Sunday, April 1, 2018

உபதேசம்

உபதேச மில்லா தேசமிங் கில்லை ,
பரதேசம் கூட உபதேசம் உரைக்கும்;
உரசாத உண்மை  உணவாகப் பிசைந்து,
பிரசாதம் படைப்பர்,பிறர்க்கென மட்டும்.

வனவாசம் சென்ற ராமனும் அவன்தன்,
ஜானவாசம் கண்ட சீதையும் அறிவாள்,
மனமோசம் நொடியில் மதியைக் கடத்தி,
சிறைவாசம் வைத்த, சறுக்கிய  சலனம்.

சகவாசம் தோற்று சகதியில் விழுந்திடின்,
சிரம்கூசும் செயல்கள் சந்ததி பழிக்கும்.
பரிகாசம் காணும் பழிபாவ மனைத்தும்,
மண்வாசம் மாற்றி மடமைகள் சேர்க்கும்.

பரிசென பிறர்க்கு போதனை அளிப்போர்,
பரிசோ திப்பரோ பழுதடைந்த  தம்முதுகு? 
அரசனும் ஆண்டியும் அவரவர் அளிப்பரே,
உசுப்பிடும் ஒருதலை உடனுறை உபதேசம். 
                                                                                    ப.சந்திரசேகரன் .  

1 comment: