Tuesday, September 11, 2018

புதுசாக வருவதெல்லாம்

அதிசயமாய் அன்றாடம்  புதுசாக வருவதெல்லாம்
பழசாகி பழமைக்கு, பலம்கூட்டும் படைப்பலமே! 
எதுசரியோ எதுத்தவறோ எனப்புதுமைத் தவித்திட,
பழசென்னும் பெரும்பூதம் பரிகாசம் செய்திடுமாம்!
மதம்சார்ந்த பழக்கங்கள் வழக்குகளாய் மாறிடவே,
மழைசாரா மேகங்கள் மறுவழியில் போவதுபோல்,
அதிசாரப் புதுமைகள், அதிசியத்  தோரணத்தால் 
விழிமூடாப்  பழமைமேல் பனிமூட்டம் பதித்திடுமாம் .

மதிபோற்றும் நடைமுறைகள் வரலாற்றின் வழித்தடமே!

விழிசொல்லி மொழிசொன்ன, விசித்திரத்தில் புதுமை,
நதியாகி நெடுங்கடலில்  நாளைக்கோ மறுதினமோ,
நிழல்சாயும் கதிரவனாய் பழமைக்குள் படுத்துறங்கும்.
முதுமையொரு பழமையெனில்,இளமையெனும் புதுமை
எழில்கூட்டி  இசைவுடனே  முதுமைக்குள் முகங்காண, 
கதைகள்பல கரைபுரண்டு கனம்சேர்க்கும்  நதியினிலே, 
சுழலாகிச் சுற்றிவரும் க்தியெல்லாம் பழமைகளாம் .
ப.சந்திரசேகரன் .      


No comments:

Post a Comment