Thursday, May 21, 2020

மனம்

மனமொரு கருவறை;
பலநூறு சிந்தனைகள்
பரவசத்தில்  பிரசவிக்க!
மனம்  ஒரு நிலைக்கண்ணாடி 
மனசாட்சி நொடிப்பொழுதும் 
முன்னின்று முரசொலிக்க! 
மனமொரு சத்திரம்;
மற்றவர் சோகம் 
மடிசாய்ந்து இளைப்பார!
மனமொரு ஆலயம்;
ஏற்றமிகு எண்ணங்களை,
கரங்கூப்பி  தொழுதிட;
மனமொரு சிறைச்சாலை;
அதிர்வுறும் ஆசைகளை, 
அதிகாரம் அடைத்துவைக்க; 
மனமொரு வணிகச்சந்தை; 
கருத்துக்களை மதிப்பிட்டு,
கணக்குரைத்து  விலைபேச!
மனமொரு செவ்வானம்;
எதிர்வாதம் சினம்கொண்டு,
எரிச்சலுடன்  எழுந்தருள.
மனமொரு  மலர்ப்பூங்கா;
கொத்து கொத்தாய்,
மகிழ்ச்சிமரம் பூத்துக்குலுங்க.
மனமொரு மயானம்;
வெறுமை வேரூன்றி,
விரக்தியில்  கொக்கரிக்க.
பிரம்மாண்ட விசாலத்தில்,
பெரிதுவக்கும் மனமிங்கே,
பிரபஞ்சத்தின் பிரதிபலிப்பே! 
                          ப.சந்திரசேகரன் .  

3 comments:

  1. ம....மொரு ஆலயம் . அருமை

    ReplyDelete
  2. ம.....மொரு ஆலயம் . அருமை

    ReplyDelete
  3. ...... மனம் ஒரு மயானம் வெறுமை வேர் ஊன்ற... வெறுமை யின் பிரதி பலிப்பு தானே பிரம்மாண்ட பிரபஞ்சம்?... சித்தம் சிவனின் இருப்பிடம் ஆகும் போது தோன்றும் முதல் நிதர்சனம் இது வாகத்தான் இருக்கும். வாழ்த்துக்கு வயது ஒரு தடை அல்ல. மனதை தொட்டு விட்டால் இப்போ பிறந்த குழந்தை கூட அதன் மொழியில் வாழ்தியே தீரும். வாழ்க சார் உங்கள் புலமை.... வளர்க சார் உங்கள் வயதும்....

    ReplyDelete