Monday, August 12, 2019

கதைகள்

கதைகள் !
தொடங்குவது எப்படி?
காலக் கோலங்களில் 
சுழிபோட்டுத் தொடங்கிட,
தொடருவதோ வரலாறு.
ஓலக் குரலெழுப்பி 
பழிபோட்டுப் படைத்திடின்,
புறங்கூறும் அரசியல்!
திடீரெனத் தொடங்குதல்,
திகில் கதையின் முகவரி.
இடையிலே துவங்கிடின்,
பின்னோக்கிப் பயணமுண்டு.
வயல்வெளி வரிகளிலே
வார்ப்பதுவோ வேளாண்கதை.
கயல்விழிப் பார்வையிலே 
கற்பனையில் கடலலையாய்,
கனவுகளின் கதிர்வீச்சில், 
காதல்கதை அரங்கேறும்! 
அதிர்வுகளாய் அணிவகுக்கும்
ஆழ்மனதின் உணர்வுகளில்  
சூழ்ந்திழுக்கும் சுமைகளை, 
சேர்த்துவரும் சோகக்கதை.
மின்னலுடன் இடிபோல 
பின்னிவரும் காட்சிகளில், 
விறுவிறுப்பாய் பவனிவரும் 
குற்றப்புலன் விசாரணை 
கூறவரும் கொடுங்கதைகள்! 
சமூகப் பிரச்சனையில் 
சாதிமதம் சாட்சிசொல்ல, 
அமோகக் கதையாகும் 
ஆயுள்வரை அனுபவிக்க! 
அறிவியல் கதைகளுண்டு; 
ஆன்மீகத் தேடலுண்டு. 
புராணக் கதைகள்கூட, 
புதுப்பதிவு பார்ப்பதுண்டு
பாண்டவரும் கௌரவரும், 
பாதைகள் மாறுவதாய் , 
மீண்டுமொரு இதிகாசம் 
காண்டம்பல காண்பதற்கு, 
தூண்டும் கற்பனையில் 
ஈண்டுக் கதையுண்டு. 
கருவுற்ற கதைகள்பல 
திசைமாறிப் போகையிலே,
தெருவுக்கு தெருவிங்கே 
தோன்றிடுமாம் தொடர்கதைகள்!  
                              ப.சந்திரசேகரன். 

No comments:

Post a Comment