Thursday, February 21, 2019

கூட்டணிக் கும்மாளம்.

"ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன"
அழகாகச்  சொன்னார் 
அமரர்  ஜெயகாந்தன்.
அரசியல் கூட்டணியில்,
கூடா நாற்காலிகள், 
கூடிக் குலாவுகின்றன.
வடிவேலுக்கு திரைப்படத்தில்,
காலையில் நல்லவாய்;
மாலையில் நாவாய்.
அரசியல் கூட்டணியில்
அன்றாடம் ஒருவாய்;
வேண்டுவதோ வருவாய்.
தேக்குமரக் கதவில்நின்று
தேள்போலக் கொட்டுவதும்,
வாக்குவங்கி கணக்கில்வைத்து,
வாக்குகள் மாறுவதும்,
வட்டமேசைக் கும்மாள
வாடிக்கை நிகழ்வுகளாம்.
சொல்லைக் கல்லாக்கி
சொடக்குப் போட்டுவிட்டு,
பல்லை பரிகசித்து,
பருவமழை பொழிந்திடுவர்!
கைக்கொடுத்துத் தழுவுகையில்,
வைததெல்லாம் துடைத்திடுவர்.
தேர்தலின் தேடுதலில்,
ஊர்திகள் பலவாகி,
வலம் வருவோர் வாக்கினிலே,
வத்திப்பெட்டி நிறைந்திருக்கும்.
நேற்றுத் திட்டியவரை,
போற்றிப்புகழ்ந்திடினும்,
மாற்று அணியினரை,
தூற்றிக் கொளுத்திவிடும்
கூட்டணித் தீக்குச்சி!
யார்வீடு எரிந்தாலும்,
எனக்கிங்கே நாற்காலி.
போர்வீரன் போல்பேசி,
பொய்வணிகம் செய்வதுவே,
கூத்தாடக் கொடிசேர்க்கும்
கூட்டணிக் கும்மாளம். 
ப.சந்திரசேகரன் .        

No comments:

Post a Comment