உருட்டுக் கட்டைக்கு உயிர்க்கொல்லி வேலை;
விரட்டும் லத்திக்கோ விதிமுடிக்கும் வேலை.
சுமையேறும் தோள்களுக்கு வலிசேர்க்கும் வேலை;
நமைச்சலுறும் நாவிற்கு வம்பிழுக்கும் வேலை.
அறம்போற்றும் அறிவிற்கு தலையாட்டும் வேலை;
புறம்நிற்கும் கால்களுக்கு காவல்நாய் வேலை.
விளக்கினுள் தீபத்திற்கு ஒளியூட்டும் வேலை;
வெளியேறும் காற்றிற்கோ வழியனுப்பும் வேலை.
மண்ணில் மழைத்துளிக்கு மகசூலே வேலை;
கண்ணீர் துளிகளுக்கு கவலைப்படும் வேலை.
வானத்து நிலவுக்கு தூதுசெல்லும் வேலை;
தேனீக்கள் செய்வதோ தேன்திரட்டும் வேலை.
கடலின் அலைகளுக்குக் கரையெட்டும் வேலை;
உடலில் மனதிற்கோ, ஊஞ்சலாட்டும் வேலை.
வேலையில்லா பலருக்கும் வேலைதேடும் வேலை:
வேலை கிடைத்துவிட்டால், வேண்டாத வேலை!
ப.சந்திரசேகரன் .
No comments:
Post a Comment