Friday, April 10, 2020

கூட்டுக்குள் சுருண்டு

சூரியனைச் சுற்றியே சுருண்டதோ பூமி? 
காரியங்கள் கசந்திட,கதவடைத்த சாமி! 
ஊரடக்கி தேரறுத்த,உலகழிக்கும் கிருமி; 
பாரில் பரிதவிக்கும்,மனிதகுலம் விம்மி.

பூத்ததும்,காய்தததும்,கனிந்ததும் காய்ந்து, 
சேர்த்ததும் சுருட்டியதும் சுனங்கித் தேய்ந்து,
பார்த்ததும் கேட்டதும்,பயத்தினில் மாய்ந்து
காத்திருக்கும் காலம்,தன்தோளில் சாய்ந்து. 

யாருக்கு நாளையிங்கே,யாரறிவர் போக்கு? பேர்சொல்லி கயிறுழுக்கும் காலன் கணக்கு!
மாரியம்மன் பூச்சொரிதல் மனதினில் தேக்கு; மாறிவிடும் சூழலிலே,மறுவழியை நோக்கு.  

ஆத்திகனும் நாத்திகனும் ஆறறிவை அளந்து,
ஆத்தம் போற்றிடுவர் அவரவர்க்குள் ஆழ்ந்து; பாத்திகட்டும்  பகுத்தறிவும்,பக்திப் பரவசமும், 
கூத்துகள் இரண்டெனினும்,கூட்டுக்குள் ஒன்றே! 

குறிப்பு:-
ஆத்தம்- நட்பு,நெருக்கம்
ப.சந்திரசேகரன் . 

No comments:

Post a Comment