Tuesday, August 27, 2019

பிரியம்

பிரியம் கூடிட'பிரியோம்' என்பர்!
'பிரியோம்'என்றதும் பிரிதல் கூடுமாம்!
அரியதோர் பிரியம் அம்மா மடியினில்;
பிரியமிலாத் தாய்மடி,பிரிவின் முதற்படி .
விரியா மனமது தாய்மைக்கும்  உண்டாம்!
புரியா பிரியம் காதலின் முகவரி;
புரிந்தபின் பிரிவது,பிரிவின் முகவுரை.
பரிவிலா உறவில் பிரியத்தின் காயம்; 
பிரிந்திடும் உறவில்  பொய்கதை மாயும். 
உரியதோர் பிரியம் நட்பின் நடப்பு;
நரியின் சூழ்ச்சியில் நட்பது,நடிப்பு.
கரையா நட்பு கடலுக்கு குள்ளே,
அரித்தல் அறியா அன்பெனும் பாறையாம்.
தரையில் நின்று வானதைப் பார்க்கையில்,
திரைகடல் கடந்திடும் தெளிந்த பிரிவாம்! 
தூரத்து நிலத்தை வானம் தொடுவது,
திரைகள் மறைத்திடும் பிரிவின் கதையாம்!
புருவம் விரிந்திடும் பிரியத்தின் சாலையில் 
தெருவின் கோணலாய்ப் புருவம் சுருங்கிடின் ,
பிரிவெனும் விபத்து தாக்கிய நிகழ்வாம்!
புரிந்ததும் பிரிவது புத்தியின் பரிந்துரை;
பிரிந்ததைப் புரிவது பிரிதலின் நடைமுறை.
பிரியாப் பிரியம் பூமியில் இல்லை;
பிரியம் கொள்ளலே பிறப்பின் எல்லை. 
                                                    ப.சந்திரசேகரன். 

3 comments:

  1. Very nice. But to understand neraya time eduthadhu.

    ReplyDelete
  2. பிரியமிலாத் தாய்மடி,பிரிவின் முதற்படி .
    விரியா மனமது தாய்மைக்கும் உண்டாம்!
    .......classic Sir

    ReplyDelete