Wednesday, October 9, 2019

வரிகள்.

உழைப்பு ஒரு ஊமை;
உருகுதில் தாய்மை.
வாய் திறந்தாலும் 
சொல்பிறக்காது;
வரிகள் விழுந்து
மரத்துப்போயினும்,
வலிக்கும் வரிகளால்
வாடிப் போவதில்லை!

பணம் பண்ணுவோர்க்கு
வழியெல்லாம் சவாரிக்கு, 
வரிசையில்,வரிக்குதிரைகள்
நெடிந்துயர்ந்த நிறுவனங்கள்
நெஞ்சு நிமிர்த்தலாம்;
குனிந்தே கூன்விழுந்து,
குடியுயர்த்தும் நெஞ்சிற்கு,
உழைப்பே சீதனம்.
வரியே விழும் தினம்.

கவிதையின் வரிகள்
வரிக்குவரி,பொருளுயர்த்தும் .
உழைப்பின் வரிகள்,
உழைப்புருக்கி உலகுயர்த்தும்.
தலைக்குமேல் வெள்ளமெனில்,
முழங்கூட சான்தானே!
பிறருயர வரியேற்கும்
பெருஞ்சுமையில் உழைப்பு,
வாய்மூடிக் கிடக்கையிலே, 
முட்டிநிற்கும் வரிகளெல்லாம், 
மொழியுயர்த்தும் கவிதைகளே
                                       ப.சந்திரசேகரன். 

No comments:

Post a Comment