Tuesday, November 26, 2019

முற்றுகை

வெற்றிலை சுண்ணாம்பு மென்சீவல் வாயிலிட்டு, 
குற்றமிலா பொழுதுகளை குணங்கமழ சுவாசித்து, 
வெற்றிடத்தை விருந்தோம்பல் விதவிதமாய் நிரப்பிடவே,
சுற்றமெல்லாம் சூழ்ந்துநின்று  சுகம்சேர்த்த காலமுண்டு. 

நெற்றியில் திருநீரின் வெண்மையின் பரிசுத்தம், 
முற்றத்தின் வெளிச்சமென முழுமனதில் பளிச்சிடும்!
உற்றதுணை அத்தனையும் ஊற்றுநீர் பெருக்கெடுக்க,
கற்றதெல்லாம் நன்மைகளே,காலம்தந்த பாடமிது. 

வற்றாத நதியெனவே நம்பிக்கை வழிந்தோட, 
சற்றும் சரிந்ததில்லை,சங்கடங்கள் தாக்கையிலே; 
நற்றமிழ்ச் சுவையெனவே நாற்புறமும் நண்பர்களே!
நற்றிணை அகமாகின் நானூறும் புறமன்றோ!

பொற்றாமரை குளம்தன்னில் சூடழிக்க சிவன்தள்ளி, 
பெற்றதமிழ் பெரிதுவக்க கீரனைக் காத்ததுபோல், 
ஒற்றுமையை உணவாக்கி உண்டு வளர்ந்தோரே, 
முற்றுகையை அரணாக்கி முதிர்நட்பின் முமாவர்.

ஒற்றருக்கு ஒளியும்வழி;ஒற்றுமைக்கு ஒளியேவழி;
சிற்றூரும் பேரூரும் சிதறாமல் சேர்ந்துநின்று 
வெற்றிவழி வரையறுத்து,வீதியெங்கும் முழக்கமிட, 
மற்றவழி மறைந்திடுமே,ஒற்றுமையின் முற்றுகையில்! 



ப.சந்திரசேகரன் . 

1 comment: