Tuesday, April 30, 2019

ஈடிலா மேதினம்

உடலின் உழைப்பு மனமே அறியும்;
கடலின் அலைகளை அறியும் கரையென!
படைகள் பலவென ஊர்ந்திடும் எறும்பினை
இடங்கண் டறியுமோ யானையின் விழிகள்?
அடங்கிடும் எளியோர் அவர்தம் உழைப்பு,
உடனிருந் தறிவரோ உலகாள் பவர்கள்?

இடைவிடா உழைப்பின் இயக்கம் பற்றிடின்,
படிகள் பலவும் கடந்தவர் பலரின்,
தடைகள் தகர்த்த கதையது விளங்கும்.
படித்தவன் உழைப்பும் பாமரன் உழைப்பும்,
உடையாய்,உணவாய்,உறங்காக் கனவாய்
எடைகள் கூட்டுமாம் எங்கும் எதிலும்!

விடைகள் காண்பது வினாக்கள் மட்டுமோ?
விடா முயற்சியும் விடைகள் வழங்கி, 
கெடா உழைப்பென காட்டுமாம் இலக்கு. 
கொடிகள் இங்கே ஆயிரம் உண்டு;
கூடிடும்  கரங்களின் உழைப்பின் கொடியே,
ஈடிலா மேதின ஈர்ப்புக் கொடியாம்! 
ப.சந்திரசேகரன் .  

No comments:

Post a Comment