{Mahatma remembered is Mahatma honoured}
தேசம்தோள் துண்டாக,
நேசத்தின் நிசமானாய்!
வாளேந்திய வீரனில்லை;
வானுயரப் போரிட்டாய்.
உனக்குள்ளே நெறிகொண்டு,
ஊர்வெறியை நீ வென்றாய்.
சத்தியத்தின் கிரகமாகி,
சத்தியாக் கிரகம்செய்தாய்!
வேதனையும் சோதனையும்,
வேள்விகளாய் உனைப்பற்ற,
மனிதம் தழைப்பதற்கு,
மனிதனாய் வாழ்வதொன்றே,
மரபெனும் மகத்துவத்தை,
மானுடம் மசியச்செய்தாய்!
எளிமையில் ஏற்றம்கண்டாய்;
ஏழ்மையின் ஏகாந்தமானாய்!
போரின்றி போராட்டம்,
உள்தொடங்கி உலகம்வரை,
நீநின்று நடத்திவைத்தாய்!
சுயநலமே தந்திரமாய்,
சுதந்திரத்தின் குரலுயர்த்தி,
கொன்றோர்க்குத் துதிபாடி
வென்றதே அவர்களென்று,
வீண்வெண்பா படைத்திடுவர்!
நீ சென்றவழி குறைகூறி,
வாய்மைக்குத் திதியிடுவர்.
வரலாறு மாற்றுகையில்,
மகான் நீயாமோ?
பாமரன் நெஞ்சமெல்லாம்
மாமனிதன் நீயாக,
மகான் எனுஞ்சொல்,
மருவிவரும் அடைமொழியே!
ப.சந்திரசேகரன்.
அருமை
ReplyDelete..............."பாமரன் நெஞ்சமெல்லாம்
ReplyDeleteமாமனிதன்...."புதிய கோணத்தில் பிறந்த இன்னுமொரு பொருத்தமான புதிய பெயர் நமது தேசப் பிதாவுக்கு...- மாமனிதன். Well said Sir.