கதவுகள் காணாது,குடியேறும் பிசாசு;
பதவிகள் பணிக்க,எடைக்காட்டும் தராசு.
மிதமிஞ்சிக் கிடந்தால் மிட்டா மிராசு;நிதம்கொள்ளை யடித்தே நிமிர்ந்திடும் சிரசு.
குவித்திடும் கோடிகள் கூப்பிய கரங்களில்;
தவித்திடும் தரித்திரம் நீட்டிய கரங்களில்.
அவித்திடும் நெல்லினில் அகப்படா அரிசிபோல்,
பவித்திரம் காண்பரோ பண்படா பணத்தினில்!
பசுக்களின் மடிதனில் படர்ந்திடும் பாலும்,
அசுத்தமாய்க் கறந்திட அடர்த்தியைத் துறக்கும்.
இசைபட வாழ்தலும் ஈதலும் மறந்தோர்,
பசைபோல் ஒட்டி பணத்துடன் உறங்குவர்.
விசையினைப் பொறுத்தே காற்றாடி வேகம்;
தசையினைப் பொறுத்தே தடித்தோர் தேகம்.
அசையாச் சொத்தென,அரண்மனைக் கவசமென,
திசைப்பல கடந்திடும் காசின் கரவொலி,
வசதியைக் கூட்டி உழைப்பினைக் கழித்து,
அசதியைப் பெருக்குமாம் ஆண்டவன் செவிக்கு!
பிசுக்கிய காசெனும் பதுக்கிய பூதம்,
பசியின் கொடுமையைப் பழித்திடும் வேளை,
கசியுமோ நன்மைகள் கடுகள வேனும்?
விசித்திரம் போற்றும் விடுகதை வாழ்வில்,
ரசித்திடும் அனைத்திலும்,ராட்சசக் காசே !
ப.சந்திரசேகரன் .