Saturday, March 3, 2018

கம்பியில்லா நம்பிக்கை.{Wireless fidelity}.


கம்பியில்லா நம்பிக்கையில்,
காரணங்கள் காரியமாகின்றன;
காரியங்கள் கண்டங்களை,
கண்காணாது கடக்கின்றன.
வணிகத்தின் விசை இங்கே,
புதுப்புது விதைகளாகிறது.
இரவென்றும் பகலென்றும், 
இடைவேளைக் காணாது ,
ஆண்களும் பெண்களும்
கம்பியில்லா நம்பிக்கையில்,
பன்னாட்டு பெருவழியில்  
பகடை ஆடுகின்றனர்.
கோடிகள் புலம்பெயர,
குருட்டுச் சாலைகள்,
கடலுக்கப்பால் கடைவிரிக்க,
வெட்டுவதும் ஒட்டுவதும்
வினோதம் படைக்கின்றன;
நேரில் காணாமலேயே
பல நேர்க்காணல்கள்,
பதுங்கி பிரவேசிக்கின்றன.
கண்கட்டு வித்தைகளும்,
மூளைச் லவைகளும்,
புலன்களையும் அறிவையும்
வலைகளுக்குள் சிக்கவைத்து,
சந்தையில் சரக்காக்குகின்றன.
குறுக்கு புத்தியின் 
கோரப் பிடிகளிலே,
கம்பியில்லா நம்பிக்கை,
குற்றங்களின் கொம்புக்கு,
புதுச்சாயம் பூசுகிறது. 
மின்னணு வேகத்தில் 
காலமே  நாணமுற்று,
கடவுளின் முகத்திரையாய், 
கதைவடைத்து நிற்கிறது! 
                          ப.சந்திரசேகரன் .  

3 comments: