ஆறுக்குப் பஞ்சமில்லா அரும்பா ரதத்தில்,
நீருக்கு போரிடுவர் நெடுநெடுங் காலமாய்!
மார்தட்டி பலரும் மறவரெனக் குதித்தாலும்,
யார்தட்டி எழுப்பிடவோ உறங்கி நடிப்போரை!
சீரோடு வளங்கண்ட செந்தமிழ் நாட்டில்,
ஏரோடும் கழனியை கூறுகட்டி மனையாக்கி,
ஊரூராய் கட்டிடங்கள் உயரக் கண்டோம்.
வாராக் கடன்கூட வட்டியுடன் வந்துவிடும்.
தீராக் கடனாகி நின்றதுவே காவிரிநீர்.
வேரோடு சாயுதிங்கே வேளாண் கூட்டம்!
பாராளு மன்றத்தை பாழாக்கி முடக்காது,
பாராமல் புறக்கணித்த பாதாள நீரைநாம்,
கூரையின் நிழலாய் கூடிநின்று காப்போம் .
தாராளக் கடல்நீரை தரமுடன் நிலைமாற்றி,
ஏராள நீர்பெருவோம் எவரிடமும்கை ஏந்தாது.
ஆரத் தழுவிடும் அன்போடும்,மகிழ்வோடும்,
சீரும் செழிப்போடும் சித்திரையில் தேரிழுத்து,,
சேராச் சொந்தங்களும் சேர்ப்போம் சிதறாமல்.ப.சந்திரசேகரன் .
No comments:
Post a Comment