Tuesday, August 20, 2019

அத்திவரதர் கணக்கு.

வரதா!
வரவுக் கணக்கைப் பார்த்தாயா?
வந்தவர் எத்தனை? 
வந்தவரில் தந்தவர் எத்தனை? 
தந்தவர் தந்தது எத்தனை ?
தந்தது எல்லாம், 
உன்கணக்கில் வந்ததா?
நிலத்தில் நீ நின்றபோது,
பலர் பலத்தை நீ அறிந்திருப்பாய்!
பலத்தாலும் நலத்தாலும்,
பலர் உன்னை பார்த்திருப்பர்.
இலக்கு என்று ஒன்றுமில்லை 
எண்ணிக்கையில் உனக்கு!
எண்ணங்களில் மட்டுமே
வீற்றிருக்கும் நீ,
உன்னைப்பற்றி எண்ணுவோர்க்கே
அளிப்பாய் முன்னுரிமை.
எண்ணியது எவ்வளவென்று,
எண்ணியவரே அறிவர்!
உன்னை பற்றி எண்ணியவர்க்கு,
எண்ணங்களால் ஏற்றம்; 
எண்களால் அல்ல!
எண்ணியவர்,
எண்ணிமுடித்ததும் அளிப்பர் கணக்கு.
உன்னை எண்ணியே நின்றவர்க்கு ,
எண்ணங்களில் கணக்கில்லை.
நாற்பது வருட கணக்கு, 
நாற்பத்து எட்டு நாளில்;
நாற்பத்து எட்டுநாள் கணக்கை 
எண்ணவே,மீண்டும் உனக்கு
நாற்பது வருடமோ?
எட்டாக் கணக்கொன்றும்,
உன் பட்டியலில் இல்லை.
எட்டாமல் நின்று 
உன்னை தரிசித்தோர்க்கு,
நாற்பதும்,நாற்பதோடு எட்டும் ஒன்றே!
நீரில் நீ சென்றவுடன். 
ஊரில் மிஞ்சுவது,
நாற்பத்து எட்டு நாட்களின் 
வரவுக் கணக்கே!
உன் பிரதானக் கக்குப் படிவத்தில்,
எண்ணிக்கை கூட்டுவது,
வந்தவர்களோ?
வந்தவர்களில் தந்தவர்களோ?
தந்தவர்கள் தந்ததோ?
எண்களையும்,எண்ணங்களையும்
எண்ணிக் கூறுவாய் வரதா!
ப.சந்திரசேகரன். 

1 comment:

  1. தந்தவர் தந்தது எத்தனை ?
    தந்தது எல்லாம்,
    உன்கணக்கில் வந்ததா?

    Touching Sir...

    ReplyDelete