Sunday, March 10, 2019

குத்துமதிப்பா ! !


             {ச்சும்மா மனச லேசாக்க}

கட்ட பிரம்மச்சாரின்னா கட்டையா இருப்பாரோ 
ப்ப ஒசரமான பிரம்மச்சாரிக்கு எதிர்ப்பதமோ? 
எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் சொன்னாள் அம்மா.
நான் என்னை,தேய்த்துக்குளித்தேன்.
"இரு! நாளைக்கு  வச்சிருக்கேன் உனக்கு கச்சேரி "
என்றான் நண்பன்
"எந்த மேடையில்?"என்றேன் நான்?
சொன்னதும் நண்பனின் முகத்தில் 
எள்ளும் கொள்ளும் வெடித்தாலும், 
அதனால் முகத்தில் பாதிப்பேதுமில்லை.
கச்சேரின்னு  சொன்னதுந்தான் நினைவுக்கு வருது. 
"நேத்து கச்சேரியில பாடுவர் 
சும்மா பின்னி எடுத்துட்டார்னார் ஒருத்தர்" 
பாடகர் எதை பின்னுனாரோ,எதை எடுத்தாரோ, 
எனக்கு ஒன்னும் தெரியல.

"அவனை உண்டு இல்லைன்னு பண்ணப்போறேன்"
 என்றார் எதிர்வீட்டு ஏகாம்பரம்.
"உண்டா? இல்லையா? 
ஒரே நேரத்தில் எப்படி அது முடியும்?"
என்பதே என் கவலை.
அம்பாளைப் பார்த்து, 
"மூச்சுக்கு முன்னூறுதரம்
உன்பேரதானம்மா உச்சரிக்கிறேன்"
என்றார்  அப்பா.
"ஒருமூச்சுக்கா?,
நம்பமுடியலையேப்பா"
என்று முணுமுணுத்தேன் நான்.

"பத்து பாத்திரம் தேச்சாவது
வயித்த கழுவிக்குவேன்"
என்றார் பக்கத்து வீட்டு பாட்டி.
"மிச்ச பாத்திரத்தை யார் தேய்ப்பா பாட்டி?
நீங்க வயித்த மட்டுந்தான் கழுவுவீங்களா
மேலுக்குக்கூட குளிக்கமாட்டீங்களான்னு" கேட்டப்போ 
பாட்டி "செருப்பு பிஞ்சுடும்"னா
"ஐயோ என்ன பாட்டி,இப்பதானே
உங்க புள்ள வாங்கி கொடுத்தான்னு" சொன்னேன்.
பாட்டியின் கண்ணில் அனல் பறந்தது.
"ஆமாம் அது எப்படி அனல் பறக்கும்?
அதுவும் கண்ணில்?
ஹூம்! என்னத்ததான் பேசறதோ
என்னதான் புரிஞ்சுக்கறதோ! 
ஏதோ குத்துமதிப்பா புரிஞ்சுக்கவேண்டியதுதான். 
ஆனா ஒரு குத்துக்கு எவ்வளவு மதிப்புன்னு, 
பார்த்திபனையும் வடிவேலுவையுந்தான் கேக்கனும்'' 
ப.சந்திரசேகரன் .      

No comments:

Post a Comment