Tuesday, July 30, 2019

அத்திவரதா !

அத்திவரதா!
காஞ்சியில் உன்னைக் காண வரதா
கால்கடுக்கக் காத்திருந்து சுத்தி வரதா?
அன்பால் வரதா?உன்பால் வரதா?  
என்பலம் இறுக்கி இன்றே வரதா? 
திருமால் வரதா,திருவரங்க நாதா, 
அயனத்தில் நீரில் நீகிடந்த போது, 
புயல்கூட உன்பேரில் இங்குண்டு வரதா. 
துரும்பிலும் தூணிலும் தோன்றிடும் வரதா, 
நீரில் உன்சயனத்தில் நாற்பது ஆண்டுகள்  
பேருக்கு உன்னை பதிந்தவ ருண்டோ 
ஊருக்குள் நீவர,ஊர்ப்பலக் கூடி, 
ஊர்ந்திடும் எறும்பென வருகுது வரதா. 
வரிசையில் கூட்டத்தில் நான்கூட வரதா?
பெரிதாய் நசுக்கிடும் நெரிசலில் வரதா?
பரிவுடன் என்நிலை புரிவாய் வரதா! 
விரைவாய் உன்னை தரிசனம் செய்யவே 
பரிந்துரைச் சீட்டு பெறவில்லை வரதா.  
அரிதாய்க் காட்சிகள் அளித்திடும் வரதா, 
புரிதல் கொண்டநின் திருத்தாள் பணிந்து, துரும்பையும் தூணையும் சுற்றுவேன் வரதா. 
நீராழ்ந்த வரதா! நிலம் நின்ற வரதா! 
சீராக எம்வாழ்வை வைத்திரு வரதா!
பேராசைப் பெருசாகி போராளும் மண்ணில்,  
தீராதப் பகைத்தீயை நீர்த்திடு வரதா.
வீரமுடன் வாய்மைதனை வேரூன்றச் செய்து 
நீரோடு நிலமனைத்தும் காத்திடு வரதா !
                                                   ப.சந்திரசேகரன். 

2 comments: