என்பது பாம்பிற்கு முண்டோ?
தீயைத் தாண்டித் தீயவை குறைப்பதோ?
தீயததைத் தாண்டி,தீயைத் தவிற்பதோ?
வாயின் வழிவரும் தீயவை அனைத்தும்,
தாயின் கருவறை,தாண்டிய தீண்டலாம்!
தாண்டித் தாண்டி,தவக்களை ஆகியே ,
வேண்டும் பதவியை,வேண்டிப் பெறுவர்.
தாண்டத் தெரியா தோண்டிய குழியில்,
தாமே விழுந்து தம்வினை காண்பர்.
ஆண்டான் தாண்டல்,அடிமைத் தலையோ?
ஆண்டியின் தாண்டல் அறவழிப் போமோ?.
மாண்டிடும் உடலது மண்ணுடன் போமோ?
தாண்டாத் தீயினுள்,தகனமென் றாகுமோ ?
சீண்டித் தாண்டுதல் சண்டியர் வழக்காம்.
கூண்டுக் கிளியெனில்,தாண்டுதல் கனவே!
மீண்டிடும் மறுவழி தாண்டுதல் கலையே,
பாண்டி ஆட்டம் புகட்டிடும் தாண்டலாம்.
ப.சந்திரசேகரன்.
No comments:
Post a Comment