Friday, March 1, 2019

நான் ஒன்றும் புத்தன் அல்ல.

போர் வேண்டாம் எனச் சொல்ல, 
நான் ஒன்றும் புத்தன் அல்ல; 
குடியைக் கோடிட்டு 
குறிவைத்துத் தகர்ப்பவர்கள் 
குருதியைக் குறிவைத்து 
குணமின்றி குடிப்பவர்கள்,
தீவிரமாய்த் தாக்கியதால் 
திக்கற்றுப் போனதிங்கே, 
தேய்பிறையாக்  குடும்பங்கள்! 
தீவிரத் தாக்குதலை,  
திமிறித் தணல் கொட்ட 
தேடிப்போவதெங்கே? 
தேடிப்போகுமிடம் 
தேடும் இடம்தானோ? 
தேடித் தகர்த்தாலும் 
குறிவைத்துத் தகர்த்தேனோ 
வைத்தது குறிதானோ? 
பாடும் கவிதைக்குள் 
பகலெல்லாம் இரவாகின், 
இரவின் இருளில் 
எதைத்தான் தேடுவதோ? 
போர் என்னும் பூதத்தின் 
வேர் என்றும் விடுகதையே! 
மூவேந்தர் காலமுதல் 
முடிசூடா மன்னர்தம் 
மாவீரக் காலம்வரை,
மாயுத்தம் மனநோயே. 
காவல் விதிகளுக்குள், 
போரெனும் கார்மேகம்,
மூள்வதன் முன்னோட்டம் 
காண்பது கானல்நீரே;  
போரென்றும் பொதிச்சுமையாய் 
மார்பினில் வலித்திடும்  
பாவத்தின் பழிச்சுமையே! 
காரணங்கள் பலகூறி 
காயங்கள் ஏற்படுத்தும் 
போர்களின் புதுச்சசாயம், 
ஆள்பவரின் ஆழ்மனதின் 
ஆங்காரக் கறையே. 
பாரினில் மக்களென்றும் 
பரவலாய்ப் போற்றுவது 
ஊர்க்கூடி வலம்வரும் 
அமைதியெனும் தேரே!
ப.சந்திரசேகரன் .      

2 comments:

  1. அருமை .வாழ்த்துகள். இது சரியான பார்வை

    ReplyDelete