Thursday, November 7, 2019

தகர்ந்திடும் முடிச்சுகள்

சகமும் சகிப்பதே
யுகம்நிறை  அறம்; 
சகதிகள் கடப்பதே, 
பகைவெல்லும் பலம்.
அன்பெனும் சாலையை 
அகலமாய் அமைத்து, 
ஆழ்மனம் விரிந்திட, 
ஆற்றலாய்க் காண்பது,
ஆலமர நிழலே! 

புகலிடம் படர்ந்து 
பூரிப்புத் தருகையில், 
புத்தியில் பதிவது 
புத்தனின் போதியாம்.
சுகம்தரா சொந்தங்களின் 
சூழ்நிலைச் சூடுகள், 
மிகைப்படப் புரிவது, 
அறிவின் அதிர்வுகள்

சுகமொரு சறுக்குமரம்; 
சிகரம் தொட்டு, 
சீக்கிரம் சரியும். 
சோகமொரு சுருள்கத்தி; 
வேகமாய்ச் சுழன்று
வீழ்த்திடும் மனவுறுதி. 
அகத்தினில் ஆசையின் 
ஆயிரம் வளைவுகள்; 
எகிறுமோ எதிர்படா  
மனதின் இறுக்கம்? 

முகிலை முட்டுதல் 
முயற்சிச் சான்றிதழ்.
திகைப்புகள் தாக்கிட, 
திணறிடும் துடிப்புகள்; 
திகம்பரம் இலக்கெனின், 
தகர்ந்திடும் முடிச்சுகள். 
அகலாத தொன்றும் 
அகிலத்தி லில்லை; 
மகப்பே றென்பதே, 
மரணத்தின் வில்லை!
                                       ப.சந்திரசேகரன் . 

No comments:

Post a Comment