{இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்}
கதரும் எளிமையும் காந்தியின் காலம்;
முதிர்ந்தநல் அறிவே நேருவின் கோலம்.
எதிர்ரெதிர் அணியில் இருந்தவர் கூட,
உதிர்த்தனர் அன்று உயரிய சொற்கள்.
குதிரில் நெல்லென கூடிய உறவினில்,
அதிர்வுக ளெல்லாம் அன்பின் ஓலியே!
பதறிடும் பரிவும் பகையிலா நெறியும்,
எதிரியை ஏற்கும்,ஏழ்மைக் காந்தியாம்.
எதிர்மறைச் சிந்தனை இறுக்கித் தாக்கிட,
செதிர்க்கா யெனவே சிதறிச் சிதைந்து,
உதறித் தள்ளும் உண்மையின் உறவை!
கதறிப் பிரியுமாம் சிறகினைப் பறவை.
கதரே கதரில்,கறைகளாய்ப் படிதலும்,
புதரில் பாம்பென சீரிடும் சிறியோர்,
சதுரங்கம் ஆடி சரித்திரம் மாற்றலும்,
அதிரடி வேட்டை அரசியல் களமாம்!
ஒதியமாய் வளர்ந்து உத்திர மற்றோரும்,
மதில்மேல் பூனையாய் மனம் மங்கியோரும்,
எதிர்த்து நின்றோரின் ஏட்டினை மறைப்பது,
கதிரவன் ஒளியை திரையிடும் திருட்டாம்.
இதர இனத்தையும் இணைத்து நின்றது
கதருடன் காந்தியின் கருணைக் காலம்.
மதத்தினால் இன்று மதில்கள் எழுப்பி,
சுதந்திரக் காற்றை முடக்கிடும் கோலம்!
No comments:
Post a Comment