Sunday, July 1, 2018

போராட்டம் !

கைகோர்த்து தோள்சேர்ந்து,காலமெல்லாம் போராடி, 
மெய்சிலிர்க்கும் உணர்வோடு மிதமிஞ்சிக் குரலெழுப்பி,
உள்குத்தின் ஊர்வலத்தில்,உள்ளங்கள் ரணமாகி, 
கள்ளிச்செடி மணம்பரப்பும்  கனவுகளாம் போராட்டம். 

செய்கூலி சேதாரம்,பொன்நகையில் ஊர்க்கூட்டும்; 
தொய்வறியாத் துயரத்தின் தோரணமே போராட்டம். 
ஆள்காட்டும் விரல்கூறும் ஆதிக்கப் படைஎதிர்த்து
நாள்காட்டும் நடப்பாகி, நகருவதே போராட்டம்.

காளைக்கென போராட்டம்;காயும்பயிர் போராட்டம்; 
தாள்தந்து அலைக்கழிக்கும் தேர்வுக்கெதிர் போராட்டம்.
ஆலைக்கெதிர் போராட்டம்;சாலைக்கெதிர் போராட்டம்;  
வேலையின் வரம்பறியா,மீறலுக்கெதிர் போராட்டம். 

ஆள்பவர்க்கு தேரோட்டம்;எதிர்பவர்க்கு போராட்டம் 
தோள்களிங்கே மாறிடினும், தோற்றிடுமோ போராட்டம்?
கூலியுடன் உணவளித்து,வறுமைக்கு வேலைதந்து.
வேலையில்லாத் திண்டாட்டம்,போக்கிடுமோ போராட்டம்? 

                                                              ப.சந்திரசேகரன் .  



No comments:

Post a Comment