Saturday, April 13, 2019

வாசலில் வெளிச்சம்


   {இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்}. 

மாதங்களில் முதலாகி மகிழ்ச்சியை மழையாக்கி
மாசறு சிந்தனையின் மாட்சிமை பெருக்கிடவே,
சோதனையின் வெப்பத்தில் சுருங்கிடா செயல்பெருக்க,
வாசலில் வெளிச்சமென வந்திடுமாம் சித்திரை!

காத்திருந்த நன்மைகள் காலத்தில் கனிந்துவர 
நேசத்துடன் நெஞ்சிணைய நெருங்கிவரும் சித்திரை; 
பூத்ததோர் மலரெல்லாம் பூரிப்பைத் றுவதுபோல் 
பேசுவதும் பழகுவதும் பெரிதுவக்கும் சித்திரை! 

சாத்திரத்தின் சாகசமும் நாத்திகத்தின் நூதனமும் 
ராசியென ஆற்றலென ஊற்றெடுக்கும் சித்திரை; 
ஆத்திரமும் வசைமொழியும் தேர்தலென்று திரண்டுவர, 
தேசமெலாம் மறுமலர்ச்சி காணவைக்கும் சித்திரை!

ராத்திரியும் பகல்பொழுதும் ராகங்களில் சங்கமித்து  
வாசமுடன் வளங்கொழித்து,வாழ்வளிக்கும் சித்திரை.
வேதனையின் வீச்சினிலும்  வேட்கையுடன் வாழ்ந்திடவே,
ஆசிகள் அணிவகுக்க அரவணைக்கும் சித்திரை! 
ப.சந்திரசேகரன் .   

No comments:

Post a Comment